மனிதர்கள் உரிமைகளுக்காகக் காலந்தோறும் அமைப்புகளாகத் திரண்டு போராடுகிறார்கள்; வெற்றி
பெறுகிறார்கள். இன்றைய 2020 காலகட்டத்தில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இயக்கங்களுள்
குறிப்பிடத்தக்கவை: 'கருப்பின உயிர்களும் உயிர்களே' (Black Lives Matter) இயக்கமும், திராவிட
இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களைப் பற்றியும் இக்கட்டுரை ஒப்பிட்டு ஆய்கிறது.
அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்ட கருப்பு நிறத்தவர்கள், வெள்ளை நிறத்தவர்களால் வஞ்சிக்கப்பட்ட
வரலாற்றோடு, திராவிட மண்ணின் ஆதிகுடிகளான திராவிடர்கள், ஆரியர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றை
ஒப்புநோக்கி, அந்த வஞ்சகத்திற்கு எதிராகத் திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன் எப்படித்
தோன்றி, என்னென்ன சாதனைகள் ஆற்றியது என்பதையும், இக்கட்டுரை விவரிக்கின்றது. சமூக ஊடகங்களில்,
'கருப்பின உயிர்களும் உயிர்களே' இயக்கத்திற்கு ஆதரவாகத் திரண்டவர்கள், கருப்பினத்தவர்கள்
மட்டுமேயல்லாமல், மனிதநேய நாட்டம்கொண்ட வெள்ளை நிறத்தவரும் மற்றவர்களும் கூட ஆதரிக்கும்
போக்கினைச் சுட்டி, போலவே தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் சமூக ஊடகங்களில் பல
வகைப்பட்ட இளைஞர்களும் கொண்டாடுவதை இக்கட்டுரை கவனித்தில் கொள்கிறது.
தங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் படித்தறியும் கருப்பின இளைஞர்களின் உடல் மொழியைக்
குறிப்பிட்டு, போலவே சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்னும் இழிவு தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலையை
இக்கட்டுரை சுட்டுகிறது. திராவிடக் கருத்தியலுக்கு இன்றைய ஆய்வுகள் பெருந்துணை புரிவதையும்,
சிந்துவெளி நாகரிகம், கீழடி & மரபணுவியல் ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஆரியம்
விதைத்த ஜாதி எனும் திட்டம் ஒழியவேண்டிய தேவையை வலியுறுத்தி, காலந்தோறும் மாறி வரும் போராட்டக்
கருவிகளுள், இன்றைய போராட்டக் கருவியாகத் திகழும் சமூக ஊடகம் மூலமாக, இரு இயக்கங்களிலும்
நிகழும் அடுத்தகட்ட நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்க, இக்கட்டுரை தூண்டுகிறது.