தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்


July - September 2022

திராவிடப் பொழில் சூலை-செப்டம்பர் 2022 இதழின் ஆய்வுக் கூட்டம் பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் சார்பாக அக்டோபர் 22 2022 சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (தமிழ்நாடு நேரம்) நடைபெற்றது. நிகழ்வுக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த தோழர் மோகன் வைரக்கண்ணு அவர்கள் தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில்,

"மொழி, பண்பாடு, நாகரிகம் இவை எல்லாவற்றிலும் மிகப் பழமையான, செம்மொழி வளமும், வரலாற்றுப் பொருண்மையும் படைத்த ஒரு சிறப்புமிக்க சொல், சமத்துவம், சமநிலை, சமூகநீதி, பெண்ணுரிமை, சாதிமத மறுப்பு அனைத்தும் பேசும் சொல் இது. நான் சொன்னவுடன் அந்தச் சொல் என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்; அது தான் திராவிடம் என்னும் சொல். திராவிடமும் மொழியும் இணைந்து தான் திராவிடப் பொழில். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி இந்த இதழ் வருகிறது. இதன் ஆசிரியர்களுக்கு மிகவும் நன்றி. அது போல ஆய்வுக் கட்டுரைகளைத் தருவது தான் இந்தத் திராவிடப்பொழில். திராவிடப் பொழில் இதழில் வந்த கட்டுரைகளை ஆராய்ந்து, அதைத் தர அறிஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்டு நாம் மகிழ்வோம். மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்..." என்ற பாடலில் திராவிட நல் திருநாடு என்று வருகின்றது. அதைப் போல 1903ல் இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட பாடலில் "திராவிட உத்கல வங்கா" என்று வருகின்றது. அது இப்போது இந்திய தேசிய கீதம். அந்த இந்திய தேசிய கீதத்திலும் திராவிட என்ற சொல் வருகிறது. 1903 க்கு முன்பே இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதாக பல ஆய்வுகள் சொல்கின்றன; அறிஞர்கள் பேசி உள்ளார்கள். இந்திய தேசிய கீதம் மரியாதைக்கு உரியது. அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து, இறுதியில் பாடப்படும் தேசிய கீதம் இந்த இரண்டிலுமே திராவிடம் இருக்கிறது. இதன் பொருட்டாகத் தான் இந்த திராவிடப் பொழில் வந்து கொண்டிருக்கிறது. அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய ஆலோசனையின் பேரில் பேராசிரியர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களைச் சிறப்பு ஆசிரியராகக் கொண்டு இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த ஆசிரியர் குழுவில் அய்யா டாக்டர் சோம. இளங்கோவன், முன்னால் துணைவேந்தர் ஜெகதீசன், பேரா.ப. காளிமுத்து, பேரா. நம். சீனிவாசன், பேரா. சுப. திண்ணப்பன், முனைவர் வா. நேரு ஆகியோர் அடங்கிய ஆசிரியர் குழுவிற்கு என்றுமே எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். திராவிடப்பொழில் இந்தக் காலத்திற்கு வேண்டிய ஒரு கைவாள். எழுச்சிக்கு வேண்டிய ஒரு தூண்டுகோல். உலகிற்குத் திராவிடத்தை உணர்த்த பகுத்தறிவுப் பண்ணையில் வளரும் திராவிடப் பொழிலின் காற்று அயராது உலகெங்கும் வீசட்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ந்து கிட்டட்டும். இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், தரணியில் தன்மானம் கொண்டவர்கள் நாம் என்ற முழக்கத்தோடு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன் என்று குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வினைத் தோழர் கோதை அவர்கள் ஒருங்கிணைத்தார். தோழர் கோதை அவர்கள் மென்பொறியாளர். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியராகவும் வேலை செய்கிறார். இணைய வழியாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் தன்னார்வலராகப் பணியாற்றக் கூடியவர். தமிழில் கவிதை கதை கட்டுரைகள் எழுதக்கூடியவர். படைப்பாளர், தமிழ்ச் சங்கத்தில் பொறுப்பாளர், ஊடகங்களில் பட்டிமன்றங்களின் பேச்சாளராகவும் இருக்கக்கூடியவர். இன்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் நிகழ்வினை ஒருங்கிணைக்கிறார் என்று சிறப்பாகத் தலைமை ஏற்ற மோகன் வைரக்கண்ணு அவர்கள் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைத்த தோழர் கோதை அவர்கள், "திராவிடச் சிந்தனைகளை நம் மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான பொறுப்பு அனைத்து திராவிடர்களுக்கும் உண்டு. திராவிடத்தைப் பற்றி மிக அழகாக மோகன் வைரக்கண்ணு அவர்கள் குறிப்பிட்டார். திராவிடச் சிந்தனையானது பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவற்றை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான் தந்தை பெரியார் கனவு கண்டார். அதற்கான பொறுப்பு அனைத்து திராவிடர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்தத் திராவிடப் பொழில் இதழின் ஆய்வுக்கூட்டம் என்ற முன்னெடுப்பும் கூட என்று நம் கண்களுக்குத் தெரிகிறது. திராவிடப் பொழில். பொழில் என்பது சோலை. அந்தத் திராவிடச் சோலையில் பூக்கின்ற மலர்கள் தான் இதில் வரும் கட்டுரைகள். இந்தக் கட்டுரைகளான மலர்களைத் தேனீக்கள் ஆக மாறி ஆய்வு செய்து, அதில் இருக்கும் தேனைக் கொணர்ந்து நமக்கெல்லாம் தந்தால் நமக்கு எவ்வளவு இனிப்பாக இருக்கும். இப்படிப்பட்ட வேலையைத் தான் நமது ஆய்வாளர்கள் எல்லாம் செய்து நமக்கு அந்தத் தேனைக் கொண்டு வந்து தரக் காத்திருக்கிறார்கள்." என்று குறிப்பிட்டு நிகழ்வைத் துவக்கி முனைவர் சுபாஷினி அவர்கள் எழுதிய 'ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள்' என்னும் கட்டுரையை ஆய்வு செய்ய எழுத்தாளர், பேச்சாளர் ஜெயாமாறன் அவர்களை அழைத்தார்.

"ஜெயாமாறன் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். இப்போது அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாநகரத்தில் வசித்து வருகிறார். ஜார்ஜியா ‌டெக் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்க்கிறார். தமிழ்ப் பள்ளி ஆசிரியராக, மேடைப் பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகக்கலைஞராக இன்னும் நிறைய மேடைகளில் பேசிய அனுபவம் உள்ளவர். ஜெயாமாறன் அவர்கள் யூ டியூப் வழியாக இலக்கியக் காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார். சிறந்த நடிகைக்கான தமிழன்பன் 80 விருதைப் பெற்றவர். ஞானபாரதி 2020 விருது பெற்றவர்." என்று ஜெயாமாறன் அவர்களைப் பற்றிய அறிமுகத்தையும் கொடுத்து ஆய்வுரைக்கு அழைத்தார்.

ஜெயாமாறன் அவர்களின் ஆய்வுரை: "ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷினி அவர்களின் 'ஜெர்மானிய மொழிபெயர்ப்பில் திருக்குறள்' என்னும் கட்டுரை பற்றித் தான் இன்று நான் பேசப்போகிறேன். முனைவர் சுபாஷினி அவர்களை பலமுறை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன்; பேசக் கேட்டிருக்கிறேன். இன்று அவருடைய கட்டுரையை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கிய அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும், பெரியார் பன்னாட்டு அமைப்பிற்கும் நன்றி. இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, சில வருடங்களுக்கு முன் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் சொன்ன ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி கலெக்டராக இருந்த, தமிழ் மொழி மேல் தீவிர பற்றுக் கொண்டிருந்த பிரான்சிஸ் வொயிட் எல்லீஸ் அவர்கள் ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றுவதற்காகச் சேகரித்தவர். அப்போது மதுரையில் கலெக்டராக இருந்த ஜார்ஜ் ஹேரிங்டன் அவர்கள் வீட்டில் பட்லராக இருந்த கந்தப்பனார், தான் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை எல்லீஸ் அவர்களிடம் கொடுத்தார் என்றும், இந்தக் கந்தப்பனார் அவர்கள் திராவிடக் கொள்கைகளின் முன்னோடியான அயோத்திதாச பண்டிதர் அவர்களுடைய தாத்தா என்ற செய்தியையும் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அந்தச் செய்தியின் தொடர்ச்சி இந்தக் கட்டுரையில் இருக்கிறது. அப்படி பிரான்சிஸ் வொயிட் எல்லீஸ் அவர்களின் கைகளுக்கு வந்த அந்த ஓலைச்சுவடிகள் திருக்குறள் ஓலைச்சுவடிகள். அதை அச்சில் பதிப்பதற்கு முன் அதைச் செம்மைப் படுத்த வேண்டும். ஏனென்றால் காலம் காலமாக ஓலைச்சுவடிகளை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே வரும்போது கையால் எழுதினால் எழுத்து மாற, கருத்து மாற வாய்ப்பு உண்டு. அதனால் அச்சில் ஏற்றுவதற்கு முன் அந்த மூலப்பிரதியை பிழைதிருத்திச் செம்மைப்படுத்தி கொடுக்கிறார் திருநெல்வேலியைச் சார்ந்த அம்பலவாணக் கவிராயர். அவருடைய அந்தப் பெரிய உழைப்பினாலும் எல்லிஸ் அவர்களின் பேருதவியாலும் 1812ல் திருக்குறளின் மூல பாடம் என்னும் பெயரில் தமிழில் திருக்குறள் அச்சிடப்படுகிறது; வெளியிடப்படுகிறது. அதே வருடம் பிரான்சிஸ் ஒயிட் எலிஸ் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்திலும் அதன் பின்னர் பிரெஞ்சு, ரஷ்ய மொழி, ஸ்வீடீஸ் மொழி, ஜெர்மனிய மொழி ஆகியவற்றிலும் மொழிபெயர்த்து வெளியிடுகிறார். ஆனால் இதற்கு எல்லாம் 80 ஆண்டுகளுக்கு முன்னால், 1730 லேயே வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் திருக்குறளை அச்சிட்டு வெளியிட்டாராம். இப்படி அந்தக் காலத்திலேயே உலகின் பல மொழிகளில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் திருக்குறள்.

இதையெல்லாம் கேட்கும் போது நமக்கெல்லாம் மிகப் பெருமையாக இருக்கும். ஆனால் பெருமைப்படுவதோடு அப்படியே விட்டுவிடுவோம். இந்த மொழிபெயர்ப்புப் புத்தகங்களை நாம் பார்ப்பதில்லை, தேடுவதில்லை. இதைப் பற்றிய விவரம் எதுவுமே நமக்குத் தெரியாது. எல்லா குறட்பாக்களும் மொழிபெயர்க்கப்பட்டதா? தெரியாது. யாருடைய உரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டது? தெரியாது. இலத்தீன், ஆங்கில மொழி பேசுபவர்கள் எல்லாம் இதைப் படித்தார்களா? தெரியாது. இந்த நூலுக்கு அங்கே என்ன வரவேற்பு? தெரியாது. இது எல்லாம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தமிழக வரலாறு; தமிழக வரலாறு என்றால் நாம் சேர சோழ பாண்டியர் வரலாறு, நாயக்கர் சாளுக்கியர் வரலாறு வரைக்கும் கூட நமக்கு ஓரளவிற்கு தெரியும் ஆய்வுகள் இருக்கின்றன. அவையெல்லாம் இருக்கின்றன. ஆனால் ஐரோப்பியர் வருகை என்று வந்தவுடன் சுருக்கமாகச் சொல்லிவிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு வேகமாகப் போய்விடுகிறோம்.

இது ஆராய்ச்சிக் களமாக இருந்தாலும், இந்த ஆராய்ச்சியிலும் சமூகநீதி செய்வோம் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் தான் ,இந்தத் திராவிடப்பொழில் ஆய்விதழை ஆசிரியர் அவர்கள் இதன் நோக்கமாக வைத்துச் செலுத்திக்கொண்டிருக்கிறார். ஒரு கப்பலுடைய கேப்டன், கேப்டனுக்கு தமிழில் வலவன் என்ற சொல், அந்த வலவன் போல அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது கூட நீட் தேர்வை எதிர்த்துக் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பாரிசில் என்னோடு வேலை பார்க்கும் Nathanael de Ménochet என்னும் பேராசிரியர். நானும் அவரும் நண்பர்கள். அவருக்கு 85 வயது. ’எப்படி இவரால் (ஆசிரியர் வீரமணியால்) இவ்வளவு பயணிக்க முடிகிறது?’ என்று கேட்டார். அந்த அளவுக்கு வியந்து பிற நாட்டு அறிஞர்களும் வியந்து நமது முயற்சிகளைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல தளங்களிலும் இதை முன்னெடுத்துச் செல்வோம் என்று சொல்லி இரண்டு கட்டுரைகளை - நான் சொன்னதைப் போல ஆற்றிலிருந்து கழனிக்குக் கொண்டு செல்லும் பணியை - தோழர் ஜெயாமாறன் அவர்களும் அமரன் அவர்களும் செய்ய இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார்.

ஆனால் இந்த ஐரோப்பியர்கள் வருகையால் எத்தனை சமய, சமூக, வாழ்வியல் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தன; அவர்கள் வணிகத்திற்கு மட்டும் வரவில்லை. கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்தார்கள் என்றாலும் எளிய மக்களோடு பழகினார்கள். தமிழைப் படித்தார்கள். அவர்களின் மொழிக்கும் தமிழுக்குமான அகராதிகளை உருவாக்கினார்கள்; தமிழ் இலக்கணங்களை ஒழுங்குபடுத்தினார்கள். எழுத்துக்களைக் கூட மாற்றி அமைத்தார்கள். வீரமாமுனிவர் அப்படி மாற்றிய எழுத்துக்களை நாம் இன்றைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தமிழ் படித்தது மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்களை முக்கியமாகத் திருக்குறளை அவர்கள் மொழியில் மொழி பெயர்த்தார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டை விட்டு தமிழ் வெளியே பரவியது. எல்லாவற்றுக்கும் மேல ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கும் பழக்கம் போய் அச்சிட்டு பதிப்பிக்கும் பழக்கம் வந்தது. இவை அனைத்தும் ஐரோப்பியர் வருகையால் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகள். தமிழ் பண்பாட்டில் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வுகள்.

இதையெல்லாம் மேலெழுந்த வாரியாக நாம் பார்த்துவிட்டுப் போய்விடுவோம். ஆனால் இதைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகள் இல்லை என்று சொல்கிறார் சுபாஷினி. அந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும், திருக்குறளை மொழி பெயர்ப்பது பற்றிப் பெருமைப்படுவதோடு நின்று விடாமல், அந்தப் புத்தகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற காரணங்களுக்காகவும் ஜெர்மானிய (இடாய்ச்சு) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு திருக்குறள் புத்தகங்களை ஆய்வு செய்கிறார் இந்தக் கட்டுரையில். அப்படி அவர்கள் ஆய்வு செய்கின்ற இரண்டு புத்தகங்கள் 1823ல் ஃப்ரெடிக் காம்மெரர் என்பவர் எழுதிய மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்று. 1856ல் டாக்டர் கார்ல் கிரவுல் என்பவர் எழுதிய மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் இன்னொன்று. இந்த ஜெர்மானிய மொழியை நாமெல்லாம் ஜெர்மன் என்று தான் சொல்லுவோம். அந்த ஜெர்மானிய மொழியின் ஜெர்மானியப் பெயர் இடாய்ச்சு என்பதே நான் இந்த கட்டுரையைப் படித்ததன் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன்.

1612-ஆம் ஆண்டில், ஈஸ்ட் இந்தியா கம்பெனி போலவே, தாமும் இந்தியாவில் வணிகம் செய்ய வேண்டும் என்று இடாய்ச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனி, தஞ்சாவூரில் ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னர் என்பவரிடம் பேசி, தரங்கம்பாடியில் உள்ள ஒரு பகுதியை ஆண்டுக்கு 311 ரூபாய் கட்டணம் செலுத்தி, அந்தத் தரங்கம்பாடி என்னும் சிறு பகுதியை வாங்குகிறது. அந்த இடாய்ச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் கொடி தரங்கம்பாடியில் பறக்கிறது. வணிகம் செய்து கொண்டிருக்கும் போது வணிகம் மட்டும் போதாது என்று 1706இல் இரண்டு ஜெர்மானிய மூத்த பாதிரிமார்கள் வருகின்றார்கள் தமிழ்நாட்டுக்கு. அவர்களின் பெயர் சீகன் பால்க் மற்றும் ப்ளெட்சோ. இவர்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1500களில் போர்ச்சுகல், இத்தாலி, பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவ பாதிரிமார்கள் வந்திருக்கிறார்கள். இங்கு வந்து, தென் தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் மதத்தைப் பரப்புகிறார்கள். தமிழைப் படித்து மக்களோடு பழகி அடித்தட்டு மக்களுக்கு கல்வி தந்து மதத்தை பரப்புகிறார்கள்.

அவர்களை மாதிரியே தாமும் லூத்தரன் கிறித்துவத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்குத் தான் சீகன் பால்க்கும் ப்ளெட்சோவும் வருகின்றார்கள். இவர்களும் வந்து தமிழைப் படித்து இடாய்ச்சு மொழிக்கும் தமிழுக்குமான அகராதியை உண்டாக்கி எளிய முறையில் தமிழ் இலக்கண நூல்களை எழுதி, தமிழ் இலக்கியங்களை முக்கியமாக திருக்குறள் போன்றவற்றைப் படிக்கிறார்கள். அப்படிச் சீகன் பால்க் அவர்கள் படிக்கும் போது, (வீரமாமுனிவர் மொழிபெயர்ப்பு கிடையாது அது; 1730இல் தான் வருகிறது) சீகன் பால்க் அவர்கள் ஓலைச்சுவடியில் இருந்து நேரடியாகவே திருக்குறளை படிக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் வீரமாமுனிவருடைய மொழிபெயர்ப்பு தான் முதன் முதல் திருக்குறளை மொழி பெயர்த்ததாக இருக்கும் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல, வீரமாமுனிவர் அவர்கள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் தான் மொழிபெயர்த்தார். காமத்துப்பாலை அவர் மொழிபெயர்க்கவில்லை என்னும் செய்தியும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படித் தான் லூதரன் பாதிரிமார்கள் தமிழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். அப்படி கொஞ்சம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர் தான் ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்னும் பாதிரியார். அவரும் தரங்கம்பாடிக்கு வருகிறார். அவர் 1803ஆம் ஆண்டு திருக்குறளை இடாய்ச்சு மொழியில் மொழிபெயர்க்கிறார். இந்தப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் உள்ள நூரன்பெர்க் நகரில் அச்சிடப்படுகிறது. நன்றாகக் கவனிக்க வேண்டும் 1812ல் தான் எல்லீஸ் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்துள்ளது. அதற்கு முன்னாடியே 1803இல் ஜெர்மனிய மொழிபெயர்ப்பு வந்துவிட்டது. இதைப் பற்றிய செய்தி 1807இல் ஜெர்மனி நாட்டில் வெளிவந்த இலக்கிய நாளேடு ஒன்றில் செய்தி இருக்கிறது. செய்தியோடு திருக்குறள் நூலை பற்றிய விவரங்களும் அந்த இலக்கிய நாளேட்டுச் செய்தியில் உள்ளது.

அந்த நூலில் உள்ள விவரங்கள் தான் என்ன? அந்த நூலில் முதலில் ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் அவர்கள் தன்னுடைய அறிமுக உரையை கொடுக்கிறார். அந்த அறிமுக உரையில் என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள தெய்வ வழிபாடுகள், சமூக நிலைகள், இலக்கியம் என இவற்றையெல்லாம் சொல்கிறார். அதற்கு அடுத்து திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றிய சில தகவல்களைச் சொல்கிறார். அவர் அதை எங்கிருந்து எடுக்கிறார் என்றால் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த வள்ளுவர் பற்றிய கதைகளை வைத்து அவர் திருவள்ளுவர் வாழ்க்கையை எழுதுகிறார். அதற்கு அடுத்து 1330 குறட்பாக்களுக்குமான மொழிபெயர்ப்பை 10, 10 குறட்களாக வரிசையாகக் கொடுத்திருக்கிறார். இதுதான் ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் அவர்களின் திருக்குறள் பற்றிய மொழிபெயர்ப்பு நூல்.

இவருக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு தரங்கம்பாடிக்கு, ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் வருகின்றார். இவர் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இவர் 1856இல் இடாய்ச்சு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிடுகிறார். ஒரே நேரத்தில் ஜெர்மனியின் லைப்ஸிக் நகரில் இருக்கிற பதிப்பகம் மற்றும் லண்டனில் இருக்கிற பதிப்பகத்தாலும் இந்தப் புத்தகம் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இவர் சொல்கிறார்: ”நான் எல்லிஸ் அவர்கள் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தேன். அதில் 13 அதிகாரங்கள் ஆங்கில மொழிபெயர்ப்போடு இலக்கண குறிப்புகளோடு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறார். இப்போது நமக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிகிறது. வீரமாமுனிவர் அறத்துப்பாலையும் பொருட்பாலையுயம் மட்டும் தான் மொழிபெயர்த்தார். எல்லிஸ் அவர்கள் 13 அதிகாரங்களைத் தான் மொழி பெயர்த்தார். ஆனால் ஜெர்மன் மொழிபெயர்ப்புகள் தான் 1330 குறளையும் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்புகள்.

இடாய்ச்சு மொழியில் இவர் ஒரு தலைப்பு வைத்திருக்கிறார். அதனுடைய தமிழாக்கத்தையும் டாக்டர் சுபாஷினி கொடுத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் 'திருவள்ளுவரின் குறள்'. மனித வாழ்வின் மூன்று முக்கிய போராட்டங்களைப் பற்றிய செய்யுட்கள் எனத் தமிழில் மொழி பெயர்க்கலாம; இந்தப் புத்தகத்தைக் கார்ல் க்ரவுல் எழுதியிருக்கிறார். அட்டையில் ஆசிரியரின் பெயர் இருக்கிறது. அவர் வகித்த பதவிகள் இருக்கின்றன. அவர் லூதரன் மிஷனரியில் ஓர் இயக்குநராக இருந்திருக்கிறார். கீழ்த்திசை நாடுகளில் இறை இயல் அமைப்பின் ஓர் உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்த இரண்டு ஜெர்மானிய புத்தகங்களுடைய அட்டையும் திராவிடப் பொழில் இதழில் முனைவர் சுபாசினி அவர்களின் கட்டுரையில் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நூலுக்குள் போகலாம். அந்த நூலில் பதிப்பாசிரியர் உரை என்று இரண்டு பக்கம் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறார். என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் தான் கற்ற நல் ஒழுக்கநூலை ஜெர்மானிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு இதை எழுதியிருக்கிறேன். தமிழகத்தைச் சொல்கின்ற போது தமிழர்களின் நாடு என்றே குறிப்பிடுகிறார். அப்போதே அப்படி எழுதுகின்றார். அப்புறம் அறிமுக உரை கொடுக்கின்றார். அது பத்து பக்கம் இருக்கின்றது. அதில் அந்தக் காலகட்டத்தில் திருக்குறளை வேறு யாரெல்லாம் மொழி பெயர்த்தார்கள் என்பதையும் அவர் சொல்கின்றார். அப்படிச் சொல்கின்ற பொழுது மெட்ராஸில் அந்தக் காலத்தில் பாதராக இருந்த ரெவரண்ட் ட்ரூ என்பவர், ஆங்கிலேயர், 24 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கி, 1852 இல் வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் 1852-ல் வெளிவந்திருக்கிறது. அதே மாதிரி பிரான்ஸ் நாட்டின் ஏரியல் என்பவர் ஜர்னல் ஆசியாட்டிக் (Journal Asiatique) என்னும் இதழில் திருக்குறள் பற்றிய தெளிவுரையைத் தொடராக எழுதி வந்திருக்கிறார். அவரும் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒரு தொடராக எழுதியிருக்கிறார். அதைப் பற்றியும் கார்ல் க்ரவுல் எழுதியிருக்கிறார்.

அடுத்ததாக பரிமேலழகர் உரையைப் பற்றிய தன்னுடைய கருத்தை விளக்க உரையாக இரண்டு பக்கத்திற்குக் கொடுக்கிறார். எல்லா உரையாசிரியர்கள் பற்றிய அறிமுகமும் இருந்திருக்கிறது என்றாலும், பரிமேலழகர் உரையை வைத்துத் தான் இவர் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. நல்ல ஒழுக்கம், நற்பண்புகள், காமம் அதிலிருந்து மீளும்வழி இவை எல்லாம் தான் திருக்குறள் சொல்லும் முக்கிய செய்திகள் என்று சொல்லித் தன்னுடைய புரிதலுக்கு ஏற்ப ஒரு விளக்கத்தை அவர் அந்தப் பக்கங்களில் கொடுத்து இருக்கிறார். அப்புறம் ஒவ்வொரு திருக்குறளுக்கும் மொழிபெயர்ப்பு சில கடினமான சொற்களுக்கு விளக்க உரையும் அந்த புத்தகத்தில் இருக்கிறது. கடைசியாகத் திருவள்ளுவரின் வரலாறு அந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

இவரும் அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட கதைகளைத் தான் திருவள்ளுவர் வரலாறாக மொழி பெயர்த்திருக்கிறார். பல கதைகள் திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி உண்டு. இவர் இரண்டு கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்த்து இருக்கிறார். ஒன்று வேட்டைக்காரன் முதலியார் என்பவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறு என்னும் கதை. மற்றொன்று சரவணப் பெருமாள் ஐயர் என்பவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறு கதை. இரண்டுமே அதீத கற்பனையோடு பார்ப்பனீய வர்ணக் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் புனையப்பட்ட கதைகளாகத் தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்துத் திருவள்ளுவருடைய வரலாற்றைச் சொல்ல முயற்சி செய்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.

மொத்தம் 236 பக்கங்கள் இந்தக் கார்ல் க்ரவுல் அவர்களின் புத்தகம். இந்த இரண்டு புத்தகங்களையும் முனைவர் சுபாஷினி அவர்கள் முன்னுரையோடு தமிழ் மரபு அறக்கட்டளை 2019ல் மறு பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். சரி இந்த புத்தகங்களைப் பற்றிய விவரங்களை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஜெர்மனியில் மட்டுமல்ல இடாய்ச்சு மொழி பேசப்படும் டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் பொதுமக்கள் வாசிப்பதற்காகவும் ஆய்வாளர்களுக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகங்கள் திருவள்ளுவரைப் பற்றிய சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அது நம்முடைய கடமை என்று ஐயத்திற்கு இடம் இல்லாமல் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறார்கள் சுபாஷினி அவர்கள். நம்மை நாமே வியந்து கொண்டு இருக்காமல் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையையும் விழிப்புணர்வையும் இந்தக் கட்டுரை தருகிறது" என்று குறிப்பிட்டு ஆய்வுரையை முடித்தார்.

கட்டுரையாளர் சுபாஷினி அவர்கள் ஏற்புரை: "அனைவருக்கும் வணக்கம். சிறப்பாக எனது கட்டுரையை வாசித்து அதனை உள்வாங்கிக் கொண்டு அந்த உணர்வுகளோடு அதனை வெளிப்படுத்திக் கட்டுரையில் உள்ள அனைத்தையும் அறிமுகம் செய்து வைத்த ஜெயாமாறன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நான் ஜெர்மனிக்கு 1991ஆம் ஆண்டு வந்து சேர்ந்தேன். அப்பொழுது எனது உயர் கல்விக்காக இங்கு வந்து சேர்ந்தேன். இந்த நேரத்தில் தமிழுக்கும் ஜெர்மானிய மொழிக்கும் ஒரு தொடர்பு இருக்கும் என்ற செய்தியே எனக்குத் தெரியாது. எல்லோரும் வருவது போல உயர்கல்விக்காக வந்து சேர்ந்தேன். ஆனால் என் வாழ்க்கையில் என் ஆய்வுப் பயணத்தை மாற்றிய ஒரு பெரிய விஷயத்தை ஒரு நூல் செய்தது. அதாவது ஜெர்மன் தமிழாலஜி என்னும் ஒரு நூல் எனக்குப் பரிசாகக் கிடைத்தது.

இதனை எழுதியவர் சி. எஸ். மோகனவேலு என்ற ஆய்வறிஞர். இந்த நூல் எனக்கு 2006ஆம் ஆண்டு கிடைத்து, 2007 ஆம் ஆண்டு இந்த நூலை வாசித்த பிறகு தான், ஜெர்மனிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் தொடர்பு இருக்கிறது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக ஜெர்மனியின் பல பகுதிகளுக்குச் சென்ற போது, ஒவ்வொரு பகுதிக்கும் செல்லுகின்ற போது, அங்கு இருக்கக்கூடிய ஆவணப் பாதுகாப்பு மையங்களுக்கும் செல்லுகின்ற போது, நிறைய தொடர்புகள் கிடைத்தன. அதாவது டென்மார்க் அல்லது ஸ்வீடன், பின்லாந்து அல்லது பிரான்ஸ் என்று ஒவ்வொரு நாடுகளில் இருக்கும் ஆவணங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்தத் தேடுதலை விரிவுபடுத்தி இங்கு கொடுத்தவை இவை. அப்படித் தேடுகின்ற பொழுது திருக்குறள் பற்றிய புதிய புதிய செய்திகள் எனக்குக் கிடைக்க ஆரம்பித்தன. அதன் தொடர்பாக எழுதிய கட்டுரை தான் இந்தக் கட்டுரை.

திருக்குறள் என்பது நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். அதாவது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சமண மடங்கள், பௌத்த மதங்கள், வைணவ மடங்கள் எனப் பல மடங்கள் இருக்கின்றன. ஆனால் நான் பார்த்தவரை எந்தச் சமய மடத்திலும் திருக்குறளை ஓலைச்சுவடி வடிவத்தில் பார்த்ததில்லை. இந்தத் திருக்குறள் என்பது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான தாக்கங்களை எதிர்கொண்டு, ஆனால் பாதுகாப்பாக ஏதோ சில குழுக்களால் பாதுகாக்கப்பட்டு, அது படிப்படியாக நம் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதை இப்போது என்னால் உறுதியாக கூற முடிகிறது. எனது ஆய்வுகளைப் பார்க்கின்ற பொழுது ஏறக்குறைய கிபி 15ஆம் நூற்றாண்டு - அந்தக் காலகட்டத்தில் இருந்து, அதாவது கத்தோலிக்க பாதிரிமார்கள் தரங்கம்பாடியில் அவர்களுடைய குறிப்புகளில் இருந்து தான் முதலில் திருக்குறளைப் பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். ஆக அதற்குப் பிறகு படிப்படியாக நாம் பார்க்கின்ற பொழுது வீரமாமுனிவர் அவருடைய முயற்சிகள், அதற்கு பிறகு எல்லீஸ் அவர்களின் முயற்சிகள் என்று பாதுகாக்கப்பட்டு கடந்த நூற்றாண்டில் மிகப் பரவலாகத் தமிழ்நாட்டில் திருக்குறள் என்ற ஒன்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இன்று உலகளாவிய வகையில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஓர் அடையாளமாகத் திருவள்ளுவர் திருக்குறள் என்பது இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

இன்று ஜெர்மனியில் எடுத்துக் கொண்டால், இன்றைக்குக் கூட அகம் புறம் என்ற ஒரு கண்காட்சி ஒரு ஆறு மாதம் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது நான் வசிக்கின்ற இப்பகுதியில், தமிழுக்காக, தமிழின் சிறப்பிற்காக என்று 2019ல் திருவள்ளுவரின் ஐம்பொன் சிலைகளை இங்கு நிறுவினோம். அதற்கு அடுத்து கோவிட் பிரச்சனை வந்ததால் எந்த நிகழ்வுகளும் இல்லை. இப்போது தமிழுக்கு என்று உலகில் அதாவது முதன்முறையாக ஆறு மாதம் நடக்கின்ற தமிழின் சிறப்புகளைக் கூறுகின்ற ஒரு கண்காட்சியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைக்குக் குறிப்பாக பண்பாட்டு விடயங்களில் மரபு விளையாட்டுகளை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். எனவே திருக்குறள், திருவள்ளுவர், தமிழ்மரபு என்ற விடயங்களை ஜெர்மானியர்களும் பேச வேண்டும், அதாவது அந்த 400 ஆண்டுகால பண்பாட்டுத் தொடர்ச்சியை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பாடுகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்புரை ஏற்றுப் பேசுவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன். மிகவும் சிரமமாக இருந்த ஒரு காலகட்டத்தில், ஐரோப்பியர்கள் குறிப்பாக ஜெர்மனியர்கள் குட்டன்பெர்க், அவர் தான் 1450-ல் அச்சு இயந்திரத்தை உருவாக்குகின்றார், மைன்ஸ் நகரில். நான் வசிக்கும் இடத்திலிருந்து ஏறத்தாழ 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த அச்சு இயந்திரம் என்பது பைபிள் நூல்களை அச்சாக்கம் செய்து உலகளாவிய அளவில் பைபிளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக வந்தது. ஆனால் தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு அது வந்த பொழுது, அது தம்பிரான் வணக்கம் என்ற நூல் வழியாக பல நூல்கள் அச்சாக்கம் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது என்பதைப் பார்க்கிறோம். இந்தியாவிலேயே முதன்முதலாக வெளிவந்த நூல் தமிழில் வந்த நூல் தம்பிரான் வணக்கம். அந்த வகையில் அச்சு இயந்திரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு சமூகமாகவும் நாம் இருந்திருக்கிறோம்.

பல விடயங்கள், அதாவது ஐரோப்பியர்கள் வருகை என்பது பற்றி இந்த நூற்றாண்டில் பலர் அதிகமாகப் பேசவில்லை என்பதைப் பார்க்கின்றோம். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பது போல, வரலாற்று ஆசிரியர்கள் வலிந்து திணிக்கிறார்கள். வலிந்து திணிப்பது எதில் இருக்கிறது என்றால் மன்னர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம் என்பதில் தான் இருக்கின்றது. வரலாறு என்பது எது என்ற கேள்வி நமக்கு வருகின்றது. மன்னர்களைப் பற்றி யாரெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற வகையில் இருக்கிறார்களோ அவர்கள் சொல்வது தான் வரலாறா? சாமானிய மக்கள் வாழ்க்கை என்பது வரலாறு இல்லையா? என்ற கேள்வி நம் முன்னே வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஐரோப்பியர்கள் செய்ததற்கும் இங்கே தமிழகத்தில் நாம் செய்ததற்கும் உரிய ஆவணங்களைப் பார்க்கின்ற பொழுது பல வேறுபாடுகளை நம்மால் காண முடிகின்றது.

கல்வெட்டுக்கள் கூறுவதெல்லாம் மன்னர்களுடைய ஆட்சியைப் பற்றி. இங்கு ஐரோப்பியர்களோ சீனர்களோ அல்லது அரபியர்களோ அவர்களுடைய ஆவணத்தைப் பார்க்கின்ற பொழுது நாம் காண்பதெல்லாம் சாமானிய மனிதர்களின் வலிகள், சாமானிய மனிதர்களின் செயல்பாடுகள், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை, அவர்களின் உணவு, அவர்களுடைய தேவைகள், அவர்களின் குடும்ப விடயங்கள் என்ற பல்வேறு செய்திகளை நாம் காண முடிகின்றது. ஆக அந்த வகையில் பார்க்கின்ற பொழுது, ஐரோப்பியர்கள் பார்வையின் வழியாக நாம் தமிழ் பாரம்பரியத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 600 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் வாழ்நிலையை அறிந்து கொள்வது என்றால் ஐரோப்பியர்களோ சீனர்களோ அல்லது அரபியர்களோ இல்லாமல் நாம் அந்தச் சரியான வரலாற்றை நிச்சயமாக அந்தப் புள்ளிகளை இணைக்க முடியாது என்பது உறுதி. இதை நாம் அறிந்து கொள்ளத் தான் வேண்டும்.

எனவே அந்த வகையில் செல்லும்போது நமது வரலாற்றை முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை நம்மால் காண முடிகிறது. அந்த வகையில் நாம் காண்கின்ற பொழுது நம் பார்வை எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று நான் யோசிக்கிறேன் என்றால், எல்லிஸ் அவர்களை நமது பார்வை சென்று அடைய வேண்டும். ஏனென்றால் அவர் காலத்தில் தமிழுக்காக அவர் செய்த பல விடயங்கள். ஒரு குறிப்பிட்ட மக்களால் யார் என்று நம்மால் இப்போது சொல்ல இயலாது, நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டவர் எல்லீஸ் என்பது நமக்கு எல்லாம் தெரியும். ஆக அதைப் பற்றி அதிகமாக பேசப்படவில்லை. அதற்கான காரணங்களை நாம் தனியாக இன்னொரு முறை கூட பேசலாம். தமிழுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை செய்தவர் அவர் என்று நாம் பார்க்கிறோம். அதனால் பல்வேறு விடயங்கள் நாம் செய்வதற்கு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டு சொன்னது என்னவென்றால், இந்த கார்ல் க்ரவுல் அவர்களுடைய நூல் எந்த வகையில் அமைந்திருக்கிறது, ஆனால் தற்சமயம் இங்கே ஜெர்மனியில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அல்லது தமிழை விரும்பிப் படிக்கின்ற மக்களுக்கு நாம் எதை வழங்க வேண்டும் என்றால், திருத்தி அமைக்கப்பட்ட படைப்புகளை படைக்க வேண்டும்; ஒரு மொழிபெயர்ப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது என்ற கருத்தை நான் கூறுகின்றேன். அந்த வகையில் இந்த இரண்டு நூல்கள் அதாவது கார்ல் க்ரவுல் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பாக வந்தது; ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் அவர்களின் நூலும் வந்தது. ஒரு நூலைக் கூறி நான் நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். தமிழில் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறள் இருக்கிறது. அதனை ஜெர்மனிய மொழியில் (இடாய்ச்சு மொழியில்) நான் சொல்வதென்றால்..... (இடாய்ச்சு மொழியில் அதனை வாசித்தார்) இதனை சரியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.

இப்போது நாம் ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாக பலரும் இருக்கிறார்கள். பிரான்ஸ் எடுத்துக் கொண்டால் பிரஞ்சு மொழி தெரிந்த பலரும் இருக்கின்றார்கள். இப்படிப் பல்வேறு மொழிகளில் படிக்க முடிகின்ற ஒரு காலகட்டத்தில் இருக்கின்ற பொழுது அதில் பிழைகளற்ற வகையிலான, தவறில்லாத ஒரு மொழிபெயர்ப்பு என்பது நமக்குத் தேவை. ஆக இந்த நூலை முழுமையாகப் படித்தபோது அதிலிருக்கும் பல கருத்துக்கள் எனக்குச் சரியாக இருந்தாலும் கூட, திருவள்ளுவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இருக்கக்கூடிய இந்தப் பகுதி என்பது சரியாக அமையவில்லை. அதாவது எப்படிச் சரவண பெருமாள் ஐயரும், விசாகப் பெருமாள் அய்யரும் கட்டுக்கதைகள் கட்டி திருவள்ளுவரைத் தாழ்த்த வேண்டும் என்று நினைத்தார்களோ, அதை எல்லாம் உள்வாங்கியே இந்த மொழிபெயர்ப்பை அவர் செய்திருக்கிறார் என்ற உண்மையையும் என்னால் உணர முடிந்தது. ஆக அப்படி இருந்தாலும் கூட இந்த நூல் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியோடு செய்திருக்கின்றார்கள். ஆக அந்த முயற்சி எல்லாம் பாராட்டிய அதே வேளையில், நாம் தமிழக அரசோடு இணைந்து இந்த மொழிபெயர்ப்புகளை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் சீனம் மற்றும் அரேபிய மொழிகளிலும் செம்மைப்படுத்திய வகையில் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது என்ற கருத்தை சொல்லிக்கொண்டு வாய்ப்பிற்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த நிகழ்வு வழியாக உங்களை எல்லாம் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறேன்" என்று உரையாற்றினார்.

மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் ஆய்வுரை: "அருமைத் தமிழ் நெஞ்சங்களே, தலைமை தாங்கும் மோகன் வைரக்கண்ணன் அவர்களே, வந்துள்ள பெரியோர்களே, துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே, அனைவருக்கும் வணக்கம்.

இந்தத் திராவிடப் பொழில் இதழ் நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நம்முடைய திராவிட சித்தாந்தத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் வருகின்றது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கொண்டிருக்கிறது. இந்த இதழின் அட்டைப்படம் கனடாவில் நடந்த மனிதநேய சமூகநீதி மாநாட்டை ஒட்டி, அங்குள்ள கனேடிய மனிதநேய அமைப்போடு இணைந்து நடத்தியதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அட்டைப் படமாக மாநாட்டிற்கு முன்பே போடப்பட்டது. இந்த இதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் வரவேண்டும், அப்படி வரும் கட்டுரைகள் சிறப்பான கட்டுரைகளாக, ஆதாரபூர்வமான எழுத்துக்களாக இருக்க வேண்டும் என்பது நோக்கம்.

தனிநாயக அடிகளார் ஓர் அருமையான ஆங்கில இதழை நடத்தி வந்தார் அவருடைய எண்ணமெல்லாம் தமிழைத் தமிழர்கள் பாராட்டுவது பெரிதல்ல, மற்றவர்கள் தமிழைப் பற்றிச் சொல்ல வேண்டும்; உலகம் தமிழைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், உலக அறிஞர்கள் தமிழைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். அதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் 108 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1968-ல் நடத்தினார். அந்த மாநாட்டை நேரே பார்த்து மகிழ்ந்தவன் நான். இந்த அளவிற்கு நாம் செல்ல வேண்டுமென்று, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று ஆரம்பித்துள்ளோம். இதை எடுத்துச் செல்ல வேண்டியது இங்கு வந்துள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு.

இப்போது தமிழர்களின் பொற்காலம் ஆரம்பித்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். அதற்கான எல்லா அறிகுறிகளும் ஆட்சியிலிருந்து எல்லாமே தெரிகிறது. நாம் ஒரே ஒரு கீழடியைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஆனால் பல கீழடிகள் உள்ளன என்பதை உலகெங்கும் காட்டிக்கொண்டு வருகின்றார் நம்முடைய சுபாஷினி அவர்கள். அவரின் ஆராய்ச்சிகள் இலக்கியத்திலே கீழடிகள். எந்தெந்த மொழிகளிலே தமிழ் இருக்கிறது, தமிழன் எங்கெல்லாம் சென்றான், எங்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்தில் இருந்து மற்றும் பல நாடுகளில் இருக்கும் ஆதாரங்களை அவர் சிறப்பாகக் காட்டி வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல். ஒரு தொண்டாகத்தான் அவர் இதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய கட்டுரையை நானும் படித்தேன். ஆனால் ஜெயா மாறன் ஒரு கருத்தையும் தவறாமல் அதன் ஆழத்தைப் புரிந்து கொண்டு அவ்வளவு சிறப்பாக வெளிக்கொணர்ந்தது, உண்மையிலேயே புத்தக ஆராய்ச்சி புத்தக ஆய்வு என்பதற்கு, அதற்குரிய ஒரு பரிசு இருக்குமானால் முதல் பரிசு ஜெயாமாறன் அவர்களுக்கு தான்.

முதலில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். முதலில் பாராட்டப்பட வேண்டியது எதற்கு என்றால், அவர் சொர்ணம் நேரு அன்புமணி. சொர்ணம் அம்மா, நேரு அப்பா, அன்புமணி. பாராட்டுக்கள். இதை நாங்கள் எல்லாம் கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம். வரும் தலைமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அய்யா நேரு பல விதங்களிலே தமிழ்ப் பணியாற்றி வருகின்றார்கள். அவர் ஓய்வு பெற்றது, நாங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி திராவிடப் பொழிலுக்கு பல வேலைகளைச் செய்து வருகின்றார்கள். அய்யா கண்ணபிரான் இரவிசங்கரோடு இணைந்து இதில் சிறப்பான கட்டுரைகள் வர வேண்டும் என்பதற்காக, துணைவேந்தர் அய்யா ஜெகதீசன் போன்றவர்களோடும் இணைந்து செயல்படுகிறார். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி - ஐயா பேராசிரியர் நாகநாதன் அவர்கள் இங்கு ஆசிரியர் குழுவில் இணைந்து வழிநடத்த உள்ளார் என்பதை மிகவும் பெருமையாக மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொழுது கட்டுரைக்கு வருகின்றேன். திராவிட மொழியில் பெரிய அறிஞர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் அறிஞர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய திறமையும் வெளிவர வேண்டும் என்பதற்காகத் தான் இளைய தலைமுறையினரிடம் கட்டுரைகள் வாங்கி வெளியிடுகின்றோம். அந்த வகையில் இதில் மிகவும் சிறப்பாக அன்புமணி அவர்கள் கல்வியைப் பற்றி எழுதி இருக்கின்றார். ஒரு காலத்திலே பல பெண்கள் முதற்கொண்டு கவிஞர்களாக இருந்தார்கள் சங்க இலக்கியங்களிலே. என்ன ஆனது? இன்று சங்கங்கள் எல்லாம் சாதிச் சங்கங்களாக மாறிவிட்டன. சங்கங்கள் எல்லாம் தமிழ்ச் சங்கங்களாக இயங்குகின்றனவா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும்படி கல்வி எங்கே இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? எங்கே செல்ல வேண்டும் என்பதைச் சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதி உள்ளார் அதை நான் தமிழில் கூறுகின்றேன்.

அவருடைய கட்டுரையின் ஆரம்பமே தந்தை பெரியார் அவர்களுடைய கல்விக்கான இலக்கணம் பற்றி. கல்வி என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும்? கல்வி என்பது பகுத்தறிவையும் சுயமரியாதையையும் பயிற்றுவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இரண்டு சொல்கின்றார் - ஒன்று பகுத்தறிவும் சுயமரியாதையும் இருக்க வேண்டும். இரண்டாவது அதனைப் படிப்பதனால் அவனுடைய வாழ்க்கை முன்னேறி ஒரு தொழில் செய்யவும் வேலை செய்யவும் பயன்பட வேண்டும் என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் சொல்லி இருக்கின்றார். திராவிடம் என்று இன்று நாம் பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அந்தக் காலத்திலேயே எப்படி இருந்தது? ஒரு காலத்திலே எவ்வளவு மோசமான நிலையை அடைந்து விட்டோம் என்றால் தமிழ்நாட்டிலேயே சமஸ்கிருதம் பேசினால் தான் மரியாதை. இப்பொழுது எப்படி நுனிநாக்கு ஆங்கிலம் பேசினால் மரியாதை என்று நினைக்கின்றோமோ அப்படி சமஸ்கிருதம் பேசினால் தான் மரியாதை என்று இருந்தது. என்னுடைய தந்தையார் எல்லாம் சமஸ்கிருதம் படித்து தினமும் சமஸ்கிருத வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்க கூடிய அளவிற்கு கொண்டு வர முயன்றார்கள். பேசுவதும், எழுதுவதும் தமிழா சமஸ்கிருதமா என்ற அளவிலே திருமண அழைப்பிதழ்கள் சில தமிழ் வார்த்தைகள் பெரும்பாலும் சமஸ்கிருத வார்த்தைகள் என்றிருந்தன.

தமிழ் அறிஞர்களுக்குச் சரியான மரியாதை தரப்படவில்லை. சமஸ்கிருதம் படித்திருந்தவர்களுக்கே தரப்பட்டது. இதையெல்லாம் மாற்றி தமிழர்கள் மீண்டும் கல்வியில் சிறக்க வேண்டும் என்பதற்காக சர் பி டி தியாகராயர் அவர்கள் முதன் முதலில் சென்னை மாநகராட்சியில் (அப்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன்) குழந்தைகள் படிப்பதற்கு உணவு அதாவது மதிய/காலை உணவு என்று சொல்கிறோமே அதை ஆரம்பித்தார்கள். அவர் கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் உதவி செய்தார். அங்கு படிப்பதற்கு மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள் பலர். அதில் முக்கியமானவர் அய்யா நடேசனார் அவர்கள். மாணவர்கள் தங்கிப் படிக்குமாறு விடுதியை ஏற்படுத்தியவர் மற்றும் பலர் செய்த உதவிகளையும் அப்படியே பட்டியலிட்டு அன்புமணி காண்பித்து இருக்கிறார். நாம் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன்.

அன்புமணி ஆராய்ச்சியில் மிகவும் சிறப்பாகச் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்களில் ஒன்று, தாய் மொழியில் கற்க வேண்டும். யார், யார் தாய் மொழியில் கற்று அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் எல்லாம் எப்படி வந்திருக்கிறார்கள், உலக அறிஞர்கள் எப்படித் தாய் மொழியில் கற்று அதனைப் பயன்படுத்திப் பின்னர் உயர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த கருத்து, குழந்தைகளின் வளர்ச்சியில் யார் தலையிடுவது? எப்படி தலையிடுவது? என்பதாகும். இன்று நமக்குள்ள பெரிய இடர்ப்பாடு அது தான். குழந்தைகள் படிக்கிறார்களா பெற்றோர்கள் படிக்கிறார்களா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கிறது. இங்கே நடத்திய தேர்விலேயே நாங்கள் வந்து இந்தக் கட்டுரை குழந்தையால் எழுதப்பட்டதா அல்லது பெற்றோர் எழுதினாரா என்ற அளவிற்கு வந்துவிட்டது. எவ்வளவு தூரம் குழந்தைகள் படிப்பில் பெற்றோர்கள் தலையிடுவது என்பதற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டிலே பிள்ளைகள் சிந்திப்பது அவருடைய சொந்த சிந்தனையாக இருக்க வேண்டுமே தவிர பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கக் கூடாது. அதனைச் சிறப்பாக சொல்கிறார்.

பின்லாந்து நாட்டிலே எப்படி கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதைச் சிறப்பாக சொல்லி இருக்கிறார். ஓர் ஆசிரியர் பயிற்சிக்கு பின்லாந்து நாட்டிலே ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று தேர்வு பெற்றவர்கள், சிறப்பானவர்கள் மட்டும் தான் ஆசிரியர்களாக வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தான் ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். நம் நாட்டிலே எப்படி ஆகிவிட்டது என்றால் மற்ற எதற்குமே பயனில்லாதவர்கள் (கூட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்) மட்டுமே ஆசிரியர் தொழிலுக்குப் போக வேண்டும் என்பது போல வந்துவிட்டது. அரசு பள்ளிகளிலே நல்ல ஊதியம் இருக்கிறது. அவர் சொல்லியிருக்கிறார். தனியார் பள்ளிகளிலே சரியாக ஊதியம் தருவதில்லை அவர்களுக்கு ஒரு உற்சாகத்தோடு வேலை செய்யும் நிலைமை அங்கு இல்லை என்பதை நன்றாகச் சொல்லி இருக்கின்றார்,

அடுத்து என்ன செய்ய வேண்டும்? மாணவர்களுடைய சிந்தனைகள் வெளிவரும்படி, அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை ஊக்குவிக்கும் வகையில் படிப்பு இருக்க வேண்டும். பின்தங்கியவர்களுக்கு ஒரு பயிற்சி முகாமை வைத்து அவர்களை ஊக்குவித்து அவர்களைப் படிக்க வைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆராய்ச்சிகளுக்கு இடம் இருக்க வேண்டும். படிப்பைத் தவிர மற்றவைகளுக்கும் இடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். உலகில் கல்வி எங்கெங்கு சிறப்பாக இருக்கிறதோ அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் சொல்லி தமிழ்நாட்டில் கல்வியில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும் என்பதை இந்த 26 வயதிலேயே இவ்வளவு சிறப்பாக எழுதியதற்காக அன்புமணி உங்களை மிகவும் பாராட்டுகின்றேன். பெரிய ஆராய்ச்சி அறிஞர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள் என்று நினைக்காது நீங்கள் படித்து அதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது என்பதைத் தேடிச் சொல்லித் தமிழ்நாட்டின் கல்வி எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்தாலும் சிந்தனையாலும் அவர்களது படைப்புகளாலும் உயர வேண்டும் என்பதை ஆழமாக சொல்லி இருக்கின்றீர்கள்.

இன்று எண்ணிக்கையில் நாம் பல மடங்கு உயர்ந்திருக்கின்றோம் அதை எடுத்துக்காட்டுகள் மூலம் எத்தனை விழுக்காடு எங்கே எந்த மாநிலத்தில் எப்படி என்பதை எல்லாம் சொல்லி இருக்கின்றார். ஆனால் நாம் எண்ணிக்கையில் உயர்ந்தது போல உண்மையான படிப்பு என்பதில் நாம் உயர்ந்திருக்கிறோமா என்பதைக் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். சிறப்பான கேள்வி. நாம் படிப்பதிலே எத்தனை மதிப்பெண்கள் பெறுகிறோம், முதல் ரேங்க் வாங்கினோமா இரண்டாவது ரேங்க் வாங்கினோமா என்பதில் செலுத்தும் கவனத்தை, அதைப் புரிந்து கொண்டு படித்திருக்கிறோமா என்பதில் செலுத்த வேண்டும் என்பதை ஆழமாகச் சொல்லி இருக்கின்றார் அது மிகவும் சிறப்பான கருத்து.

நாம் எப்படிப் படித்தோம் என்னும் சரித்திரத்தை சொல்லி இருக்கின்றார். ஆரம்பமாக பெருந்தலைவர் காமராஜர் காலத்திலே பள்ளிகள் தொடங்கப்பட்டன அதற்கு முன்பு ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்து பள்ளி இல்லாத ஊரே இருக்கக் கூடாது என்ற அளவிற்கு கொண்டு வந்தார் காமராஜர். பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்ததும் உயர்நிலை பள்ளிக்கூடக் கல்வி வரை அனைவரும் கல்விக் கட்டணம் இன்றிப் படிக்கலாம் என்று கொண்டு வந்தார். அதற்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வந்த பின் கல்லூரி வரை கட்டணம் கிடையாது என்று படிப்பு கொண்டு வந்தார். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அதிலும் பெண்களுக்குக் கல்லூரியில் கட்டணம் இல்லாமல் படிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது என்று இன்றைய மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி வரை திராவிட மாடல் ஆட்சியில் என்ன என்ன சிறப்புகள், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி அதில் என்னென்ன செய்தார்கள் என்பதைச் சுட்டிக் காண்பித்து இருக்கிறார், அதையே ஒரு வரைபடமாக ஆக்கி நமக்குப் புரியும்படி சொல்லி இருக்கின்றார்.

இதை எல்லாம் மிகவும் சிறப்பாகக் கவனித்துச் செயல்பட வேண்டும். இன்று தமிழர்கள் இல்லாத இடமே இல்லை, தமிழர்கள் இங்கே அமெரிக்காவில் தமிழ்க் கல்வி என்பதில் மிகவும் ஆர்வமும், தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்பதில் ஆர்வமும் காட்டி வருகின்றோம். இதையெல்லாம் சிறப்பாக நாம் பார்த்து தமிழகத்தில் இன்னும் எவ்வளவு தூரத்திற்கு முன்னேற வேண்டும், தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளில் எல்லாம் கல்விக்காக என்ன செய்ய முடியும் என்பதை எல்லாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். அதுதான் பொன்னான நாட்கள் என்று நான் சொன்னது. திராவிடச் சித்தாந்தங்களை 21 மொழிகளிலே உலகெங்கும் பரப்ப வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் திட்டம் மிகச் சிறப்பான திட்டம். அதற்கு சுபாஷினி போன்றவர்கள் மற்ற நாடுகளில் இருப்பதை எல்லாம் ஆராய்ந்து சொல்கின்றார்கள். அந்தக் குழுவில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் பணிபுரிந்து தமிழன் என்பவன் நாகரிகப் பரம்பரையின் உச்சகட்டம், தமிழர் நாகரிகம் நாகரிகத்தின் உச்சம் என்பதை எல்லாம் நாம் வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லி எழுதிப் பரப்பி வாழ்ந்து தமிழை உயர்த்துவோம். தமிழ்க் கல்வியை உயர்த்துவோம். தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என்பதைச் சிறப்பாக எடுத்துச் சொல்லி உள்ள அன்புமணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க தமிழ்" என்று தனது ஆய்வுரையை நிறைவு செய்தார்.

கட்டுரையாளர் அன்புமணி ஏற்புரை: ”இங்கு இருக்கக் கூடிய பெரியார் பன்னாட்டு அமைப்பு பொறுப்பாளர்கள், சான்றோர்கள் மற்றும் திராவிடப்பொழில் ஆசிரியர்கள் குழு உறுப்பினர்கள், இதைக் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய கேட்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையை மிகச் சிறப்பாகப் படித்து அதனை ஆய்வு உரை செய்த மருத்துவர் அய்யா சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியதற்கு காரணமே நான் கடந்த வருடம் ஆசிரியர் பயிற்சியினை முடித்தேன். என்னுடைய நண்பர்கள் பலர் தங்களுடைய துயரங்களை இன்னல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். சூழல் வந்து இந்த மாதிரி இருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கான சூழல் மிக மோசமாக இருக்கிறது. அதாவது ஆசிரியர்களுக்குரிய சரியான மதிப்பு அல்லது அவர்களுக்கு உரிய சரியான சம்பளங்களும் கொடுக்கப்படுவதில்லை என்று என்னிடம் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அப்படி வருகின்ற பொழுது நான் பழைய வரலாறுகளை எல்லாம் எடுத்துப் படிக்கின்ற பொழுது திராவிட இயக்கம் கல்வியை மேம்படுத்துவதற்காக எவ்வளவு செயல்கள் செய்து இருக்கிறார்கள்.

அதாவது நம்முடைய நீதிக்கட்சி ஆட்சியில் ஆரம்பித்து அதற்கு அப்புறம் தந்தை பெரியார் அவர்கள் அப்புறம் பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், எம்ஜிஆர் போன்றவர்கள் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்கள். காமராஜரும் பெரியார் அவர்களால் உந்தப்பட்டு நிறைய பள்ளிகளைத் திறந்தார். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் எல்லோரும் கல்வி கற்றார்கள். இவ்வளவு விடயங்கள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் ஆட்சிகளும் முன்னெடுத்து இருக்கின்றனர். கல்வியில் தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் திராவிட இயக்கமும் அதனுடைய பங்களிப்பும் தான். இவ்வளவு தூரத்திற்கு கல்வியில் மேம்பாடு அடைந்திருக்கிறோம். அதற்கான கட்டமைப்புகள் வளர்ந்திருக்கிறது. திட்டங்கள் நிறைய வந்திருக்கின்றன.

அதாவது ஒவ்வொரு புதிய அரசும் வரும் பொழுது கல்விக்காக ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். அடுத்த அரசு வரும்பொழுது அதற்குப் போட்டியாக அதைச் செழுமைப்படுத்தி கல்வி வளர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். இப்படியே கல்வியில் முன்னேறிக் கொண்டே போகிறோம். அதன் மூலமாக நமக்குச் சமூகநீதி என்பது கிடைக்கிறது. சமூகநீதியிலும் முன்னேறுகிறோம். அண்மைக் காலங்களில் பார்க்கின்ற பொழுது ஒட்டுமொத்த கற்றல் வளர்ச்சி (Overall Development in Learning) என்ற ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். அதை வைத்து ஒன்றிய அரசு ஒரு சர்வே எடுக்கிறார்கள். 2021ல் எடுக்கப்பட்ட அந்த சர்வேயில் பல நிலைகளில் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஒன்றில் மட்டும், நேஷனல் ஆவரேஜ்ஜை விட தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது ஒட்டுமொத்தக் கற்றல் வளர்ச்சி. அந்த சர்வேயை எடுத்து பார்க்கின்ற பொழுது அதன் மூலம் என்ன தெரிய வருகிறது என்று பார்த்தால், இங்கே இருக்கக்கூடிய கல்விச் சூழல் என்பது இப்போதைக்குச் சரியாக இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதைத் தேடிப் பார்க்கின்ற பொழுது, இங்கு இருக்கக்கூடிய ஆசிரியர்களின் மனநிலையை நாம் ஆராய வேண்டி இருக்கிறது.

ஆசிரியர்களுடைய மனநிலையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது ஒரு ஐ.டி. நிறுவனம் அல்லது வேறு ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால் அங்கு வேலை பார்க்கக் கூடிய இடத்தை எடுத்துக் கொண்டால், அங்கே இருக்கக்கூடிய மனிதர்கள் மிஷின் உடன் வேலை பார்க்கிறார்கள். அந்த மிஷினோடு வேலை பார்க்கக்கூடிய மனிதர்களின் மனநிலை முக்கியம் என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறைய வசதியும் சம்பளமும் தருகின்றார்கள். ஆனால் ஓர் ஆசிரியர் என்பவர் யார்? அவர்களுடைய சூழ்நிலை நன்றாக இருக்கிறதா? அவர்களுடைய மனநிலை நன்றாக இருக்கிறதா? என்பதை நினைக்க வேண்டியது இந்த சமூகத்தினுடைய கடமை, பெற்றோர்களுடைய கடமை, சமூகத்தில் உள்ள அனைவரின் கடமை சார்ந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படி இருக்கின்ற பொழுது ஆசிரியர்களின் மனநிலை என்பது மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் மூலமாகத்தான் இந்த ஓவரால் டெவலப்மென்ட் லேனிங் என்பது குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். நான் விசாரித்த இடங்கள் மற்றும் நேராக நான் பார்த்த அனுபவங்கள், கேள்விப்பட்ட இடங்கள், அதன் மூலமாக உருவானது தான் இந்தக் கட்டுரை. அனைவருக்கும் நன்றி.”

பிற அறிஞர்களின் குறிப்புரை. நூல் ஆய்வுரை நிகழ்வு முடிந்தவுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. முன்னாள் துணைவேந்தரும், திராவிடப்பொழில் ஆசிரியருமான பேரா. ஜெகதீசன் அய்யா அவர்கள் ஆய்வுரைகளையும் கட்டுரை படைத்தவர்களையும் பாராட்டிப் பேசினார். ”ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்ப்பணி பற்றி டாக்டர் சுபாஷினி அவர்கள் மிகச் சிறப்பாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு கூடுதல் செய்தி. ஜெர்மனிய பாதிரியார்களை அனுப்பி வைத்தது எல்லாம் டென்மார்க் அரசு. வரலாற்றுக் குறிப்பு ஒன்று இருக்கிறது. டென்மார்க் அரசு நிறைய பண உதவி செய்கிறேன் என்று சொன்ன போதிலும் கூட டென்மார்க்கிலிருந்து ஒருவரும் முன்வரவில்லை. ஜெர்மன் பாதிரிமார்கள் முன்வந்தார்கள். அவர்களுக்கு டென்மார்க் அரசு உதவி செய்தது என்பதைச் சொல்ல வேண்டும்” என்றார். கட்டுரை ஆசிரியர் டாக்டர் சுபாஷினி அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்தார்கள். அதைப் போல அன்புமணியின் கட்டுரை குறித்தும் பாராட்டித் தன் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

தொடர்ந்து திராவிடப்பொழில் ஆசிரியர்கள் பேரா. நம். சீனிவாசன், முனைவர் வா. நேரு ஆகியோர் கருத்து தெரிவித்தார்கள். திராவிடப்பொழிலின் இலக்காக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தங்களிடம் குறிப்பிட்டது என்ன, அதில் திராவிடப்பொழில் எவ்வளவு தூரம் சாதித்திருக்கிறது என்பதைப் புள்ளி விவரப் படங்களோடு பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் குறிப்பிட்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட கங்காநிதி சிவபாண்டியன், டாக்டர். சரோஜா இளங்கோவன், துரைக்கண்ணன், பாரிகபிலன் ஆகியோர் தங்கள் கருத்துகளையும் ஆய்வுரை அரங்கத்திற்குப் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இறுதியாகத் திராவிடர் கழகத்தின் பொருளாளர், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழின் பொறுப்பு ஆசிரியர் வீ. குமரேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். அவர் தனது உரையில்,

"திராவிடப்பொழில் இதழ் தமிழர் தலைவர் அவர்களின் நீண்ட நாள் கனவு. திராவிட இயக்கம் என்பது ஏடுகளை, இதழ்களை ஏராளமாக நடத்தி வளர்ந்த இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்திலே ஆய்வுத் தளத்தில் இதழ்கள் என்பது அவ்வளவாக வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிலையிலே ஒரு நீண்ட நாள் கனவாக ஆசிரியர் அவர்கள் திட்டமிட்டுச் சரியான நேரத்திலே இந்த திராவிடப் பொழில் இதழ் வெளிவருவதற்கு வழி காட்டுபவராக வழி நடத்துபவராக இருந்து வருகிறார், திராவிடப் பொழில் இதழ் ஆய்வுக்கூட்டத்தில் முதன் முறையாகக் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆய்வுக் கூட்டத்தைப் பார்த்தபொழுது, இந்தக் கட்டுரையாளர்கள் எவ்வளவு ஈடுபாட்டோடு கட்டுரையைப் படைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதைப் போல இந்தக் கட்டுரையை வாசித்து, உள்வாங்கி எவ்வளவு ஈடுபாட்டோடு ஆய்வாளர்கள் கட்டுரையை மதிப்புரை செய்கிறார்கள் என்பதையும் உணரமுடிந்தது.

டாக்டர் சுபாஷினி அவர்கள் ஜெர்மனிக்கு ஏதோ சென்றோம், இருந்தோம் என்பதாக இல்லாமல், அந்த ஆய்வுக் களத்தில் எவ்வளவு தூரம் அவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர் சுபாஷினி அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எல்லாம் இருந்தது. ஆனால் அவருக்குப் பின்னால் இருக்கும் ஆய்வுப் பணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்த நிகழ்வு உதவியிருக்கிறது. ஜெர்மனி என்று சொன்னால் மேக்ஸ் முல்லர் தான் நினைவுக்கு வரும். அவர் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்தவர். ஆனால் ஜெர்மானியர்களும் தமிழ் மொழியைப் பற்றி, திருக்குறளைப் பற்றி, இவ்வளவு தூரம் விரிவாக பணி செய்து இருக்கிறார்கள் என்பது வெளிக்கொணர்ந்ததில் அம்மா சுபாஷினி அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பாராட்டுக்கள். ஜெயாமாறன் அவர்களின் ஆய்வுரை மிகச் சிறப்பாக இருந்தது. இந்த உரையின் மூலமாக ஜெர்மனுக்குச் சமமான சொல் இடாய்ச்சு என்பதைத் தெரிந்துகொண்டேன்.

அதைப்போல நம் வீட்டுப்பிள்ளை அன்புமணி எழுதிய கல்வி பற்றிய கட்டுரை. அவர் கணிதம் படித்தவர். கல்வியியலும் படித்திருக்கிறார். கல்வித் தளத்திலே ஒரு கட்டுரை படைத்தது மிகச் சிறப்பு. கட்டுரை நன்றாக இருந்தது. அந்தக் கட்டுரையை அய்யா டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் ஆய்வுரை செய்தார். டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தாமல் எத்தனையோ பேரை முன்னிலைப்படுத்திய பெருமைக்கு உரியவர். 50 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவுக்கு வந்தவர். அவரோடு வந்தவர்கள் பலரும் பணம், பதவி என்று போய்விட்டார்கள். நான் கூடக் கேட்டேன், நீங்கள் அமெரிக்காவில் ஒரு எம்.பி.யாகவாவது வரலாமே என்று. நமக்கு அது சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டார். அய்யா சோம.இளங்கோவன் அவர்களைப் பொறுத்த அளவில் எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பெரியார் கொள்கையிலியே நிற்கின்றார். தந்தை பெரியார் பதவியே வேண்டாம் என்று பணி செய்தது போல அய்யா சோம. இளங்கோவன் அவர்கள் செயல்படுகின்றார். சமுதாயப்பணி, தமிழ்ப்பணி ஆற்றுகிறார். தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதலில் பெரியாரை உலகமயப்படுத்தும் பணியில் முதல் தளபதியாகப் பணியாற்றுகிறார். அவர் பல பணிகளைச் செய்கின்றவர். திராவிடப்பொழில் அதில் ஒரு பகுதி.

திராவிடப் பொழில் சிறப்பு ஆசிரியர் பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் சில புள்ளிவிவரங்களைக் கொடுத்தார். பெரியார் குறித்த கட்டுரைகளும் நிறைய வரவேண்டும். கடவுள் மறுப்பைத் தமிழ் நாட்டில், இந்தியாவில் பேசவேண்டும். ஆனால் கடவுள் மறுப்பு என்பது மட்டுமே பெரியார் கொள்கை அல்ல. அய்யா ஆசிரியர் அவர்கள் சொல்வார், கடவுள் மறுப்பு என்பது ஒரு வழிமுறை (Strategy), ஆனால் மனித நேயம் என்பது தான் பெரியார் கொள்கை (Ideology) என்று. தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக்கும் போது சொல்லியிருக்கிறார், இன்றைக்கு நான் இதைத் தொடங்கியிருக்கிறேன். அமைப்பு என்பது சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் இது உலக அளவிலே செல்லக்கூடியது என்று சொல்லியிருக்கிறார். சுயமரியாதை வேண்டாம் என்று எந்த மனிதனும் சொல்லமுடியாது. பகுத்தறிவு எனக்குத் தொடர்பு இல்லாதது என்று எந்த மனிதனும் சொல்லமுடியாது. நிறைய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு சுயமரியாதை, பகுத்தறிவு அடிப்படையில் கட்டுரைகள் திராவிடப் பொழிலுக்கு கொடுக்கலாம். அப்படி கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஒரு வரலாற்றுத் தகவல். சதி தடுப்புச் சட்டத்தோடு தொடர்பு உடையது. வில்லியம் கேரி என்பவர் மதபோதகர். அச்சுக்கோக்கும் பணியில் ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தாவில் இருந்தவர். அப்போது கவர்னராக இருந்த வில்லியம் பெண்டிங்கிடம் இருக்கிறார். சதி தடுப்பு மசோதாவை லண்டனுக்கு அனுப்பி, அதற்கான அனுமதியைக் கேட்கிறார். வில்லியம் பெண்டிங். அது சனிக்கிழமை வருகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதனை அச்சடித்து பணியைச் செய்ய வேண்டியவர் மதபோதகரான வில்லியம் கேரி. அவர் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போகாமல், இந்த சட்டத்தினை அச்சுக்கோத்து அடித்து அனுப்பிகிறார். ஏனென்றால் தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரமும் பல பெண்களின் உயிர் சதியால் பறிக்கப்படும் என்பதால் மத போதனையை அன்று விடுத்து மனித நேயப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து அடித்து அனுப்பினார் என்பது வரலாறு” என்று குறிப்பிட்டு ஆங்கிலக் கட்டுரைகள் நிறைய வர வேண்டும் எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.