தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்


April - June 2022

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாகத் திராவிடப்பொழில் 6-வது இதழ் (ஏப்ரல் 2022 - சூன் 2022) ஆய்வுக்கூட்டம் சூன் 11, 2022 சனிக்கிழமை, தமிழ்நாட்டு நேரம் இரவு 7.30 மணிக்கு இணைய வழிக்கூட்டமாக நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடக்க உரையை ஆற்றி, ஆய்வுக்கூட்டத்தின் நோக்கத்தைக் கூறித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து .அனைவரையும் வாழ்த்தி வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திச் செல்ல அனைவரின் சார்பிலும் சுதாகர் அவர்களை அழைத்தார்.

தோழர் சுதாகர்: 'நான் தான் திராவிடன் என்று நவில்கையில் தேன் தான் நாவெல்லாம்' எனப் பாடினார் புரட்சிக் கவிஞர். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’,’ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று நம் மனதில் பதியவைத்த தமிழ்ச்சான்றோர் அனைவருக்கும் வணக்கம். நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றைய திராவிட மாடல் காலம் வரை எளிய மக்களின் உயர்வுக்காகவும், சமத்துவத்துவத்துக்காகவும் தொடர்ந்து உழைத்த, உழைக்கும் டாக்டர் நடேசனார், சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர், பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் மற்றும் இன்றைய முதல்வர் தளபதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்.

கையெழுத்துப் பிரதிகள் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல், வாட்சப் காலம் வரை திராவிட இயக்கக் கொள்கைகளைப் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான ஊடகங்களில் திராவிட இயக்க கொள்கைகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘திராவிடப் பொழில்‘ இதழின் ஆய்வு இப்போது நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

ஏப்ரல் முதல் சூன் 2022 வரையான திராவிடப் பொழில் இதழ் ஆய்வு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். நிகழ்வின் அறிமுக உரையைப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் வழங்குகின்றார். கண்ணபிரான் இரவிசங்கர் மிகச் சிறந்த அறிஞர். ’அறியப்படாத தமிழ்மொழி‘, தமிழா? சம்ஸ்கிருதமா? என்னும் பல நூல்களை எழுதியிருப்பவர். மேலும் திராவிடப்பொழில் இதழின் தலைமைப் பதிப்பு ஆசிரியராக இருப்பவர். அவரை அறிமுக உரை வழங்க அழைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.

பேரா. முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள்: ”பார்வையாளர்களாக இருக்கும் நாகம்மையார் குழந்தைகளுக்கு முதல் வணக்கம். திராவிடப்பொழில் இதழை ஒரு தொலைநோக்குத் திட்டமாகத் தான் நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அய்யா துவக்கினார். பொதுவாகப் பெரியார் கொள்கைகளை நாம் பல தளங்களில் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களே ‘திராவிட நல்’ என்னும் சொல்லைத் தன் பாடலில் இணைத்தார். அதைப் போலவே திராவிட என்னும் சொல் இந்தியாவின் தேசிய கீதத்திலும் இருக்கிறது. திராவிடம் என்னும் சொல்லுக்கும் சேர்த்துத் தான் தேசிய கீதம் பாடும்போதோ, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதோ எழுந்து நிற்கின்றோம்.

திராவிடக் கொள்கைகளை நாம் பல தளங்களில் பேசினாலும், ஆய்வுத்தளம் என்பது மிக முதன்மையானது. வெறும் பிரச்சாரமாகவோ, பரப்புரையாகவோ செய்யும் போது அதற்கு உண்டான மதிப்பு வேறு, அறிஞர்களுடைய தளத்திலே இயங்கிக் கொண்டிருக்கும் போது அதற்குண்டான மதிப்பு என்பது வேறு. கீழடியையே எடுத்துக் கொள்ளுங்கள். சங்கத்தமிழின் காலம் கி.மு. 300க்கு மேல் போகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. கி.மு.300 முதல் கி.பி. 300 வரை தான் சங்க காலம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு கீழடி ஆய்வும் சிவகளை ஆய்வும் கி.மு. 1155 வரைக்கும் சங்க காலம் என்று போகின்றது. இதனைச் சாதித்தது எப்படி? வெறும் வாய்மொழியாலோ, சங்கத்தமிழ்ப் பாடல்களாலாயோ இதனை நாம் நிரூபிக்கவில்லை. அறிவியல் முறையில் இதனை நாம் ஆய்வு செய்து நிரூபித்திருக்கிறோம். அதுபோல ஆசிரியர் அவர்களின் உன்னதமான குறிக்கோள் என்னவென்றால் வெறும் பரப்புரையாக மட்டுமே இல்லாமல், உலக அறிஞர்களின் மத்தியில், உலகப் பல்கலைக்கழகங்களின் மத்தியில் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தப்பக்கம் ஐரோப்பா, அந்தப்பக்கம் அமெரிக்கா என்று எல்லாப் பக்கங்களிலும், உலகத்தில் உள்ள எல்லா அறிஞர்களுக்கும் திராவிடத்தின் பேரறிவை, அந்த அறிவாற்றலை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழுக்காகப் பெரியார் என்ன செய்திருக்கிறார் என்று அய்யா ஆசிரியர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ’தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?‘ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதையும் கடந்து ஆய்வுக் களத்திலே பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் (Information Technology, IT) என்று சொல்லக்கூடிய, இன்றைக்குத் தேவைப்படும் மாறுதலுக்கு அன்றைக்கே பெரியார் வித்திட்டுப் போயிருக்கிறார், யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு! அதை ஆய்வுக் களத்தில் கொண்டு சேர்ப்பது. இதன் மூலம் இதைப் போன்ற நமது திராவிட இயக்க ஆய்வுகளுக்குக் கல்விப் புலத்தில் மதிப்பு என்பது மிகக் கூடுகிறது.

காவிரி ஆறு முழுத் தண்ணீரோடு ஓடி வருகிறது. காவிரி ஆறே முழுமையாக அப்படியே வயலுக்குள் வந்துவிட்டால் என்ன ஆகும்? காவிரி ஓடி வருவதை நம் இலக்கியங்கள் அப்படியே பாடி இருக்கினறன. காவிரி ஆற்றில் வரும் நீர் கால்வாய், வாய்க்கால் எனப் பிரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு நம் வயலுக்கு வந்து சேர்கிறது. அதே போல பெரிய ஆய்வுகள் என்னதான் அறிஞர்கள் செய்தாலும் அதை மக்களுக்குத் தரும்போது தான் விளைச்சல். மொழியின் பயனே மக்கள் தான். சமூகநீதியின் ஆராய்ச்சிப் பயனே மக்கள் தான். எல்லாமே மக்கள் தான். ஆய்வு என்னும் அந்த ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரைச் சின்னச்சின்ன வாய்க்காலின் மூலமாகக் கொண்டு வந்து, மக்கள் என்னும் கழனிக்கு கொண்டு வந்து, வேளாண்மை செய்து விளைச்சலை உண்டாக்க வேண்டும். அதற்குத்தான் இது போன்ற திராவிடப்பொழில் போன்ற ஆய்விதழ் ஆய்வுகள். அறிஞர்கள் எழுதியது ஒரு புறம். அறிஞர்கள் எழுதிய கருத்துகள் அறிஞர்கள் இடத்திலேயே தங்கி விடாமல் மக்களிடத்தில், குழந்தைகளிடத்தில் எல்லோரிடத்திலும் கொண்டு செல்வதற்குத் தான் தோழர் ஜெயா மாறன், தோழர் அமரன் போன்றவர்கள் எல்லாம். இதற்கு முன்னாலும் இதைப் போன்ற ஆய்வுகள் செய்திருக்கிறோம்.

இதுவரை 6 இதழ்கள் வந்திருக்கின்றன. 2021 சனவரி மாதம் தைப்பொங்கல் அன்று இந்த இதழைத் துவங்கினோம். இதுவரை 6 இதழ்களில் 34 ஆராய்ச்சித் தாள்கள் வந்துள்ளன. அந்த ஆராய்ச்சித் தாள்களில் நிறைய சமூகநீதிதான் இருக்கிறது. சமூகநீதி போக, வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கியம்-பிற மொழிகளோடு ஒப்பீடு இதைப் போன்ற துறைகளில் நல்ல ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. பெரியாருடைய வாழ்க்கையை வைத்தே வைக்கம் போராட்டம் பற்றிய சிறப்பான கட்டுரை வந்துள்ளது. திராவிட இயக்கமும், கறுப்பின மக்களின் போராட்ட இயக்கமும் அதற்குண்டான ஒப்பீடு, அதைப்போல பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழ் இலக்கணத்திலிருந்து எப்படி நிரூபிப்பது போன்ற பல தாள்கள் திராவிடப்பொழில் இதழிலே வந்திருக்கின்றன. மேலும் வர இருக்கின்றன. பெரும் பெரும் பேராசிரியர்கள் மட்டுமல்லாது ஆய்வுமாணவர்களிடமிருந்து படித்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடமிருந்து வரும் கட்டுரைகள், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வரப்போகின்றன. பெண்களும் நிறைய போட்டி போட்டுக்கொண்டு எழுதுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது ஆராய்ச்சிக் களமாக இருந்தாலும், இந்த ஆராய்ச்சியிலும் சமூகநீதி செய்வோம் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் தான் ,இந்தத் திராவிடப்பொழில் ஆய்விதழை ஆசிரியர் அவர்கள் இதன் நோக்கமாக வைத்துச் செலுத்திக்கொண்டிருக்கிறார். ஒரு கப்பலுடைய கேப்டன், கேப்டனுக்கு தமிழில் வலவன் என்ற சொல், அந்த வலவன் போல அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது கூட நீட் தேர்வை எதிர்த்துக் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பாரிசில் என்னோடு வேலை பார்க்கும் Nathanael de Ménochet என்னும் பேராசிரியர். நானும் அவரும் நண்பர்கள். அவருக்கு 85 வயது. ’எப்படி இவரால் (ஆசிரியர் வீரமணியால்) இவ்வளவு பயணிக்க முடிகிறது?’ என்று கேட்டார். அந்த அளவுக்கு வியந்து பிற நாட்டு அறிஞர்களும் வியந்து நமது முயற்சிகளைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல தளங்களிலும் இதை முன்னெடுத்துச் செல்வோம் என்று சொல்லி இரண்டு கட்டுரைகளை - நான் சொன்னதைப் போல ஆற்றிலிருந்து கழனிக்குக் கொண்டு செல்லும் பணியை - தோழர் ஜெயாமாறன் அவர்களும் அமரன் அவர்களும் செய்ய இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார்.

தோழர் சுதாகர் : "ஜெயா மாறன் ஒரு சிறந்த பேச்சாளர். மதுரையில் பிறந்து வளர்ந்து இப்போது இங்கு அமெரிக்காவில் அட்லாண்டாவில் வசிக்கிறார். தமிழ் ஆசிரியராக, பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகக் கலைஞராகப் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பவர். அதுபோல சிறந்த நடிக்கைக்கான 'தமிழன்பன் 80 விருதை'யும் பெற்றிருப்பவர். அமெரிக்க அளவிலான பேச்சுப்போட்டியில் 'ஞான பாரதி 'விருது வென்றவர்," என்று ஜெயாமாறன் அவர்களை அறிமுகப்படுத்தி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அழைத்தார்.

தோழர் ஜெயா மாறன் : ”பெளத்தம் எழுச்சியும் வீழ்ச்சியும் ஒரு வரலாற்றுப் பார்வை என்னும் இந்தக் கட்டுரை எனக்கு திகைப்பைத் தந்தது, நிறைய புதிய செய்திகளைக் கொடுத்து வியப்பைத் தந்தது. புத்தருக்கு முன்னால் இருந்த வேதசமய எதிர்ப்பு இயக்கங்களை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது. வேதம், வர்ணம், ஜாதி, பலியிடுதல் போன்றவற்றை எல்லாம் எதிர்த்து எப்படி புத்தர் ஒரு புதிய நெறியைக் கொடுத்தார் என்பதை இக்கட்டுரை பேசுகிறது. மதம் என்னும் அமைப்பு ஆதரிக்கின்ற எதையும் புத்த நெறி ஆதரிக்கவில்லை. கடவுளை, மதத்தை, ஆன்மா நிலையானது என்பதை எல்லாம் மறுத்தது பெளத்தம். பெளத்தம் எப்படித் தோன்றியது, அது எப்படி அதனுடைய மேன்மையான கருத்துகளால் பரவியது, அது எப்படி அசோகர் காலத்தில் அரச மதம் ஆனது, யாகங்கள் எப்படித் தடை செய்யப்பட்டன, எப்படி உயிர்ப் பலி நிறுத்தப்பட்டது, எப்படிச் சமூகம் சமத்துவமானது போன்ற பல செய்திகள் இந்தக் கட்டுரையில் சுட்டப்படுகின்றன. பார்ப்பனர்களும் உழைப்பவர்களில் ஒருவராக ஆக்கப்பட்டனர் அக்காலகட்டத்தில் என்ற வரலாற்றுச் செய்தியும் இடம் பெற்றுள்ளது.

"பார்ப்பனீய ஆதிக்கத்தாலும், கட்டுக்கதைகளாலும் சடங்குகளாலும், வர்ணாசிரமத்தாலும், கர்ம விதியாலும் அழுத்தப்பட்டு துயரத்தில் மூழ்கிக் கிடந்த மக்கள் நம்மைக் காக்க ஒரு தேவதூதர் வரமாட்டாரா? என்று ஏங்கிக் கிடந்த போது அவர் வந்தார். எப்படி வந்தார். ஒன்றும் தெரியாமல் வளர்ந்து வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகின்ற பிராமணர்களே, எல்லாம் தெரிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில் உங்களையும் தூக்கிப்போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும்தானே?" என்று புத்தர் கூறியதைக் குறிப்பிட்டு, புத்தர் எப்படிப்பட்ட நிலையில், பார்ப்பனீயத்திற்கு எதிராக வந்தார் என்பதையும், எப்படி அவர் தனது பெளத்த நெறியை ஒழுங்கமைத்தார் என்பதையும், புத்தருக்குப் பின் பெளத்தம் 18 பிரிவுகளாக பிரிந்ததையும், அதனை ஊடுருவி நாகார்ஜூனர் மூலமாகப் பார்ப்பனீயம் எப்படி மடை மாற்றியது என்பதையும், இப்போது இருக்கும் பெளத்தம் உண்மையான பெளத்தமா, இல்லை என்பதையும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்த நெறியைத் தழுவுகிறேன் என்று 6 இலட்சம் மக்களோடு மாறியதையும், பார்ப்பனீயம் திட்டமிட்டு ஊடுருவி, புத்தரை விஷ்ணுவின் 9-வது அவதாரம் என்று சொன்னதையும், எப்படி பல்வேறு நாடுகளில் பரவிய பெளத்தம் திருந்திப் போய் இருக்கிறது என்பதையும் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு எழுத்தாளர் மு.சங்கையா, 12 புத்தகங்களின் துணையோடு இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் மு.சங்கையா அவர்களைப் பாராட்டி, கட்டுரையை முழுவதுமாக உள்வாங்கி, அதில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தையும் எடுத்து, விவரித்து மிகச் சிறப்பாக தோழர் ஜெயா மாறன் அவர்கள் கட்டுரையினை ஆய்வு செய்தார்கள்.

எழுத்தாளர் மு.சங்கையா: ”முதலில் திராவிடப்பொழில் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றியைச் சொல்ல வேண்டும். நான் எதைப்பற்றி எழுதலாம் என்று நினைத்து தோழர் நேருவிடம் பேசியபோது நீங்கள் பெளத்தம் பற்றி எழுதுங்களேன் என்றார். அவர் கொடுத்த புள்ளியில் இருந்து தான் இந்தக் கட்டுரை பிறந்தது. எழுதி முடித்த பிறகு கூட, இன்னும் பெளத்தம் பற்றி ஏராளமான தகவல்கள், தரவுகள் இருக்கின்றன. நான் முழுமை பெற்றதாக நினைக்கவில்லை. ஏனென்றால் பெளத்தம் பற்றிப் பேசவேண்டிய கால கட்டம் இது. இந்துத்துவாவிற்கு எதிராக முதன் முதலில் போர்தொடுத்த, எதிர்த்த ஒரு மதத்தை இன்றைய காலகட்டத்தில் வலிமையாகச் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இப்போது இந்தக் கட்டுரையை தோழர் ஜெயா மாறன் அவர்கள் பேசியதற்கு அப்புறம் அந்தக் கட்டுரைக்கு உயிர் வந்தது மாதிரி இருக்கின்றது. உண்மையிலேயே ஒரு Script எழுதிவிட்டு அதற்கு ஒரு Drama எழுதினால், அந்த Scriptக்கு உயிர் வந்தது மாதிரி இருக்கும். அது மாதிரி இந்தக் கட்டுரையை அவர்கள் மதிப்புரை வழங்கிய முறை, அவர்கள் பேசிய தமிழ், அந்தத் தமிழின் உச்சரிப்பு, உண்மையிலேயே இந்தக் கட்டுரை உயிர்பெற்றது போல இருக்கிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நான் இதுவரை பல மதிப்புரைகளைக் கேட்டிருக்கிறேன். இப்படி ஒரு எழுச்சிகரமான உரையை, எது எது முக்கியம் என்று முக்கியமான கருத்துகளை மிகக் கூர்மையாக எடுத்து அவர்கள் சொன்ன விதம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையாக இருந்தது. தோழர் ஜெயா மாறன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்” என்று உரையாற்றினார்.

தோழர் சுதாகர்: அடுத்ததாக 'Humanism and Thiruvalluvar" என்னும் கட்டுரை. இதனை எழுதியவர் அமெரிக்காவில் இருக்கும் முனைவர் இர. பிரபாகரன் அவர்கள். இந்த ஆய்வினை வழங்கப் போகிறவர் தோழர் அமரன். தோழர் அமரன் அவர்கள் மிகவும் இளைஞர். மிகச் சிறந்த பேச்சாளர். தொடர்ச்சியாக ஈழப்பி ரச்சனை, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனை போன்றவற்றிற்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். FeTNA-வில் Youth Association Secretaryயாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தோழர் அமரன்: ”மனித நேயம் என்றால் என்ன? மனித நேயர்கள் யார் என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் திருவள்ளுவர். மத நம்பிக்கைகளை விட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மனித நேயர்கள். அதனால் தான் அவர்கள் நாத்திகர்களாக அல்லது Agnosticகளாக இருக்கிறார்கள். வரலாற்றில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நேயர் புத்தர். அதற்கு அடுத்ததாக கன்பூசியஸ், சாக்ரடீஸ் போன்றவர்கள் புகழ்பெற்ற மனித நேயர்கள், அதைப் போல 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த மனித நேயர் திருவள்ளுவர். ஒவ்வொரு திருக்குறளையும் 7 சொற்களில், இரண்டு அடிகளில் பாடியவர் திருவள்ளுவர். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். உலகம் முழுமையும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் நூல் திருக்குறள். திருக்குறளில் இருக்கும் அத்தனை குறட்பாக்களும் மனித நேய அடிப்படையில் அமைந்தவை. உலகில் மனிதர்கள் இருக்கும் வரை மனித நேயம் தேவைப்படும்.” என்று குறிப்பிட்டு முனைவர் .பிரபாகரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையை ஆங்கிலத்திலேயே உரையாற்றி விளக்கம் கொடுத்தார்.

முனைவர் இர. பிரபாகரன் அவர்கள்: ”திராவிடப்பொழில் இதழை உருவாக்கிய டாக்டர் சோம. இளங்கோவன், பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் போன்றவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். வள்ளுவர் ஒரு மனித நேயர். திருக்குறளில் இருப்பது எல்லாம் மனித நேயம் தான். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்று சொன்னவர் வள்ளுவர். 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று சொன்னவர். அன்பும் அருளும் சொன்னவர். நம் உறவினர்களிடத்தில் காட்டுவது அன்பு. அதன் தொடர்ச்சி தான் நட்பு. அதன் முதிர்ச்சி தான் அருள். அதனால் தான் வள்ளலார் சொன்ன 'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொன்னது அன்பின் முதிர்ச்சி தான். அவருடைய தனிப்பட்ட கொள்கை தவிர ஓர் அரசன் எப்படி அரசாள வேண்டும், ஓர் அமைச்சர் எப்படி செயல்படவேண்டும், மேலாண்மையில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் எல்லாம் மறு கருத்திற்கே இடமில்லை. எல்லாவற்றையும் விட அமரன் சொன்னது போல Morality ஒழுக்கம் என்பது அங்குள்ள மனிதர்களாலே, நல்லவர்களாலே சமூகத்திலே தீர்மானிக்கப்படுவது தான் ஒழுக்கம். கடவுளால் ஒழுக்கம் கொடுக்கப்பட்டது என்று சொல்வது தவறு. எந்த மதத்தாலும் ஒழுக்கத்தை நிர்ணயிக்க முடியாது. மனிதர்கள் புத்தரைக் கடவுளாக்கியது போல, வள்ளுவரையும் கடவுளாக்க முயற்சிக்கிறார்கள். மனிதர்கள், மனிதன் வள்ளுவரின் குறள்களைப் படிக்கவேண்டும். அதனைப் பின்பற்ற வேண்டும். அதன்படி வாழவேண்டும். இந்தக் கட்டுரைகள் எல்லாம் அதற்காக எழுதப்பட்டவையே. இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து, புரிந்துகொண்டு மிகச் சிறப்பாக பேசிய அமரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நன்றி.” என்று முடித்தார்.

நிகழ்வில் திராவிடப்பொழில் ஆசிரியர் சிங்கப்பூர் பேரா. சுப. திண்ணப்பன் அவர்கள் “இது மிக நல்ல முயற்சி. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது ஒரு புறம். அது வெளிவந்த பின் அதனை இம்மாதிரி ஆய்வு செய்வது பாராட்டத்தக்கது. ’ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்‘ போல, கட்டுரை ஆசிரியர்கள் எவ்வளவு தூரம் மகிழ்ந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. இதைப்போல முதுகலை ஆய்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் திராவிடப்பொழில் ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றி? என்று அறிந்து கொள்வது இரண்டு வகையில் நன்மை, பதிப்பாசிரியர் குழுவிற்கும் இந்த இதழை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்பதற்கும் ஓர் ஆலோசனையாக அமையும். பதிப்பாசிரியர் குழுவிற்கும் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. கட்டுரை ஆசிரியர்களுக்கு ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. இது தொடர்ந்து நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டார்.

தமிழ் மாமணி திருவள்ளுவன் : ”உண்மையிலேயே மிகச்சிறந்த எழிலார்ந்த ஒரு திறனாய்வுக் கூட்டம் இது. திராவிடப்பொழிலை இந்த அளவிற்கு ஆய்வாளர்கள், அறிஞர்கள் கூடி இப்படித் திறனாய்வு செய்வது மிகப்பெரும் சாதனை. பெளத்த்த்தைப் பற்றி அம்மா ஜெயா மாறன் அவர்கள் பேசியது மிகச்சிறந்த உரை. இது இந்தக் காலத்திற்கு எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்கிறோம். டாக்டர் பிரபாகரன் அவர்களுடைய திருக்குறள் பற்றிய அறிவு மிகச்சிறப்பானது. நிறைய திருக்குறள் பற்றி எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையை மிகச்சிறப்பாக அமரன் ஆய்வு செய்தார். உலகத்து அறிஞர்களை எல்லாம் உள்ளே கொண்டு வந்து இணைத்து வள்ளுவத்தின் பெருமை சொன்னார். வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என்று குறிப்பிட்டார்.

பேரா.ப.காளிமுத்து : ”திறனாய்வாளர்களுக்கு உளங்கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். இதனை ஒரு நல்வாய்ப்பாக கருதுகிறேன். நமது ஏடுகள் வளர்ச்சி பெற வேண்டும். இன்னும் நிறைய ஆய்வாளர்கள் எழுதவேண்டும். தோழர் சங்கையா அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும். அதைப் போல டாக்டர் பிரபாகரன் அவர்கள் கட்டுரையைப் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் படிக்கிற காலத்தில் எல்லாம் இப்படிப்பட்ட பத்திரிக்கைகள் வரவில்லையே என்று ஏங்கித் தவித்த காலம் எல்லாம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்திலே கோதண்டபாணி என்று ஒரு வழக்கறிஞர் திருக்குறளைப் பற்றி மிக அருமையாகப் பேசினார். சென்ற கட்டுரையில் அவரைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். இன்றும் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கட்டுரையின் ஆய்வாளர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று உரையாற்றினார்.

மற்றும் தோழர் இராஜமாணிக்கம், திராவிடப்பொழில் ஆசிரியர்கள் முனைவர் வா.நேரு, பேரா.நம்.சீனிவாசன், மற்றும் டாக்டர் சரோஜா இளங்கோவன், அருள் இளமாறன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். நிகழ்வின் முடிவில் தோழர் சிகாகோ. இரவிக்குமார் அவர்கள் நன்றியுரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.