தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் அரும்பெரும் கருவூலநூல் திருக்குறள் ஆகும். இன்று தமிழின் தனி அடையாளமாகவே மாறிவிட்ட திருக்குறளை, மதம் கடந்து, வாழ்வியல் நூலாக, தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்த வரலாறு, பெரிதும் திராவிட இயக்கத்துக்கே உரியது. அந்த வரலாற்றை, இந்த ஆய்வுக் கட்டுரை பல விரிதரவுகளோடு, விரிவாக ஆய்கிறது.
தொடக்கக் காலங்களில் பெரியார், கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைப் பலமாக எதிர்த்ததைப் போலவே, திருக்குறளையும் ஒருசில பிற்போக்குச் சிந்தனைகள் கொண்டிருப்பதாக எண்ணிச் சிறிதாக எதிர்த்தாலும், 1902-க்குப் பிறகு பா.வே. மாணிக்க (நாயக்கர்) அவர்களின் நட்பு கிட்டியதன் மூலமாக, பரிமேலழகர் உரைகள் வேறு, வள்ளுவர் திருக்குறள் வேறு என்று மூலநூலை நேரடியாக வாசித்துத் தெளிந்து, குறளின் மீது தான் கொண்டிருந்த முரண்பாடுகளைக் களைந்து கொண்டார் பெரியார்.
அன்றிலிருந்து திருக்குறளைத் தமிழ்ப் பொதுவெளியில் பரப்பும் முயற்சிப் படிநிலைகளாக, சொற்பொழிவுகள், தலையங்கக் கட்டுரைகள், அறிக்கைகள், குறள் மலிவுப் பதிப்புகள், திருக்குறள் மாநாடுகள் என்று எங்ஙனம் பலப்பல வழிகளில் கொண்டு சென்று, தொண்டு ஆற்றினார் பெரியார் என்பதைக் கட்டுரையின் முற்பகுதி விளக்குகிறது. குறிப்பாக, 1949-இல் பல தமிழறிஞர்களையும் ஒன்றுகூட்டித் திருக்குறள் மாநாடு நடத்தி, அதன் பயனாகத் ’திருக்குறள் - பகுத்தறிவு உரை’ புலவர் குழந்தை மூலமாக வெளியிட்டதையும், 1953-இல் குறள் மலிவுப் பதிப்பு வெளியிட்டு, விற்பனைச் சோதனைக்குப் பின், 6 அணாவிலிருந்து 4 அணாவாக விலை குறைத்து, இலாபம் கருதாது பெரியார் வெளியிட்ட திருக்குறள் சுத்தப் (செம்) பதிப்பு வரலாற்றையும் பதிவு செய்கின்றது. கட்டுரையின் பிற்பகுதியில், பெரியாருடன் இணைந்து பயணித்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்கள் செய்த குறள் பங்களிப்பினையும், அவர்கள் ஆற்றிய பல குறள் பணிகளையும் தரவுகளோடு ஆய்கின்றது.