பேரா. முனைவர். இ.கி. இராமசாமி
பேரா. இ.கி. இராமசாமி அவர்கள் கோவை வெள்ளலூரில் பிறந்தவர். 1969-இல் தொடங்கி 2002 வரை 33 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக, துறைத் தலைவராக, மதுரை யாதவர் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மேற்பார்வையில் நாற்பத்தியொரு பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஒன்பது பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். பகுத்தறிவுச் சிந்தனைச் சான்றிதழ், பட்டய வகுப்புகளை 25 ஆண்டுகள் நடத்தி, மாணவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர உதவியவர். இவர் தம் துணைவியார் மு.கசுத்தூரிபாய் அவர்களும் மதுரை யாதவர் கல்லூரி பயிரியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்; பகுத்தறிவுச் சிந்தனையாளர்.
தமிழில் பாயிரங்கள், திராவிட இயக்கச் சிந்தனைகள், தமிழின் சிரிப்பு, திருக்குறள் நெறியும் பகவத் கீதையும், காந்தியடிகளும் பாரதிதாசனும், காந்தியடிகளும் கோராவும், சமூகப் புரட்சியாளர்கள் போன்ற நூல்களின் ஆசிரியர் இவர். பாரதிதாசன் பன்மணித்திரள், முப்பாலின் ஒப்புரவு என்னும் நூல்களின் பதிப்பாசிரியர். குறள் கூறும் ஊழும் கூழும், திருக்குறளில் தவமும் துறவும், திருக்குறளில் காமம் என்னும் நூல்களின் தொகுப்பாசிரியர். இவர் இயற்றிய தொல்காப்பிய ஆய்வுக் களமும் தளமும் (2023), தமிழ் நெடும்பயண அறிஞர்கள் (2023), பகுத்தறிவு முத்துச்சரம் (2023) என்ற நூல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.
பணி ஓய்விற்குப் பின்னும் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து வரும் இவர், அரிய கருத்துக்களைச் சுவைபட மெய்ப்பாடுகளுடன் எளிய மொழிநடையில் எடுத்துரைக்கும் நாவன்மையாளர். மதுரை, திருச்சி வானொலிகளில் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சங்க இலக்கியம், காப்பியம், மரபிலக்கணம், இக்கால இலக்கியம் ஆகிய இலக்கிய வகைமைகளில் ஆய்வும் தோய்வும் உடையவர். தந்தை பெரியரின் கொள்கைவழி நின்றும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் உணர்வோடு ஒன்றியும் விளங்கும் பெருமைக்குரியவர். திராவிட இயக்க – இலக்கியக் கொள்கைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருபவர். தமிழியல் உணர்வுடைய, பகுத்தறிவுப் பார்வை உடைய மாணவப் பரம்பரையை உருவாக்கிய பெருந்தகையர்.