தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்.


January - March 2022

பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பாக, திராவிடப் பொழில் இதழ் ஆய்வு, இணைய வழிக் கூட்டம் ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு (அமெரிக்க கிழக்கு நேரம் காலை 10 மணி) நடைபெற்றது. இந்த இணைய வழிக் கூட்டத்திற்கு, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர், திராவிடப் பொழில் இதழின் ஆசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் ”திராவிடப்பொழில் இதழ், இதுவரை 5 இதழ்கள் வந்துள்ளதன. இது 5-வது இதழ் பற்றிய கூட்டம்” எனக் கூறி ஒருங்கிணைப்பு உரையாற்றும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களை அறிமுகப்படுத்தினார். நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகளோடு தொடர்ந்து உரையாற்றி அவர்களுக்கு கதை, கவிதை எழுதச் சொல்லி, இன்று கவிதைகள் எழுதும் அளவிற்கு நாகம்மையார் இல்லத்துப் பிள்ளைகள் வளர்வதற்குக் காரணமானவர் அன்புடன் ஆனந்தி எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு, கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களை அறிமுகப்படுத்தி, அன்புடன் ஆனந்தி அவர்கள், திராவிடப் பொழில் இதழின் முதன்மை ஆசிரியர் பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களை உரையாற்ற அழைத்தார்.

பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் தன் உரையில், "திராவிடம் என்ற ஒற்றைச் சொல் நம்மை இணைக்கிறது. தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்று தான் என்பதை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், திராவிடப் பொழில் முதல் இதழிலேயே, வாழ்த்துரையையே ஓர் ஆய்வுக் கட்டுரை போலக் கொடுத்து, இதை விளக்கியிருந்தார்கள். திராவிடம் என்னும் சொல் பற்றி அதில் விரிவாக அறியலாம். திராவிடம் என்னும் சொல், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சொல். நம்மாழ்வார் திராவிட வேதம் என்றார். பொழில் என்றால் வெறும் பூங்கா மட்டுமல்ல. எப்போதும் வற்றாத நீர்வளம் உள்ள பூங்கா தான் பொழில். எப்போதும் அது பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். எனவே தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடப் பொழில் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதனுடைய நோக்கம் என்னவென்றால்: அறிஞர்கள் மத்தியில் மட்டும் தங்கி விட்ட கருத்துக்களை, வீட்டிற்கும் வீதிக்கும் கொண்டு வரவேண்டும், எல்லோரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இரண்டாவது, நாம் தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஒரு புறம் மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்று மக்களை அறிவு பெறச்செய்ய பிரச்சாரம் பயன்படுகிறது. இன்னொரு புறம், நமது முன்னோர்களைக் கல்வி பெறாமல் செய்துவிட்டு, குறிப்பிட்டவர்கள் மட்டும் கல்வி பெற்றுக் கொண்டார்கள். அந்தக் கல்வியை வைத்து நிறைய ஆவணங்களை உருவாக்கி வைத்துச் சென்று விட்டார்கள். இன்று கல்விப்புலத்தில், அவர்களின் ஆவணங்களை வைத்தே நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக, இந்திய, உலகப் பல்கலைக் கழகங்கள் ஆவணங்களை எதிர்பார்க்கின்றார்கள். திராவிட இயக்கம் கைதூக்கி விட்ட்தால், கல்விப் படிகளிலே நாம் மேலேறி விட்டோம். தந்தை பெரியார், பெரியாருக்கு முன் அயோத்திதாசர், பெரியாருக்குப் பின் பேரறிஞர் அண்ணா உள்ளிட்டவர்கள் பாடுபட்டதால், நாம் இந்த அளவிற்கு உலகப் பல்கலைக் கழகங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சான்று ஆவணங்கள் என்று வருகின்ற போது, அறிவுப் பூர்வமான சான்று ஆவணங்களுக்கு நாம் இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். தொகுப்புகள் நிறைய செய்ய வேண்டும். ஆய்வுகள் நிறைய செய்ய வேண்டும். உலக அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்ற வகையிலே ஆய்வுகள் செய்யவேண்டும். அய்யன் வள்ளுவன் தொடங்கி நம்மிடம் நிறைய அறிவுக் கருவூலம் இருக்கிறது. வள்ளுவரிலிருந்து தொடங்கி பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா என்று பலர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறார்கள். அந்த அறிவை ஒன்று திரட்டி ஆய்வு முறையிலே, அறிவியல் முறையிலே எப்படி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பது தான் திராவிடப் பொழிலின் நோக்கம். ஆய்வுக் கட்டுரைகள் வழியாக நிறையப் பேச வேண்டும்.

தமிழ் தான் திராவிடம். எகிப்தில் தமிழை, திராவிடம் என்று தான் சொல்கிறார்கள். தமிழ் திராவிட மொழிக் குடும்பமாக மாறிய போது, பல மொழிகளுக்குப் பரவியது. மொழி அடிப்படையில் திராவிடம் என்பது மட்டுமல்ல, சமூகநீதிப் போராட்ட அடிப்படையிலும் வளர்ச்சி பெற்றது. சமூகநீதி இயக்கமாகவும் விரிந்தது. அப்படி விரிந்த திராவிடத்தை மக்களிடம் ஓர் அறிவுக் கருவியாக எப்படிக் கொண்டு செல்வது என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நெடு நாள் சிந்தனை. உலக அறிஞர்கள் அளவிலே இதைக் கொண்டு சென்று இன்னும் பரவலாக்க வேண்டும் என்னும் முதன்மையான குறிக்கோளோடு இதனைத் துவங்கினார். திராவிடப் பொழில் இதழ் முழுக்க முழுக்க ஆய்விதழாகவே இருக்கும். பிரச்சாரமாகவோ பரப்புரையாகவோ இல்லாமல் இருந்தாலும் கூட, அதிலும் சமூகநீதியை உள்ளடக்கினார். எப்படி என்றால் பெரும் பெரும் பேராசிரியர்கள் என்பது மட்டுமே இல்லாமல், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரக்கூடிய பேராசிரியர்கள், குறிப்பாகப் பெண் பேராசிரியர்கள், பெண் மாணவர்கள், விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய, ஆய்வுப் புலத்திலே இப்போது தான் மேலேறிக்கொண்டிருக்கிற மாணவர்கள், அவர்களிடமிருந்தும் கட்டுரைகளப் பெற்று, அவர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாகவும் இது அமையவேண்டும் என்று நினைத்தார். ஆய்வு ஒரு புறம், ஆய்வோடேயே சமூகநீதியும் ஒரு புறம் என்று இரண்டையும் உள்ளடக்கி, அய்யா ஆசிரியர் இதைச் செய்தார்கள்.

சென்ற ஆண்டு சனவரியில் இதைத் தொடங்கினோம். இதுவரை 5 இதழ்கள் வந்துள்ளன. அடுத்த இதழ் இன்னும் 10 நாட்களுக்குள் வரப்போகிறது”. இதுவரை என்ன செய்துள்ளோம் என்பதை ஒரு படமாக திரையில் காட்டி விளக்கினார். இதுவரை வந்துள்ள கட்டுரைகள் மொழி, சமூகநீதி, பெரியார், மதம், பெண்ணியம், இன வரைவியல், கலை எனப் பல தலைப்புகளில் திராவிடப்பொழிலில் வந்துள்ளதைக் காட்டி, இது கட்சி சார்ந்ததாக இல்லாமல், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பாக வருவதைச் சுட்டிக் காட்டினார். அமெரிக்கா, கனடா, இலங்கை, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து கட்டுரைகள் வந்துள்ளதை எடுத்துக் காட்டினார். பெண்கள் பலர் கட்டுரைகளைக் கொடுத்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். மும்மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய ஆய்விதழ். திராவிடப்பொழில் இணையத்திலும் வருகிறது. அச்சிதழாகவும் வருகிறது. இன்னும் மேம்படுத்த வேணடும்.

முதன் முதலில், சிகாகோ பல்கலைக்கழக டாக்டர் சாச்சா ஈபெலிங், புகழ் பெற்ற, உலகளவில் கல்வியாளர்கள் நன்றாக அறிந்த அந்த அறிஞர் தான் திராவிடப்பொழில் இதழுக்கு வாழ்த்துச் செய்தி கொடுத்தார். வேதகால நாகரிகம் என்று சொல்வார்கள்; இல்லை, கீழடி நாகரிகம் பொருநை நாகரிகம், வைகை நாகரிகம், காவிரி நாகரிகம் என இது திராவிட நாகரிகம் என்று சொல்ல வைக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து இந்தியாவையே தலை கீழாக மாற்றிப்போடும். திராவிடத்தைத் திலகமாக காட்டுவது தமிழ்த்தாய் வாழ்த்து. திலகம் நெற்றியில் இருக்கும். அதனால் தமிழ் நாடு தான் தலையாக இருக்கும். காஷ்மீர் என்பது காலாக இருக்கும். அப்பவே மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இந்தியப் படத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுத் தான் பாடியிருக்கிறார். எனவே இந்த வாசிப்பை இங்கிருந்து காட்டுவது, இது வேத இந்தியா இல்லை, இது திராவிட இந்தியா என்று காட்டுவது. அண்ணல் அம்பேத்கர் அதனைத் தானே சொல்கிறார், இந்தியா முழுவதும் இருந்தது நாகர் நாகரிகம், திராவிட நாகரிகம் என்று சொல்கிறார் அல்லவா?.

ஆகவே இவற்றை எல்லாம் அறிவியல் மூலமாக, ஆய்வு மூலமாக கொண்டு செல்வது தான் திராவிடப் பொழில். .வேதங்களைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்றும் இருக்காது. படித்துப் பார்த்தால், நான் காட்டிற்குள் போய்க் கொண்டிருக்கிறேன். ஓநாய்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்பது தான் சுலோகமாக இருக்கும். இதில் என்ன பெரிய அறிவு இருக்கிறது? நாம் அறிவு என்றால் என்ன என்பதை, தமிழின் மூலமாக நிலைநிறுத்திக் காட்டுவோம். திராவிடத்தின் மூலமாக நிலைநிறுத்திக் காட்டுவோம் என்னும் பெரும் குறிக்கோளுடன் திராவிடப் பொழில் தன்னுடைய கல்விப் பயணத்தை, ஆய்வுப் பயணத்தை, திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேந்தராக இருந்து, இந்த இதழின் இதழ் ஆசிரியர் குழுவோடு இதனைத் துவங்கியுள்ளோம். இந்த இதழின் கல்விப் பயணத்திலே மக்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படுவோம் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

ஆய்வுரையினை முதலில் நெல்லுப்பட்டு முனைவர் இராஜவேல் அவர்கள் நிகழ்த்தினார். டாக்டர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் கட்டுரையான 'The issue of 'ai'(ஐ/அய்) & au(ஒள/அவ்) in Tamil language and Periyar's Proactiveness' என்னும் கட்டுரை பற்றித் தனது ஆய்வுரையில், தமிழ் மொழியில் ஏற்பட்ட எழுத்து மாற்றங்கள் பற்றி நிறைய புள்ளி விவரங்களோடு கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார். ஆரியர் வந்தபிறகு தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் போலவே ஆரிய மொழிக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்து தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தை இக்கட்டுரை பேசுகிறது எனக் குறிப்பிட்டார். அதைப் போலவே முனைவர் ஸ்ரீதேவி அவர்கள் எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா வழிப் புலனாகும் கலைஞரின் இலக்கணப்புலமை என்னும் கட்டுரை பற்றியும், முனைவர் ச.ஜீவானந்தம் அவர்கள் எழுதிய 'சுயமரியாதை இயக்கத்தின் ஆளுமை மிக்க பெண்கள்' என்னும் கட்டுரை பற்றியும் குறிப்பிட்டு ஆய்வுரை நிகழ்த்தினார். அவரின் ஆய்வுரை மிகச் சிறப்பாக அமைந்தது.

தொடர்ந்து பேரா. அழகுச்செல்வம் அவர்கள், பேரா.காளிமுத்து அவர்கள் எழுதிய 'திருவள்ளுவரைப் பற்றிய புனைகதைகள்' என்னும் கட்டுரையைப் பற்றிப் பேசினார். இந்தக் காலகட்டத்திற்கு மிகத் தேவையான கட்டுரை என்பதையும், இந்தப் புனைகதைகள் எப்படிப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதனைப் போலவே முனைவர் மு.சு.கண்மணி அவர்கள் எழுதிய 'பெரியாரியல் நோக்கில் நற்றிணை' என்னும் கட்டுரை பற்றியும் ஆய்வுரை நிகழ்த்தினார். நான் சொல்வதற்காக நீங்கள் பின்பற்றவேண்டாம் என்று பெரியார் சொன்னார். பெரியார் செய்தது மிகப்பெரிய புரட்சி. எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் பெரியாரை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்ட பேரா.அழகுச்செல்வம், கட்டுரையில் இருக்கும் சில முரண்களையும் சுட்டிக் காட்டினார்.

ஆய்வுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றிய திராவிடப்பொழிலின் ஆசிரியர் பேரா.ப..காளிமுத்து அவர்கள் "ஆய்வுரைகளைக் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன்." என்று குறிப்பிட்டு ஆய்வுரைகளைப் பற்றிய தனது கருத்துகளையும் தனது கட்டுரை பற்றிக் கூறப்பட்ட கருத்துகளுக்கு விளக்கமும் அளித்து உரையாற்றினார்.

நிறைவாக, திராவிடப்பொழிலின் ஆசிரியர்குழுவில் ஒருவரான முனைவர். வா.நேரு நன்றியுரையாற்றினார். தொடக்கம் முதல் இறுதி வரை பேச்சாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியும், அவர்கள் பேசி முடித்தவுடன் அவர்களின் கருத்துக்களில் முக்கியமானவற்றை தொகுத்துச் சொல்லியும் மிகச் சிறப்பாக அன்புடன் ஆனந்தி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்வின் இறுதியில் டாக்டர் சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், இளமாறன், துரைக்கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி, பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு இதழ் வந்தவுடன் அதனைப் பற்றிக் கூட்டங்கள் நடத்துவோம் என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.