தமிழ் அகப்பொருளும் புறப்பொருளும் - பிறப்பகம் தமிழகமா? அயலகமா? (புனைவும், வினாவும், விடையும்) என்னும் இந்த ஆய்வுக் கட்டுரை, தமிழ் இலக்கிய நூல்களின் வரலாறு எப்படியெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்னும் ஆழ்ந்த அறிமுகத்தைக் கொடுக்கிறது. தமிழ் இலக்கிய நூல்களின் வரலாறு எழுதிய ஒரு சில அறிஞர்களையும், அவர்களின் மெய்யான நோக்கத்தையும் ஆழங்காற் பார்வையாகச் சுட்டுகிறது. 1985-இல் வெளிவந்து உலகெங்கும் பிரபலமான ஆராய்ச்சி நூல் - ‘The Ethos of Indian Literature: A Study of Its Romantic Tradition’ (இந்திய இலக்கியத்தின் பண்பாட்டு இயக்க நெறி-அதன் காதல் காம ஒழுக்க நெறி) என்னும் ஆய்வை எடுத்துக் கொண்டு, அந்நூலாசிரியர், அறிஞர் திரு. K.S. Srinivasan கூறியிருக்கும் ஆய்வுக் கருத்துகள் சரியா? என்று வினாக்கள் மூலமும், தரவுகள் மூலமும் இக் கட்டுரை ஆய்கின்றது.
நூலாசிரியர் சிரீனிவாசனாரின் (பிழையான) நோக்கம்: ”இந்திய மண்ணகத்தில், இந்தியப் பண்பாட்டகத்தில், இலக்கியங்களின் தோற்றத்தில் ஒருமை மட்டுமே உண்டு, பன்மை இல்லை எனக் காட்டும் முயற்சியாகும்" என்ற உளவியல் உண்மையை உணர்த்தும் இக்கட்டுரை, ”மொழிகளின் வேற்றுமை, பண்பாட்டு வேற்றுமை ஆகாது” என்பதை எப்படியேனும் நிறுவுவதே ஒரு சிலரின் மனப்போக்கால் விளைந்த ஆய்வுப்போக்கு என்பதனைச் சான்றுகள் காட்டி விளக்குகிறது. நூலின் உள்ளடக்கம், நூலின் நோக்கு, இந்தியா நிலவகத்தாலும் ஒன்று எனக் கட்டமைக்க முனையும் நூலாசிரியரின் கற்பனையில், தமிழ்-பிராகிருத மொழிகளிடையே நிலவும் இலக்கிய வேற்றுமை எப்படி ஆய்வுநெறிக்குள் வராமல் இருக்கிறது? என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து, நூலாசிரியரின் கூற்று எப்படித் தவறாகும் என்பதனையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
சமஸ்கிருதம், பிராகிருதம், தமிழ்மொழி மூன்றனக்கும் உள்ள இலக்கிய மொழியியல் வேறுபாடுகளை ஆழமாக விளக்கி, தொல்காப்பியத்தின் வழியே, தமிழ் எத்துணை உயர்வான மொழி என்பதனை நிறுவுகிறது இக்கட்டுரை. பிராகிருத மொழி இன்று எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டி, தமிழுக்குத் தொடர்பில்லாத பிராகிருத மொழியினைத் தமிழ் மொழியோடு இணைத்து, அதனை எப்படியாகிலும் சமஸ்கிருதத்தோடு இணைக்க முயலும் நூலாசிரியரின் புனைவுத்தன்மையை வினா-விடை-தரவுகள் மூலமாக, ஆழமாக விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.