தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்


July - September 2023

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாகத் திராவிடப்பொழில் சூலை-செப்டம்பர் 2023 11வது இதழுக்கான ஆய்வுக் கூட்டம் நவம்பர் 18,2023 சனிக்கிழமை அமெரிக்கக் கிழக்கு நேரம் காலை 9 மணி, தமிழ்நாட்டின் நேரம் இரவு 8.30 மணிக்கு இணைய வழியாக நடைபெற்றது. நிகழ்வின் நெறியாள்கையாளராகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் ,அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இருந்து நிகழ்வை வழி நடத்தினார்கள். தன்னுடைய தொடக்க உரையில் ‘திராவிடப் பொழில் ‘இதழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு இந்தக் காலாண்டு திராவிடப்பொழில் இதழில் 5 கட்டுரைகள் வந்துள்ளன .அதில் பேரா.வீ.அரசு அவர்களின் ‘தமிழிச்சூழல் : சமூகநீதி-வ.உ.சி.’ என்னும் கட்டுரையும் எழுத்தாளர் ஞான.வள்ளுவன் அவர்களின் ,’பிற்காலச்சோழர்களின் செப்பேடுகளும்,பார்ப்பனர்களுக்கான தானங்களும் ‘ என்னும் கட்டுரையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.முதலில் பேரா.வீ.அரசு அவர்களின் கட்டுரையை முனைவர் த.கு.திவாகரன் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள் எனக்குறிப்பிட்டார். பின்பு முனைவர் த.கு.திவாகரன் அவர்களைச் சிறப்பாக அவைக்கு அறிமுகப்படுத்தி அவரைப் பேச அழைத்தார்.

முனைவர் .த.கு.திவாகரன் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும்,பெரியார் பன்னாட்டு அமைப்பு,அமெரிக்காவும் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்றைக்குப் பெரியாரின் கொள்கைகள் உலகமெல்லாம் பரவுவதற்குப் பெரியார் பன்னாட்டு அமைப்பு எடுக்கும் முயற்சிகளும் காரணம்.தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும் அவரின் கொள்கைகள் முழக்கமாக எடுத்துச்செல்லப்படுவதால்,பெரியார் இன்றும் வாழ்கின்றார்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே பேரா.அரசு அவர்கள் " நிலப்பரப்பில் வாழும் பல்வேறு மக்களும் பல கூறுகளிலும் முரணின்றி வாழவேண்டும்.அவ்வாறு இல்லையெனில் அங்குச் சமூக நீதியின் தேவை வருகிறது " என்று குறிப்பிடுகிறார்.அந்தச் சமூக நீதியோடு இணைத்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.அவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.தந்தை பெரியார் அவர்களும் வ.உ.சி. அவர்களும் இணைந்து பணியாற்றிய பணிகள் ஏராளம் என்பதை இந்தக் கட்டுரை காட்டுகிறது.

1852 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘இந்து மத ஆபாச போதினி’ என்னும் புத்தகத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் கூறுகின்றார் சமூக நீதிக்காகப் பாடுபட்ட புலே,தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,வள்ளலார் போன்றவர்களைப் பற்றியும் அவர்கள் எடுத்த சமூக நீதி முன்னெடுப்புகள் பற்றியும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். சமூக நீதி என்பது இருபதாம் நூற்றாண்டில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்தது என்பதை இந்தk கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார் இரண்டு சமூக நீதிப் போராளிகள் பற்றி மிக அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் அவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியார்.அவர்களும்.

சமூக நீதிக்காகத் தோன்றியதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் .அது 1916ல் தோற்றுவிக்கப்பட்டது.தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட 1917 சங்கம் பற்றியும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நீதி கட்சி சுயமரியாதை இயக்கம் இவை எல்லாம் இணைக்கப்பட்டு 1944 திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது அது சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது திராவிடர் கழகத்தில் தான் வேறு அண்ணா டாக்டர் கலைஞர் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள் பாடுபட்டார்கள் அதிலிருந்து 1949இல் திராவிட முன்னேற்ற கழகம் தனியாகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதைப் பேராசிரியர் அரசு அவர்கள் மிகச் சிறப்பாகக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள் திராவிட இயக்கங்கள் என்றால் அவை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் இவைதான்..

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மிகப் பெரிய பதவிகளை எல்லாம் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் இப்படி அவர்கள் அமர்ந்த காரணத்தினால் அங்கு சமூக நீதி செத்துப் போய்விட்டது பெரும்பாலான நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில், பெரும் பதவிகளில் 98 சதவீதம் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்பதைப் பேரா.அரசு அவர்கள் அருமையாகச் சுட்டிக்காட்டி உள்ளார்கள் இதில் இடதுசாரி கருத்தாளர்கள் இந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிர்ப்புக் காட்டவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அது மட்டுமல்ல காங்கிரசுக்குள்ளும் பார்ப்பனர்களின் அதிகார மையம் செயல்பட்டது என்பதைக் கூறுகிறார்

1919 ஆம் ஆண்டு நமது டி.எம். நாகர் அவர்கள் சமூக நீதிக்காகப் போராடினார்கள் அதற்காகத்தான் அவர் லண்டன் சென்றார் அங்கு நோயுற்று மரணமடைந்தார். இல்லை என்று சொன்னால் இந்தச் சமூக நீதி அப்பொழுதே நமக்கு வந்திருக்கும் இட ஒதுக்கீடு வந்திருக்கும் அதற்குப் பின்பு தான் திராவிட இயக்கம் சமூக நீதிக்காகப் பாடுபட்டது

நீதிக்கட்சி ஆட்சி முதல் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் எனத் தொடர்ந்த ஆட்சிகள் சமூக நீதிக்கு ஆதரவாகச் செயல்பட்டன திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் 69-சி சட்டம் கொண்டுவர பெரும் பங்களிப்பைப் செய்தார் இந்தக் காலத்தில் நமது அரசுக்கு கொடுக்கக்கூடிய தொல்லையைப் போல அந்தக் காலத்தில் தொல்லையைக் கொடுத்து இருக்கிறார்கள் சென்னை மாகாண சங்கம் என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலமாகப் பார்ப்பனர்கள் தொல்லையைக் கொடுத்திருக்கிறார்கள் அதற்கு ஆதரவாக இருந்தவர் யார் என்று கேட்டால் அன்னிபெசன்ட் அம்மையார் .1920களில் பார்ப்பனர்கள் எல்லாம் இணைந்து அன்னிபெசன்ட் அம்மையாரோடு சேர்ந்து நீதிக் கட்சி ஆட்சிக்கு தொல்லை கொடுத்தார்கள் என்பதை எல்லாம் பேரா.அரசு அவர்கள் பதிவு செய்கிறார்கள்

காங்கிரசில் இருக்கும்போதும் சமூக நீதிக்காகப் போராடியவராக அய்யா வ உ சி அவர்கள் இருந்திருக்கிறார்.அதனை ஆதாரத்தோடு பேராசிரியர் அரசு அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் 1936 நவம்பர் 18 ல் தான அய்யா வ.உ.சி அவர்கள் மறைகிறார்கள் அந்த நவம்பர் 18-ல் இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

காங்கிரசுக்குள் இருக்கும்போது காங்கிரசு கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அய்யா வ உ சி அவர்கள் கண்டிக்கிறார் பத்திரிகையாளர்களை அழைத்துப் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை குறித்துப் பேசுகின்றார் அதனால் அவருக்குப் பல எதிர்ப்புகள் ஏற்படுகிறது பல சோதனைகளை அவர் எதிர்கொண்டார் பல சோதனைகளை அவர் சந்தித்தாலும் அவர் காங்கிரசை விட்டு வெளியே வரவில்லை வ உ சி அவர்கள் எடுத்த பல நிலைப்பாடுகளைத் தந்தை பெரியார் அவர்கள் ஆதரித்திருக்கிறார் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே தந்தை பெரியார் போலவே சமூக நீதிக்காக்க் குரல் கொடுத்தவர் அய்யா வ உ சி அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவளித்தவர் தந்தை பெரியார்

அய்யா வ.உ.சி. அவர்களைப் பற்றி ஏதேனும் பேசுகிறவர்கள் அவர் காங்கிரஸில் இருந்தார், சிறைப்பட்டார்,செக்கிழுத்தார் என்பதைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர அவர் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார் என்பதைப் பேச மறுக்கிறார்கள் அவருடைய சமூக நீதி நிலைப்பாட்டை எவரும் எடுத்துக்காட்டுவதில்லை ஆனால் அய்யா பேராசிரியர் அரசு அவர்கள் அதனை எடுத்துக் காட்டி இருக்கிறார்

1936 திருச்சியில பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடக்கிறது அவர் இறப்பதற்க்கு ஆறு மாதத்திற்கு முன்னால் நடந்த அந்த மாநாட்டிற்கு வ உ சி செல்கிறார் தானாகச் செல்கிறார் அங்கே ஆங்கிலத்தில் மிக அருமையான ஓர் உரையைக் கொடுக்கிறார் அந்த ஆங்கில உரையே ஒரு புத்தகமாக வந்திருக்கிறது என்பதை அய்யா பேரா. அரசு அவர்கள் குறிப்பிடுகிறார். என்று குறிப்பிட்டு தனது ஆய்வுரையை நிறைவு செய்தார்.

மருத்துவர் சோம..இளங்கோவன் இன்று திராவிடக் கருத்துப் பெட்டகமாக விளங்குகின்ற அய்யா திவாகர் அவர்கள் மிக அருமையாக ஆய்வு செய்தார்.இந்தக் கட்டுரையின் ஆசிரியர் அய்யா பேராசிரியர் அரசு அவர்கள் பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர். இலங்கை,சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் அவரது ஆராய்ச்சிக்கு பல அறிஞர்கள் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்..அவரை ஏற்புரை ஆற்ற அழைக்கிறேன் எனக்குறிப்பிட்டு அவரை அழைத்தார்.

பேரா. அரசு:என்னுடைய கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதனை அடித்தளமாகக் கொண்டு இதுவரை உரையாற்றிய திவாகரன் அவர்களுக்கு நன்றி இந்தக் கட்டுரை அவர் தனது உரையில் சொன்னதைப் போல வ உ சி என்னும் ஒரு பெரிய மனிதர், இந்தியாவிலேயே விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் மனிதர் என்று சொல்லலாம் அவர் அளவிற்குச் சிறைத் தண்டனையோ ,அவர் அளவிற்குப் பிற்காலத்தில் வறுமையில் வாடிய வாழ்க்கையுமோ வேறு எந்த சுதந்திரப்போராட்டவீரர் எவருக்கும் இல்லை என்று சொல்லலாம் அப்படி இருந்த வ.உ.சி அவர்கள் ஒரு காங்கிரசுகாரராக இருந்தாலும் கூடப் பெரியாரோடு கொண்டிருந்த தொடர்பு ரொம்ப அழுத்தமானது ரொம்ப ஆழமானது. அது 1917 இல் தொடங்கியது.வ.உ.சி.அவர்கள், அவர் மறைகிற காலம் வரை பெரியாரின் அனைத்து செயல்பாடுகளையும் அவர் பாராட்டி போற்றி வந்திருக்கிறார் காங்கிரசுகாரர்கள்,வ.உ.சி.அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட அவரைக் காங்கிரஸ்காரராகவே ஏற்றுக் கொள்ளவில்லை பெரியார் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் மிக விரிவாக வ.உ.சி பற்றி எழுதியிருக்கிறார் கண்டிப்பாக வ.உ.சி. அவர்கள் மறைந்த போது பெரியார் அவர்கள் எழுதிய அந்த இரங்கல் உரையை நீங்கள் வாசிக்க வேண்டும் அய்யா பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு வ உ சி அவர்களை இந்த நாடு எப்படி நடத்தியது என்பதை மனம் திறந்து எழுதியிருப்ப்பார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான செய்தி என்னவென்று சொன்னால் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம். இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ,அதன் மூலம் உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இந்தியாவின் புதிய வரலாற்றிலே மிக மிக முக்கியமான ஒன்று இன்றைக்கும் இதனை இந்தியாவில் மிகப்பெரிய உரையாடலாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்

1920களிலேயே இந்த வகுப்புவாரிப் பிரதிநித்துவம் கொடுக்கப்படவேண்டும் என்றும் ,பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விரிவாகப் பேசி காங்கிரசு கட்சிக்குள்ளேயே கொண்டு சென்றிருக்கிறார். முடியாமல் போனதால் அதை விட்டு வெளியே வந்து நீதிக்கட்சியை ஆதரிக்கிறார்.1927ல் நீதிக் கட்சி கொண்டு வந்த, தமிழ்நாட்டில் இந்த இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்த பெருமை பெரியாரைச் சேரும் அந்தப் பெருமையை, அந்தச்செயல்பாடுகளை எல்லாம் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து எல்லா நேரங்களிலும் பெரியாரை மிகச் சிறப்பாகப் பாராட்டி எழுதி இருக்கிறார் வ உ சி அவர்கள்.

இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது உலகத்தின் மிக முக்கியமான இந்த இரு தலைவர்களும் தமிழகத்தின் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரே கருத்து உடையவர்களாக வாழ்ந்தார்கள் என்ற செய்தி.இந்தச்செய்தி பரவலாகப் பலருக்கும் தெரியவில்லை அதை நாம் தெரியப்படுத்த வேண்டும் அதற்கான அடிப்படையான ஒரு நோக்கமாகத்தான் நான் இந்தக் கட்டுரையை எழுதினேன் இதை நீங்கள் மிக சிறப்பாக வாசித்து அதற்கு ஆய்வுரை வழங்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் சொல்லி முடித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து பேரா.அரசு அவர்களின் ஏற்புரையையும் விளக்கத்தையும் பாராட்டினார் மருத்துவர் சோம.இளங்கோவன் அவ்ரகள். “பொன்முத்து முட்டையிடும் வாத்து என்று கதை படித்திருக்கிறோம் ஆனால் அது உண்மையிலேயே வரலாற்றில் நடந்தது என்பதை அறிந்தால் நமக்கு வெட்கமும் வேதனையுமாக இருக்கும் அந்தப் பொன் முட்டைகள் இட்ட வாத்துக்கள் யார் என்றால் சோழப் பேரரசர்கள். அதை அருமையாக ஆராய்ச்சி செய்து கட்டுரையாக வடித்துள்ள அய்யா ஞான வள்ளுவன் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துத் தமிழ்நாட்டு மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த சாதனையாளர் .மருத்துவர்களுக்குப் பின்னால் அநேகமான தேவைகள் இருக்கின்றன அவற்றையெல்லாம் நிறைவேற்றி அவர்கள் வேலை செய்வதற்கு எளிமையாகத் தமிழ்நாடு இன்று மருத்துவத்துறையில் முதலிடத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்கள் வித்திட்ட அடித்தளம் தான் காரணம் .அவரது கட்டுரையை ஆய்வு செய்ய எனக்கு மிகவும் நெருக்கமான பிடித்தமான நான் போற்றும் ஆய்வாளர்களில் ஒருவரான மும்பை கணேசன் வந்துள்ளார்கள் அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஓர் ஆய்வு பெட்டகமாக வைத்திருக்கின்றார் இந்த ஆண்டிலே இந்த மாதத்திலே மும்பையில் இதெல்லாம் நடந்தது என்பதை மிகச் சிறப்பாகச் சொல்வார் தந்தை பெரியார் அவர்களுக்கும் மும்பைக்கும் பல ஆண்டுகளாக இணைப்பு இருந்தது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் அவர்களும் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு பொருள் சேர்க்க வேண்டும்,சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அதைச் செயல்படுத்தும் வீரர் மும்பை கணேசன் அவர்கள். அவர்களை இந்த ஆய்வுரையை நிகழ்த்துமாறு அழைக்கின்றேன்” என்று மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் அழைத்தார்.

மும்பை கணேசன் அவர்கள்:பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பிலே நடைபெறக்கூடிய திராவிடப்பொழில் இதழில் வந்து இருக்கக் கூடிய கட்டுரைகளை நாம் படித்து அதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக,இந்த நிகழ்வைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்முடைய பெரியார் பன்னாட்டு அமைப்பு மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது.

வரலாற்றின் அடிப்படையில் தமிழ் மன்னர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதைப் பற்றிய, அவர்கள் செய்த நன்மைகள் தீமைகள் எல்லாவற்றையும் விளக்குகின்ற பகுதிதான் வரலாறு. இந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது இந்தக் கட்டுரை பிற்காலச் சோழர்களைப் பற்றி வந்திருக்கிறது சோழ மன்னர்களில் கரிகாற்பெருவளத்தான் என்று சொல்லக்கூடிய திருமாவளவன் அவர்கள்தான் கல்லணையைக் கட்டினார் நீர்நிலைகளை உயர்த்தினார் .வேளாண்மைக்கு மிகப்பெரிய அளவிற்கு உறுதுணையாக இருந்தார் என்பதை நாம் படித்திருக்கிறோம். அவர் வாழ்ந்தது 50 ஆண்டுகள் 50 ஆண்டுகளில் அவர் எந்தக் கோயிலும் கட்டவில்லை எந்தப் பார்ப்பனருக்கும் அடிபணியவில்லை அப்படிப்பட்ட ஒரு பாராட்டுக்குரிய மன்னர்தான் கரிகாற்பெருவளத்தான் அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களே சோழ மன்னர் கரிகாற்பெருவளத்தானுக்கு ஒரு பெரிய விழாவினை எடுத்து மகிழ்ந்தார்கள். பொதுவாகத் திராவிடர் கழகம் என்பது எந்த மன்னரையும் பாராட்டுவதில்லை. மற்றவர்கள் அனைவரும் பார்ப்பனிய சூழ்ச்சிக்குப் பலியானார்கள், அடிபணிந்தார்கள்.

நம்முடைய புலவர் இமயவர்மன் அவர்கள் கூட ‘பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’ என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள் மிக அருமையான நூல் இந்த மன்னர்கள் எப்படிப் பார்ப்பனிய வலையிலே விழுந்து தன்னுடைய அறிவை, ஆற்றலை, உழைப்பை, வாள் ஏந்தி வாழ்ந்த அந்த மாமன்னர்கள் புல் ஏந்திய பார்ப்பனர்களிடத்திலே எப்படிக் கட்டுண்டு கிடந்தார்கள், சுருண்டு விழுந்து கிடந்தார்கள், பார்ப்பனர்களின் கண் அசைவுகளுக்கு ஏற்ப அவர்கள் செயல் புரிந்தார்கள் என்பதை அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் ‘பிற்காலச் சோழர்களும் சோழர்களின் செப்பேடுகளும்’ என்னும் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார்கள் . இதைப் படிக்கின்ற பொழுது எப்படி எல்லாம் உழைக்கும் மக்களை இப்படி வஞ்சித்துப் பார்ப்பனிய சூழ்ச்சிக்கு மன்னர்கள் அடி பணிந்தார்கள் என்பதை நாம் உணர முடிகிறது. பொதுவாக விவசாயம் என்று சொல்கின்ற அந்தத் தொழில் என்பது உழவுத் தொழில், வேளாண்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உயிரினங்களுக்குமே அடிப்படையாக இருப்பது. அந்த வேளாண்மையை நீசத்தொழிலாக வைத்து, அது ஒரு கொடூரமான செயல் அது செய்யக்கூடாது என்று பார்ப்பனர்கள் கைக்கொண்டனர் அப்படி உழைக்கும் மக்களை, உழைக்கும் வர்க்கத்தை மிக அடிமையாக வைத்து அவர்களைச் சுரண்டி கொழுத்து, உழைக்கும் மக்களுக்கு எதிராக மன்னர்களுடைய துணையோடு பார்ப்பனர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இந்தக் கட்டுரையாளர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் பழைய வரலாறுகளை அறிந்து கொள்வதற்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் மண் பாண்டங்களில் இருக்கக்கூடிய அந்தப் பழைய ஓடுகளில் இருக்கும் குறியீடுகள் போன்றவை உதவியாக இருக்கின்றன. இவற்றை வைத்து எடுத்துக்காட்டாக நமது கீழடியில் நடக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி போலப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. தமிழருடைய வரலாற்றுச் சிறப்புகள் எல்லாம் அங்குப் பேசப்படுவது போல ஏராளமான செப்பேடுகள்.அந்தச் செப்பேடுகள் எல்லாம் பிற்காலச் சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தவற்றைப் பற்றிச்சொல்லும் செப்பேடுகள். அந்தச் செப்பேடுகளிலே என்ன எழுதி இருக்கிறது என்பதை மன்னர்கள் பெயரோடு சேர்த்து வரிசையாக அட்டவணையாக அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் கொடுத்திருக்கிறார்.அதற்குப் பிறகு அதனைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கிறார்.முதலாம் ராஜராஜனில் இருந்து ஆரம்பித்து ஆண்ட பிற்காலச்சோழ மன்னர்களின் பட்டியலையும் அவர்கள் எப்படிப் பல்லவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்பு எழுச்சி பெற்றார்கள் என்னும் வரலாற்றைச் சொல்கிறார்.எப்படி எல்லாம் அந்த பிற்காலச்சோழ மன்னர்களை மயக்கிப் ,பார்ப்பனர்கள் தான்ங்களைப் பெற்றார்கள் என்னும் விவரத்தைக் கூறுகிறார்.

எனக்கு இந்தக் கட்டுரையைப் படித்தபோது அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் ‘ என்னும் நூல் நினைவுக்கு வந்தது.பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சூத்திரனை,உயர் வர்ணமாக்கி மன்னராக ஆக்குகிறோம் என்று சொல்லி காக்கபாட்டர் தலைமையில் சிவாஜியை ஏமாற்றி ,பணத்தையும் பொன்னையும் பிடிங்கினார்கள் என்பதை அண்ணா எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.பசுமாட்டைப் போல உருவத்தைத் தங்கத்தால் செய்து,அதன் வயிற்றுக்குள் புகுந்து வெளியே வரவேண்டும்,அவ்வளவு தங்கத்தையும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதை நம்பி அள்ளிக் கொடுத்த யாகங்கள் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் கொடுத்திருக்கும் இந்த வரலாறு நான் அறியாதது.மிகச்சிறப்பாக இந்தக் கட்டுரை உள்ளது. அய்யா ஞான வள்ளுவன் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.வாய்ப்பு அளித்த பெரியார் பன்னாட்டு அமைப்பிற்கு நன்றி என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் செப்பேடுகள் காலம் முடிந்துவிட்டதாக நாம் நினைக்கலாம்.ஆனால் இன்றும் அது தொடர்கிறது என்பதுதான் இந்தக் கட்டுரையை இந்த நேரத்திலே இதை வெளியிட்டதற்குப் பொருள். அமெரிக்காவிலே எங்குப் பார்த்தாலும் கோவில்கள்.அந்தக் கோயில்களைக் கட்டுபவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள்.அந்தக் கோவிலை ஆள்பவர்கள் பார்ப்பனர்கள்.இந்த நிலை இன்று உலகெங்கும் இருக்கிறது.அதில் இங்கு அமெரிக்காவில் நடக்கும் அநியாயாங்களைப் பார்த்தால் நமது உடன் பிறப்புகள் இங்குக் கோவில் குடமுழுக்கு நடத்துவதும் அதைப் பெரிய ஆர்ப்பாட்டமாகச்செய்வதும் கோயில்களுக்காக வாரி வழங்குவதும் இன்றும் தொடர்கிறது என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய கருத்து.அய்யா ஞானவள்ளுவன் அவர்கள் மிகச்சிறப்பாக நாமெல்லாம் போற்றும் சோழப்பேரரசர்கள், எப்படி இருந்தார்கள்,பார்ப்பனர்கள் குளியல் அறையிலும் சாப்பாட்டு அறையிலும் எப்படி அவர்களை மயக்கி இத்தனையையும் பெற்றார்கள் என்பதுதான் இதன் கருத்து.இன்றும் அது எப்படித் தொடர்கிறது என்பதுதான் வரலாறு.ஆகவே அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் இந்தக் காலகட்டத்திலே மிக அருமையாக எழுதியிருப்பது நம்முடைய உடன்பிறப்புகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு ஞானவள்ளுவன் அவர்களை ஏற்புரை ஆற்ற அழைத்தார்கள்.

ஞானவள்ளுவன்:என்னுடைய கட்டுரையை மிகச்சிறப்பாக ஆய்வு செய்த அய்யா மும்பை கணேசன் அவர்களுக்கு நன்றி .அவர் தன்னைப் பற்றித் தெரிவித்தது போல நானும் எழுத்தாளன் இல்லை.மருத்துவத்துறையிலே 34 ஆண்டுகள் பணியாற்றியவன்.பணி ஓய்வுவரை நான் எழுத்தைப் பற்றி ஏதும் அறியவில்லை.ஆனால் என் தந்தையார் இந்த இயக்கத்தில் இருந்ததால்,எங்கள் தந்தையார் காலம் தொட்டு நாங்கள் இந்த இயக்கத்தில் மிகத்தீவிரமாக இருந்தோம்.பணி ஓய்வுக்குப்பிறகு தந்தை பெரியார் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் பிறந்த ஊர் வைத்தீஸ்வரன் கோவில். எங்கள் ஊரில் என் தந்தையார் உட்பட பலபேர் திராவிட இயக்கத்தைச்சார்ந்தவர்கள். எனவே நான் எழுதஆரம்பித்தேன். இதுவரை பெரியார் 95,எங்கள் ஊரும் திராவிட இயக்கமும், என இப்படிப்பட்ட பல நூல்களை எழுதியிருக்கிறேன்.

அதேபோல ஒரு முறை இயக்கக் கூட்டத்திற்காக மதுரைக்கு நான் சென்று இருந்தேன் அங்கே இருந்த உலகத் தமிழர் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்றோம் எனக்கு வரலாற்றில் பொதுவாக ஓர் ஈடுபாடு உண்டு அங்கே இருந்த நூல் நிலையத்தில் திருஇந்தளூர் நூல் செப்பேடு என்று ஒன்று இருந்தது திருஇந்தளூர் என்றவுடன் எனக்கு இது கேள்விப்பட்ட ஊரு போல இருக்கிறது என்று யோசித்தேன். அந்த ஊர் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த ஓர் ஊர். இப்போதும் அதே பேரில் அந்த ஊர் இருக்கிறது உடனே நான் ஆர்வத்தோடு அந்த நூலை வாங்கி வந்து படித்தேன் அதைப் படித்த பின்பு தான் எனக்கு இந்தச் சோழ மன்னர்கள் எப்படி எல்லாம் பார்ப்பன அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிய வந்தது

இந்தத் திருஇந்தளூர் செப்பேடு பற்றிச் சில வார்த்தைகளை நான் சொல்ல விரும்புகிறேன். திருஇந்தளூர் என்பது மயிலாடுதுறை சார்ந்த பகுதி. தமிழகத்தில் இதுவரை 20 செப்பேடுகள் கிடைக்கப்பட்டுள்ளன திருஇந்தளூர் செப்பேடு 2011ல் கிடைக்கப்பெற்றது இதுவரை கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் மிகப்பெரியதும் அதிக எண்ணிக்கையும் கொண்ட இந்தத் திருஇந்தளூர் செப்பேடு ,மறைந்த முதல்வர் நமது டாக்டர் கலைஞர் அவருடைய ஆட்சி காலத்தில் 2011ல் அந்தப் பகுதியில் உள்ள கோயில் சீரமைப்பு பணியின் போது கண்டெடுக்கப்பட்டது மிகப்பெரிய அந்தச் செப்பேடு 85 பக்கங்களைக் கொண்டது அது இப்போது அருங்காட்சியகத்தில் இருக்கிறது அதைப்பற்றிய ஒரு நூல்தான் அது அந்த நூலின் முதல் பத்துப் பக்கங்கள் வடமொழியில் இருக்கின்றது அடுத்த அனைத்து பக்கங்களும் தமிழிலும் இருக்கின்றது பார்ப்பனர்களுக்குச் சோழ மன்னர்கள் நிலங்களை தானமாக கொடுத்த விவரங்களை அறிய முடிகிறது தோழர்களே, இந்தத் திருஇந்தளூர் பகுதி அந்க்த காலத்தில் முழுக்க மருத நிலம். முழுக்க முழுக்க விவசாயப் பணி உள்ள இடம். சோழ மன்னர்கள் ராஜராஜன் காலத்திலிருந்து வடஇந்தியாவிற்குச் சென்று போரிட்டு திரும்பும் பொழுது கூடுதல் எண்ணிக்கையில் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தார்கள் என்பது வரலாறு. அந்த வகையில் இந்தப் பகுதி முழுக்க ஆற்றங்கரை பாசனம் உள்ள வளமான பகுதி .இந்தப் ஆற்றங்கரை ஓரங்களிலே பார்ப்பனர்கள் தங்கி கோயில் பணிகளைப் பார்த்து வந்திருக்கிறார்கள் தங்கள் ஆதிக்கத்தினை நிலை நிறுத்தி இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மன்னர்களைப் பார்த்து “போரிலே நீங்கள் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொன்று விட்டீர்கள் அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு, ஊரில் பஞ்சம் தீர வேண்டும் என்றால்..” இப்படிப் பல எண்ணங்களைச் சொல்லி இதற்கெல்லாம் நீங்கள் யாகம் செய்ய வேண்டும் எங்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதின் அடிப்படையில் அதைக் கேட்டு மயங்கி நமது மன்னர்கள் எவ்வளவு வீராதி வீரர்களாக, சூராதி சூரர்களாக இருந்தாலும் அந்த வேற்று மொழியாளர்களின் அந்த நயமான பேச்சு, உடல் மொழி இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு அவர்கள் பார்ப்பன அடிமையாகிப்போனார்கள் என்பதுதான் இந்தச் செப்பேடு சொல்லும் வரலாறு

இந்தத் திருஇந்தளூர் செப்பேட்டின் வரலாற்றைப் பார்க்கின்ற பொழுது ராஜேந்திர சோழர்களின் மகன்களில் முதலாவது ராஜேந்திரன் என்பவன் 130 பார்ப்பனர்களுக்குப் பல்வேறு கிராமங்களை அந்தப் பெயர்கள் எல்லாம் நீக்கி விட்டு சதுர்வதி என்ற பெயரில் நாராயணச் சதுரகிரி மங்கலம் என்ற ஒரு புதிய பகுதியாக்கித் தானமாகக் கொடுத்திருக்கிறான். அதற்குப் பின்பு அவன் போர்க்களத்தில் இறந்த பின்பு அவனுடைய சகோதரர் இரண்டாவது ராஜேந்திரன் மன்னராகிறான்.அவன் அதே பார்ப்பனர்களுக்கு இன்னும் அறநூறு பார்ப்பனர்களை இணைத்து 730 பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுக்கிறான். அந்தப் பார்ப்பனர்களுடைய பெயர்கள் எல்லாம் வரிசையாக பட்டியலில் இருக்கின்றன.

அந்த நிலங்களைக் கொடுக்கின்ற செயல் இருக்கிறதே அதில் ஒரு பெரிய நிர்வாகக் கட்டமைப்பு இருக்கிறது முதலில் மன்னன் அந்தப் பார்ப்பனர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று வாய்மொழியாக ஒரு உத்தரவை போடுவான் அங்குதான் அய்யா டாக்டர் சொன்னதைப் போல ஒரு பொது இடத்தில் தனது ஆணையை வெளிப்படுத்தலாம் ஆனால் பார்ப்பனர்களுக்கு மன்னன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அல்லது மன்னன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவ்வளவு அவசரமாகத் தானம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவசரம் என்ன?. இந்தச்செப்பேடுகள் ராஜாதிராஜன் குளித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது வேறு பாண்டிய பகுதியிலே சிற்றரசனாக இருந்த ஒருவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நிலங்களை அவன் பார்ப்பனர்களுக்குத் தானமாக மாற்றிக் கொடுக்கிறான் என்று சொல்கிறது அதேபோல உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மன்னன் கொடுத்ததாகச் சொல்கிறது. பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் மன்னன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லா நேரங்களிலும் பார்ப்பனர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், தானம் கொடுக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டு இருக்கின்றார்கள்.

இந்தச் செப்பேடுகளைப் படித்த பின்பு பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள், வரி நீக்கம் செய்யப்பட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டு அவையெல்லாம் தேவதான சதிர்விதி மங்கலகங்களாக அழைக்கப்பட்டன என்பதை அறிந்து இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது .பல்வேறு சோழ செப்பேடுகள் பற்றி எல்லாம் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்து, சேகரித்து ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்களமும்’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறேன்.அதற்காக எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இதனை வெளியிட்ட திராவிடப்பொழில் ஆசிரியர் குழுவிற்கு நன்றி என்று கூறி ஏற்புரை ஆற்றினார்.

நிகழ்வில் இறுதியாகக் கேள்வி-பதில் மற்றும் கருத்துக் கூறூம் பகுதி நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு,மணிமேகலை,நாஞ்சில் பீட்டர்,அயனாபுரம் துரை,சிவந்தி அருணாச்சலம்,,பேரா.சோம.வேலாயுதம்,மருத்துவர் சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட பலர் கருத்துக் கூறினர்

தொகுப்பு: முனைவர் வா.நேரு