தமிழில்

தமிழில் காண

NEWS & ANNOUNCEMENTS

திராவிடப்பொழில் - இணைய வழி ஆய்வரங்கம்


January - March 2025

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா சார்பாக திராவிடப் பொழில் இதழ் 15-ஆம் இதழின் இணையவழி ஆய்வறங்குக் கூட்டம் 2025 ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை, தமிழ் நாட்டுத்தேர்வின்படி இரவு 7:30 மணிக்கு ஆன்லைனில் நடைபெற்றது. இதனை ஒருங்கிணைத்து பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா, தலைவர் ஐயா மருத்துவர் சோம இளங்கோவன் அவர்கள் தொடக்க உரை வழங்கினார். அவர் தனது உரையில்...

இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். நான் அனைவரிடமும் சொல்வது தமிழர்களின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று. தொடங்கி வெகு காலம் ஆனாலும் இப்போதுதான் வெளி உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு சிறப்பாக உள்ளது. படிப்பு மட்டுமல்லாது தொழில், கிராம முன்னேற்றம், பெரியார் புரா என்ற அமைப்பு மேதகு அப்துல் கலாம் அவர்களின் கனவுத் திட்டத்தை 65 கிராமங்களில் நிறைவேற்றியது. மண்புழு தயாரிப்புவரை பல்வேறு தயாரிப்புகளில் முன்னுரிமை பெற்று அவற்றை நடத்தி வருகின்றனர்.

அந்த நிலையில் திராவிடப் பொருள் ஆராய்ச்சி இதழ் ஆரம்பித்து நடத்தி வருவது நமக்கெல்லாம் சிறப்பான, மகிழ்ச்சியான செய்தியாகும். நல்ல முயற்சி. இதனை ஆதரித்து பெரியார் பன்னாட்டு அமைப்பு, திராவிடப் பொருள் இதழில் வரும் இரண்டு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை உரியவர்களை வைத்து ஆய்வு செய்ய முயற்சி செய்து நடத்தி வருகின்றோம். அதனைப்போல் இன்றைய நிகழ்விலும் இரண்டு கட்டுரைகளைப் பேச இருக்கின்றார்கள். இன்று மிகவும் சிறப்பான நாள். ஏனெனில் இந்த இரண்டு கட்டுரைகளையும் எழுதியவர்கள் பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள்; அதே நேரத்தில் எழுத்தாளராக, எழுத்தாளர் சிகரங்களாக விளங்கி வருகின்றார்கள். திராவிடப் பொருள் - இணைய வழி ஆய்வரங்கம் வருபவர்கள் அய்யா சங்ககையா அவர்களும் அய்யா நேறு அவர்களும். இருவரும் பல்வேறு படைப்புகளை நமக்குத் தந்துள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் “கடவுள் சக்தி வாய்ந்தவரா? இல்லை, இந்த ஐபோன்தான் சக்தி வாய்ந்ததா?” என்று கேட்டால் — இந்த ஐபோன்தான் சக்தி வாய்ந்தது என்று இளைஞர்களுக்குக் கூடத் தெரியும். யாராலும் முடியாததை இந்த ஐபோன் தனியாக இவ்வளவு சிறப்பாக கையடக்கத்திலே செய்து வருகிறது என்பதையே நாம் வியந்து பார்க்கின்றோம். ஆனால் இதைவிட வியப்பாக, இன்னும் வியப்பாக இருக்க முடியுமா என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில் — “ஆமாம், முடியும்” என்று மனித மூளைக்கு இணையாக, சில நேரங்களில் மனித மூளையையும் தாண்டி வேலை செய்யும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உருவாகியுள்ளது. நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்குச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. அதை நாமெல்லாம் புரிந்துகொள்ளும் வழியில், அதுவும் தொழிலாளர்களுடைய முன்னேற்றத்தில் எந்த அளவிற்குப் பங்கு வகிக்கப் போகிறது என்பதைக் குறித்து அய்யா சங்ககையா அவர்கள் ஓர் அருமையான கட்டுரையாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையை ஆய்வு செய்ய ஒளிவண்ணன் அவர்கள் வந்திருக்கிறார்.

ஒளிவண்ணன் அவர்களின் தந்தையார் அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள், ஆங்கிலத்தில் தந்ததை பெரியார் பற்றி முதன்முதலாக ஒரு அழகான நூலை வெளியிட்டார். அதன் பின்னர் பல்வேறு தலைப்புகளில் தந்ததை பெரியார் அவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அந்த நூல்களை நான் பல அமெரிக்க அறிஞர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறேன். அவருடைய பாதையிலே, அவரைத் தாண்டி பல்வேறு துறைகளில் ஒளிவண்ணன் இருக்கிறார். இந்நுறையில் இல்லாமல், ரோட்டரி கிளப்பிலும் அவர் பெரிய தலைவர், அமெரிக்காவிற்கு வந்து ரோட்டரி கிளப்பில் பணிபுரிந்துள்ளார். பதிப்புத் துறையில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஒரு தலைமைப் பண்புடன் பணியாற்றி வருகிறார். அவர் பின்னரே இருபவர்்களைப் பார்த்ததால் அவருடைய பெருமை தெரியும். இன்று இந்நிகழ்வில் நுண்ணறிவு பற்றி அய்யா சங்கையா அவர்களின் கட்டுரையை நம்மிடம் ஆய்வு செய்து நமக்கு எல்லாம் பாடம் எடுக்க இருக்கிறார். அந்தப் பாடத்தை கேட்க ஒரு மாணவனாக நானும் வந்து கலந்து கொள்ள பெருமைப்படுகிறேன். அவரை உரையாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி திரு கோ. ஒளிவண்ணன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.

கோ. ஒளிவண்ணன் அவர்கள். அன்பிற்குரிய நண்பர்கள், இந்த திராவிடப்பொழில் இதழை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். என்னுடைய எழுத்துப் பணி விடுதலையிலும் உண்மையிலும் தான் ஆரம்பித்தது. காலம் சென்ற நண்பர் பெரியார் சக்ரடீஸ் தான், என்னை எழுதுங்கள் என்று சொல்லி எனது எழுத்துப் பணியை ஆரம்பித்து வைத்தார். இந்தக் கட்டுரையை வாசிக்கிறபோது கடந்த இரண்டு வருடமாக இதில்தான் நாம் பின்னிப் பிணைந்து இருக்கிறோம் என்பது என் நினைவில் வந்தது.

நான் இருக்கிற பதிப்புத்துறை செயற்கை நுண்ணறிவால் மிகவும் பாதிக்கப்பட்ட துறை. பதிப்புத்துறை என்று இல்லாமல் எல்லா துறைகளையும் பாதிக்கக்கூடிய இந்தச் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை முதல் கட்டத்திலேயே உணர்ந்திருக்கிறோம். நாங்கள் அதற்காக பல்வேறு வேலைத் திடங்க்களைச் செய்து கொண்டிருக்கிறோம். பதிப்புத் துறைக்குத்துதான் தொடங்கினேன் என்றாலும் கூட இன்றைக்கு அரசாங்கத்திற்காக, பல்கலைக்கழகத்தில் பல பாடத்திடங்களுக்கு இந்தச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சென்றிருக்கிறோம். எப்படி இதனை எளிமையாகக் கற்றுக்கொடுக்கலாம் என்ற குழுவில் நானும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் சங்கையாவின் இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு குறித்து எந்தச் செய்தியாக இருந்தாலும் நான் விடவில்லை. திராவிடப்பொழில் இதழ் எனது கைக்கு வந்தவுடன் நான் அந்தக் கட்டுரையை முதலில் வாசித்தேன். என்றால் இந்தக் கட்டுரையைத் தான் ஏனெனில் அந்த அளவிற்கு நமக்கு இன்றைக்கு அது தேவையாக இருக்கிறது.

இந்தக் கட்டுரை மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு என்பது எப்படி ஐம்பதிலிருந்து தொடங்கியது, இன்றைக்கு வரை அதன் வளர்ச்சியைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மனிதன் இயந்திரங்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கிய தொழில் புரட்சி காலத்தில் இருந்து இதனுடைய வரலாற்றை மிக அருமையாகக் கட்டுரையாக சங்கையா எடுத்துக் கூறியிருக்கிறார். ஏன் அறிவியல் இப்படிக் கண்முன் தெரியாமல் போய் கொண்டிருக்கிறது, இந்த அறிவியல் மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என்று கேட்கிறார்கள். இந்த நூற்றாண்டில், இந்த மாற்றங்களை நீங்கள் நிறுத்தச் சொல்கிறீர்கள்? போன நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றமா? 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாற்றமா? அல்லது ஐம்பதாயிரம் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளில் சுற்றிக்கொண்டு திரிந்தோமே அப்போது ஏறப்பட்ட மாற்றமா? எல்லா விலங்குகளும் ஒன்றரை ஒன்று தாக்கிக் கொண்டிரும்போது நாம் எங்கோ ஒரு மூலையில் தான் இருந்தோம். எப்போது நாம் குனிந்து கல்லை எடுக்க ஆரம்பித்தோமோ, அப்போது இருந்து நம்முடைய அறிவு பயன் பட ஆரம்பித்தது. இந்த உலகத்தில் ஏற்றப்பட்ட எல்லா மாற்றங்களும், நம்மை நாம் தகவமைத்துக் கொள்வதற்காக, இந்த உலகத்தில் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காக ஏற்றப்பட்ட மாற்றங்களே தான். இரண்டு லட்சம் ஆண்டுகளாக ஹோமோ சாபியன்ஸ் என்ற இனம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. ஏற்கனவே நம்மோடு இருந்த இனங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது, அழிந்துவிட்டதைப் பார்த்ததோம். ஹோமோ எரக்டஸ் போய்ந்னர் எல்லாம் அழிந்து விட்டனர் அல்லது அழிக்கப் பட்டனர். எல்லாருமே போய்விட்டனர். ஹோமோ நியாண்டர்தல் பற்றிச் சொல்லும்போது அவர்கள் நம்மை விட மிகுந்த மூளை வளர்ச்சி அடைந்தவர்கள், அறிவு கூடியவர்கள் என்று கூடச் சொல்லுவார்கள். நாம் மட்டும் எப்படி தப்பித்தோம்? சார்்லஸ் டார்வின் அவர்கள் சொன்னதைப் போல எது ஒன்று தன்னுடைய சூழலுக்கு ஏற்ற தகவமைத்துக் கொள்கிறதோ அதுதான் பிழைக்கிறது. எனவே நாம் நம்மைத் தகவமைத்துக் கொண்டதனால் தான் தப்பி பிழைத்து வந்திருக்கிறோம்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வேட்டையாடி வருவது மிகுந்த சிரமமாக இருந்தது என்று தான் விவசாயப் புரட்சி தொடங்கியது. விவசாயப் புரட்சிகளுக்குப் பின்னர் ஒரு 200–300 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்ட மாபெரும் தொழில் புரட்சி. தொழில்புரட்சி ஏற்றப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் அதற்கு முன்னதாக நூற்றாண்டில் ஏற்றப்பட்ட அறிவியல் மறுமலர்ச்சி. அதுதான் காரணம். அதுவரை அறிவியல் என்பது சமயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிலிருந்து அறிவியல் விடுபட்டது அவ்வளவு எளிதாக விடுபடவில்லை என்றாலும், எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டனர், தூக்கிலடப்பட்டனர் என்றாலும் அறிவியல் வெற்றி பெற்றது. அந்த மதகுருமார்களும் அதன் நிறுவனங்களும் மன்னிப்பு கேட்டதை கூட நாம் பார்த்திருக்கிறோம். இந்த அறிவியல் மாற்றங்கள் நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து மைக்கேல் பாரடே அவர்களின் மின்சாரக் கண்டுபிடிப்பில் இருந்து, சென்ற நூற்றாண்டில் வந்த கணினி புரட்சி வரை நாம் பார்க்கிறோம். மெது மெதுவாக ஏற்றப்பட்ட மாற்றம், இன்றைக்கு மிகவும் விரைவாக, பைசிக்கலாக இந்த அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையில் சங்கையா அவர்கள் செயற்கை நுண்ணறிவின் மூன்று அலைகளைப் பற்றிச் சொல்லுகிறார். நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது முதல் அலை. இதை சுனாமி என்று சொல்லலாம். ஆழிப் பேரலை போனதுதான் இந்தச் சாட் சீபீட்டி. கணினிக்குள் சென்ற பதினைந்து வருடங்களாகவே இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வேர்டு டாக்குமெண்டில் நமக்குத் தெரியாமலே எழுத்துப் பிழைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது. அதுத்தான் இணையம் எடுத்துக் கொடுத்தது. நமக்கு விருப்பமான திரைப்படங்கள், விருப்பமான பாடல்கள் எல்லாம் அது பட்டியலிட்டு காட்டியது. இதெல்லாம் எப்படி ஏற்றப்பட்டது என்று நாம் கேட்கவில்லை. நமக்கு வியப்பாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாற்றங்களை எல்லாம் உள்ளவாங்கிக் கொண்டோம். இதனை சாட் சீபீட்டி வந்ததை முதல் அலையாக இந்தக் கட்டுரையில் சங்கையா குறிப்பிடுகிறார்.

நாம் நிறையக் கேட்கட்டாலும், பேசினாலும் ஒரு நேரத்தில் ஒன்றையே தான் முதல்அலை சாட் சீபீட்டியால் கொடுக்க இயலும். நாம் கொடுக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கொண்டு அது சாமர்த்தியமாகச் சில செய்திகளைக் கொடுக்கிறது. ஒரு நல்ல செக்ரட்டரி ஆகத் தான் இருக்கிறது. ஒரு நல்ல செயலாளர் என்பவர் யார்? முதலில் அலுவலகத்துக்குப் போகும்போது ஒன்றுமே தெரியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமா அங்கு நடக்கக்கூடிய நிகழ்ச்சியை வைத்து நாம் என்ன நினைக்கிறோமோ அதை அவர்கள் சொல்லும்போது சபாஷ் என்று சொல்லுகிறோம்.

இதற்கு அடித்த கட்டம் நகரப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆர்டிபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ். இதை தான் சங்கையா இரண்டாவது அலை என்று சொல்கிறார். இதில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுக்கு தானாகச் சிந்திக்கக்கூடிய திறமை வந்துவிடும். இன்று நாம் அதைப் பார்க்கின்றோம். நாம் ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு நாம் உள்ளவாங்குவதை விட, அது படித்துவிட்டு உள்ளவாங்குவது மிகக் கூடுதலாக இருக்கிறது.

சூப்பர் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்… அது மூன்றாவது அலை. அது எப்போது வரும் என்று தெரியாது. நாம் சிறிய அளவில்தான் பார்த்துப் பெருமைப்படுக் கொண்டிருக்கிறோம். இது மிக மிகச் சிறிய ஒரு மாதக் குழந்ததை என்று கூட சொல்லலாம். இன்னும் அது தவழ்ந்து, வளர்ந்து பெரிய ஆளாகும்போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தை எட்டி இருப்போம். அப்புறம் இந்தக் கட்டுரையில் நிறைய உதாரணங்களை கட்டுரை ஆசிரியர் சங்கையா குறிப்பிடுகிறார். குறிப்பாக கேரளாவில் வகுப்பு ஆசிரியர் போலவே ஒரு ரோபோட் வந்து பாடம் எடுப்பதைப் பார்த்ததோம். ஒரு செய்தி வாசிப்பாளராக ஒரு ரோபோட் இருப்பதை நாம் பார்த்ததோம். இதையெல்லாம் நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இன்றைக்கு நாம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வந்திருக்கிறது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதைப் பற்றி இரண்டு பேர் செயற்கை நுண்ணறிவின் மூலம் உரையாடுவதைப் பார்த்ததோம். நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்னால் பார்த்ததற்கும், ஐந்து மாதத்திற்கு முன்னால் பார்த்ததற்கும் இன்றைக்கு பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தக் கட்டுரையில் நிறைய தரவுகளை சங்கையா கொடுத்திருக்கிறார். நிறைய உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டுரையாக அல்லது ஒரு பேச்சாக இருந்தாலும் மையக் கருத்து என்பது முக்கியம். அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்ற அந்த மைய நிலை என்பது மிக முக்கியம். இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தூரத்துக்குத் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்யும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் மையக் கருத்து. அதற்கு சங்கையா நிறைய உதாரணங்களைச் சொல்லுகிறார். அந்தக் காலத்திலேயே பெரிய பிரச்சனைகள் வந்திருக்கிறது. நான் கண்ணனால் பார்த்தது, 1980-களில் சென்னையில் சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு முன், கம்ப்யூட்டரை எல்லாம் போட்டு உடைத்து அங்கு வேலை செய்தவர்கள் போராட்டம் செய்தனர். கம்ப்யூட்டர் வந்ததால் நம்முடைய வேலை வாய்ப்பு எல்லாம் போய்விடும் என்று சொல்லி போராட்டம் நடத்தியதைப் பார்த்தோம். ‘திணிக்காதே திணிக்காதே’, ‘கம்ப்யூட்டரைத் திணிக்காதே’ என்று முழக்கம் போட்டு கொண்டனர். நாங்கள் பக்கத்தில் வடை சாப்பிட்டுக்கொண்டு அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தோம். அது ஒரு காலம். குதிரை வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் சேர்ந்து கார் வந்த போது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மோட்டார் வாகனங்கள் எல்லாம் வந்ததால் குதிரை வண்டிக்காரர்கள் வாழ்க்கை என்ன ஆவது? என்று கேட்டனர். இதையெல்லாம் சங்கையா சொல்கிறார். இங்கிலாந்தில் போராடிய காரர்கள் அந்த இயந்திரங்களை எல்லாம் போட்டு உடைத்தனர், வேலை வாய்ப்பு போய்விடும் என்று பயந்தனர். உண்மைதான்..

அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். சங்கையா சில வழிமுறைகளை சொல்லி அவர்களைச் செய்யச் சொல்லுகிறார். அதில் சில உட்டோப்பியனாக இருந்தாலும் கூட, சில நாம் ஏற்கக் கூடியதாக இருக்கிறது. அரசாங்கங்கள், நிறுவனங்கள் தொழிலாளர்களோடு பேசி இதெல்லாம் நடக்கப்போகிறது என்று தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சொல்கிறார். இதுவெல்லாம் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய எதார்த்தம் வெள்ளத்தை எதிர்த்து நாம் நீச்சல் போட முடியாது. வெள்ளத்தோடு செல்ல கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கட்டடையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது, திறனை வளர்த்துக் கொள்ளுதுதான். இந்த வயதில் நான் என் சார கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்வது ஆபத்து. 92 வயதிலும் நம்முக்கெல்லாம் முன்னோடியாக எல்லாவற்றிலும் வழிகாட்டியாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இருக்கிறார். இப்போது வரக்கூடிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார். 1970களில் முதன்முதலில் வந்த கம்ப்யூட்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர் தந்ததை பெரியார். புதிதாக எதுவும் வராமல், ஏற்கனவே இருப்பது நல்லதாகத்தான் இருக்கிறது. “புதுசா எதற்கு?” என்று கேட்டால் எதையுமே நாம் செய்ய இயலாது.

இதை எப்படி எதிர்கொள்வது என்று கேட்டால், வயதைப் பற்றிக் கவலைப்படாமல் யாரெல்லாம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள், அவர் தான் இதோடு சிம்பிள் பண்ணி போக முடியும். ஒரு லாயருக்கு வேலை போய் விடுமா என்று கேட்டால், ஆமாம் போகும், ஆனால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இன்னொரு லாயருக்கு அந்த வேலை போய் விடும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த தெரிந்த டாக்டர், தெரியாத டாக்டருக்கு ஒரு பெரிய சேலஞ்ச் ஆக இருக்கும். இரண்டு வகையான உருவாகும். சமூக ஆர்டர் என்பது பாதிப்பு ஏற்படும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பை பேசிக் கொண்டிருக்கிறோம். இது எந்த அளவிற்கு இந்த சிஸ்டத்தை பாதிக்கும் என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். எது டிவி ரிமோட், எது ஏசி ரிமோட் என்று தெரியாது, பயன் படுத்தத் தெரியாது என்று சொல்லக்கூடிய ஒரு தலைமை இருக்கலாம். ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ள உறவு தான் ஒரு மிகப்பெரிய அளவிற்குப் பாதிக்கும் என்று சொல்கிறார். ஒரு பத்து–பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சம்பவத்தை சொன்னனர். வகுப்பறையில் ஓர் ஐந்து வயது மாணவிக்கு ஒரு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியருக்கே தெரியாத சில வழிமுறைகளை அந்த நோட்புக்-ல் அந்த மாணவி போட்டு இருக்கிறார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு செய்து விட்டார்கள் என்றால், பள்ளிக்கூடம், கல்லூரியில் எல்லாம் ஒரு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

சங்கையா நிறையப் புள்ளி விவரங்களை கொடுத்திருக்கிறார். இரண்டு புள்ளி இரண்டு லட்சம் ரோபோட் தொழிற்சாலை ரோபோட்டுகள் இருக்கிறது என்று சொல்கிறார். விரைவில் இது 200 மில்லியன் ரோபோட் ஆகி விடும் என்று சொல்கிறார். அதாவது 20 கோடி ரோபோட் ஆகிவிடும். இது எங்குக் கொண்டு போய் நிறுத்தும் என்றால் வேலைகள் முழுக்க முழுக்க இயந்திரமாக ஆகிவிடும். ரோபோட் வசம் போய்விடும் என்று சொல்கிறார். எல்லாருக்குமே இந்த அச்சம் வருகிறது. ஆனால் இந்த அச்சத்தைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் முன்னமே சொன்னது போல ஹோமோ சாபியன்ஸ் தங்களைத் தாங்களே தயார் படுத்திக் கொண்டதால் தான் வெற்றி பெற முடிந்தது. நாம் நம்மிடம் இருக்கும் பல பிரச்சனைகளில் இருந்து நாம் விடுதலை பெற முடியும் என்பதே அடிப்படை.

நம்முடைய கல்வி முறைகள் எல்லாம் படித்து மனப்பாடம் செய்து எழுதும்முறை. சுயசிந்தனையை வளர்ப்பது இல்லை. இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும், விதிவிலக்குக் கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசன் ஆக இருந்தாலும் சரி, ஐன்ஸ்டீன் ஆக இருந்தாலும் சரி, மைக்கேல் பாரடே ஆக இருந்தாலும் சரி, வகுப்பறையில் இவர்கள் எல்லாம் லாயக்கர் என்று ஒதுக்கப்பட்டவர்கள். சிந்தனை பவர் என்பது தான் மிக முக்கியம். அதனால் இனிமேல் பல வேலைகளை இது செய்யப்போகிறது என்பதால் பயம் வேண்டாம்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் கால்குலேட்டர் பயன்படுத்திய போது, எனது தாத்தா என்னுடைய தலையில் கொட்டினார். “இதையெல்லாம் பயன் படுத்தினால் உனது அறிவு என்ன ஆகும்?” என்று கேட்டார். மூளைக்கு வேலை கொடுத்ததால் தான் உன்னால் செயல்பட முடியும் என்றார். கம்ப்யூட்டர் வரும்போது அவர் இல்லை. ஆனால் எல்லாமே மாறிவிட்டது. அதேபோல தான் 80களில் கம்ப்யூட்டரை எதிர்த்து ரயில்வேயில் தொழிலாளர்கள் போராடினாலும், வேறவேறு விதமான வேலை வாய்ப்புகளைப் புதிய கம்ப்யூட்டர் கொண்டு வந்து தந்தது. இப்போது என்ன ஆகும் என்று சொன்னால், இப்போது இருக்கும் சிஸ்டம் கலந்துவிடும். ஆட்டத்தைக் கலைச்சாச்சு. நிறைய விஷயங்கள் வரும். இன்று நிகழும் பல விஷயங்களை பத்து–பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? நான் உரை முடிந்தவுடன் ஒரு ஆடியோ போடப்போகிறேன். இந்தக் கட்டுரையை படிக்க எனக்கு 35-40 நிமிடம் ஆனது. முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, நோட்புக்-ல் குறிக்கிறதற்கு ஒரு பத்து–பதினைந்து நிமிடம் எடுத்தேன். இப்படி எல்லாம் வேலை செய்துதான் பேச முடிகிறது. என்னுடைய ஒரு மணி நேர உழைப்பை ஐந்தே நிமிடத்தில் இந்தச் சாட் சீபீட்டி செய்து கொடுக்கிறது. சங்கையாவின் கட்டுரையைக் கொடுத்தவுடன் அதுவே படித்துவிட்டுச் சுருக்கமாக அந்தக் கட்டுரை என்ன சொல்கிறது என்பதைக் சாட் சீபீட்டி கொடுத்துவிட்டது. “நீயும் ஒரு கட்டுரையாகக் கொடுத்ததால் என்ன பயோஜனம்? வேற மாதிரி கொடு” என்று கேட்டவுடன், இருவருக்குமான உரையாடலாக மாற்றி கொடுத்ததால் நன்றாக இருக்குமா? என்று கேட்டார். தாராளமாகக் கொடு என்று சொன்னவுடன் முழுத் கட்டுரையையும் ஒரு உரையாடலாக ஆறு நிமிடத்தில் கொடுத்து விட்டது.

இன்னும் சில செய்திகளை இந்தக் கட்டுரையில் எடுத்துச் சொல்லி இருக்கலாம் என்று நான் நினைப்பதை சொல்கிறேன். அப்படியே விடப்பட்டது இ.எம்.ஐ என்று சொல்லக்கூடியது. நான் என் மூளையில் நினைக்கிறேன் என்பதை அது அப்படியே வடிவமைத்து காட்டுகிறது. என்னுடைய எண்ண அதிர்வுகளை அப்படியே ஹார்ட் டிஸ்க்கில் கொண்டு போய் கொடுத்து பாதுகாக்கும். நான் நாளைக்குப் போய் விட்டாலும் கூட அது பதில் சொல்லும். அது வந்து இன்னும் எங்கோ நம்மை, மனித சமூகத்தை கொண்டு செல்லக்கூடியது. அதுபோல இன்னொரு வகை வந்து மரபணுகளில் ஏற்கக்கூடிய மாற்றங்கள். இந்தக் கட்டுரையைப் பொருத்த அளவில் வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறது. எப்படி ஒரு டாக்குமெண்டில் எடிட் பண்ணி அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் சரி செய்கிறோம், அதைப்போல மரபணுகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளைக் களைந்து கருவிலேயே ஒரு குழந்தைக்கு இருக்கக்கூடிய குறைபாடுகளைக் கண்டு அதை களையக் கூடிய ஒரு தொழில்நுட்பம் வந்து கொண்டிருக்கிறது.

பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற நூலில் குறிப்பிடட்டார், பரிசோதனைக்கூடத்தில் நல்ல வீரியம் உள்ள குழந்தைகளைப் பிறக்க வைப்பார்கள் என்று. ஜப்பானில் பெண்களுக்கு கருப்பைத் தேவையில்லை. இதுவரை “வாடகைத் தாய்” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது பெண்ணின் உடலுக்கு வெளியே இருக்கக்கூடிய செயற்கை கர்ப்பப்பை. இவையெல்லாம் தந்ததை பெரியார் அவர்கள் 1930லேயே சொன்ன செய்திகள் தான். இது வந்து பயப்பட வேண்டிய காலம் இல்லை, மகிழ்ச்சி அடைய வேண்டிய காலம் என்று குறிப்பிட்டு மிகச் சிறப்பாக திறனாய்வு செய்தார். தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் மூலம் இரண்டு பேர் உரையாடலாக அமைந்த இந்தக் கட்டுரையின் உரையாடல் ஒலிபரப்பப்பட்டது. அந்த உரையாடலின் நுட்பமும் செறிவும் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

தொடர்ந்து கட்டுரை ஆசிரியர் எழுத்தாளர் மு. சங்கையா அவர்கள் திறனாய்வு செய்த திறனாய்வாளர் கோ. ஒளிவண்ணன் அவர்கள் மற்றும் திராவிடப்பொழில் ஆசிரியர் குழுவிற்கும், நிகழ்வினை நடத்திய பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவிற்கும் அதன் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்து, தனது கருத்துகளையும் அவைகளுக்கு தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அடுத்த கட்டுரையை திறனாய்வு செய்ய வந்திருந்த நன்னன்குடி வேண்மமாள் அவர்களை அழைத்து, “வேண்மமாள் அவர்கள் வங்கியிலே பணியாற்றியவர் என்றாலும், அவர் உடலிலே ஓடுவது அய்யா தமிழ் அறிஞர் நன்னன் அவர்கள் இரத்தம். தமிழ், தமிழ் என்று உழைத்தவர் இரத்தம். அந்த தமிழ் அறிஞரின் மகள் இங்கு வந்து திறனாய்வு செய்து இருக்கிறார். எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும், ராக்கெட் விடுகிற அறிவியல் அறிஞர், திருப்பதி கோயிலேல் போய் கும்பிட்டு வந்துதான் ராக்கெட் விடுகிறார்கள். அதுதான் இந்தக் இந்தியா. அதை பற்றி, அறிவியல் மனப்பான்மையைப் பற்றி அருமையான கட்டுரையினை நேரு அவர்கள் வடித்திருக்கிறார். அதை ஆய்வு செய்ய மிக அன்புடன் வேண்மமாள் நன்னன் அவர்களை அழைக்கிறேன் என்று மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் அழைத்தார்.

வேண்மமாள் நன்னன் அவர்கள், அறிஞர் பெருமக்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மிகவும் இன்றியமையாதது. அதுபோல் தான் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அறிவியல் மனப்பான்மையும் மிகவும் தேவையானது. அறிவியல் மனப்பான்மையை இன்றியமையாதது என்று உணர்ந்ததால் தான் நம்முடைய அரசியல் சட்டம் 51 என்னும் ஒரு கூற்று, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது அடிப்படைக் கடமை என்று தெரிவிக்கிறது. நாம் அப்படியே அறிவியல் மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டிய காலம் இது. அந்த வகையில் முனைவர் வா. நேரு அவர்கள், ‘அறிவியல் மனப்பான்மையும் இந்திய ஒன்றியமும்’ என்னும் தலைப்பில் திராவிடப்பொழில் இதழில் அருமையான கட்டுரை ஒன்று வடித்துள்ளார்.

நேரு அவர்கள் தமது கட்டுரையைக் கட்டுரை சுருக்கம், அறிவியலும் அறிவியல் மனப்பான்மையும், அறிவியல் மனப்பான்மையை என்னறால் என்ன?, ஜனநாயகமும் அறிவியல் மனப்பான்மையும், அரசு நிறுவனங்களும் அறிவியல் மனப்பான்மையும், நீதிமன்றங்களும் அறிவியல் மனப்பான்மையும், ஊடகங்களும் அறிவியல் மனப்பான்மையும், சமூக நீதியும் அறிவியல் மனப்பான்மையும் என்னும் உத்தலைப்புகளை அமைத்துக் கொண்டு கட்டுரையை வழங்கி உள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் அறிவியல் வளர்ச்சியும் பெரும் பய்ச்சலைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் கிடைத்ததா என்ற வினாவை வைத்துதான் இந்தக் கட்டுரையை அமைத்துள்ளார். இந்தக் கட்டுரையின் முதலாவது பகுதி அறிவியல் மனப்பான்மையை இந்தத் தலைப்பிலே, அறிவியல் என்பது உண்மையைத் தேடி அடையும் ஒரு வழிமுறை என்கிறார். அறிவியல் பற்றிக் கூறும் ஆசிரியர், “ஒரு கருத்தை எடுத்துக்கொள்்வது. அந்தக் கருத்தை அறிவியல் முறையில் சோதனைகள் செய்வது. சோதனைகளின் முடிவுகளை அடிவணைப்படுத்துவது, மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து உண்மையை உணர்வது, பின்பு அந்த உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவது” என்பது அறிவியல் வழிமுறை ஆகும்.

அறிவியல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது என்று குறிப்பிடுகிறார். உண்மைத்தான் அதற்கு எடுத்துக்காட்டாக அணுக் கோட்ட்பாடைக் குறிப்பிடுகிறார். சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி என்னும் கோட்ட்பாடை பற்றி விளக்கியிருக்கிறார். பரிணாம வளர்ச்சி என்னும் கோட்ட்பாடு அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் இதைக் கூட இந்த மதவாதிகள் ஏற்கக் கொள்ளவில்லை. அரசு பொறுப்புகளில் மதவாதிகள் வந்து அமர்ந்ததால் கேட்கவே வேண்டாம்; அவர்கள் போலி அறிவியலையும் நம்பிக்கை என்னும் பெயரில் மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் பரப்புகின்றனர். படிக்காதவர்கள் என்று இல்லை, படித்தவர்கள் கூட அவர்களை நம்புகிறார்கள். எனவே மக்கள் அறிவுபெற அனைவரிடமும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது என்று நேரு அவர்கள் கூறுகிறார்.

அறிவியல் மனப்பான்மையை என்றால் என்ன? என்று ஒரு வினாவை எழுப்பி அதற்கான விடையையும் சொல்கிறார்.

“எப்பொருள் யார்கயார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு. ”

எப்பொருள் எத்தன்மைதாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

இந்த இரண்டு குறட்டுபாக்களுமே தமிழர் அறிவியல் மனப்பான்மையை உலகத்துக்கு எடுத்துக்காட்டும் என்பதில் நமக்கு ஐயமே கிடையாது. ‘நிகழ்வுகளை ஆய்ந்து பார்ப்பதுதான் அறிவியல் மனப்பான்மை’ என்று ஜோசப் பிரபாகர் குறிப்பிடுகிறார் என்று நேரு இந்தக் கட்டுரையிலே குறிப்பிடுகிறார். ‘நம்பிக்கை வை, நல்லது நடக்கும்’ என்று மதவாதிகள் பரப்புரை செய்து மக்களை இருளிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்திய அரசு இன்று மூடநம்பிக்கைவாதிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு கிடக்கிறது. மக்களுக்கு அறிவியல் மனப்பான்மை பரவ வேண்டும் என்று கூறும் ஆசிரியர், அது வெறுமனே பரவுவதற்கானது மட்டுமல்ல, எளிய மக்களின் உயர்வுக்கான ஓர் ஆயுதம் என்பதையும் புரிய வைக்க வேண்டும் என்று கூறுகிறார். மூடநம்பிக்கை என்பது அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது, மனித குல சமத்துவத்திற்கு எதிரானது, எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் கோட்ட்பாட்டுக்கு எதிரானது என்று குறிப்படுகிறார்.

ஒரு பகைநாட்டைக் கைப்பற்றும் ஓர் அரசன் அந்த நாட்டின் மக்களைத் தன் வசப்படுத்துவான் என்றால், அவன் அந்த நாட்டின் கடவுளர்களைத் தன் நாட்டின் கடவுள்களோடு இணைத்துக் கொள்வான். அந்த மன்னர்களின் ஆயுதமே மதமும் கடவுளும்தான். அந்தப் புதுக் கடவுள்கள் பற்றிப் பல புனைவுகளைப் பரப்புவார்கள். கதைகளை, கட்டுக்கதைகளைப் பரப்புவார்கள். ஆக அந்தப் புதுக் கடவுளோடு மன்னனையும் இணைப்பார்கள். மக்களும் அந்தப் புதுக் கடவுளை வணங்கும் அதே வேளையில், மன்னனையும் கடவுளின் பிரதிநிதியாகவே ஏற்கொள்வார்கள். கடவுள் இந்த மன்னர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் என்று தோழர் ஓவியா தெரிவிப்பதாக நேரு குறிப்படுகிறார். அன்றைய மன்னர்கள் என்பதால் இன்று பிரதமர், அமைச்சர்கள் நம் நாட்டில் கார்ப்பரேட் சாமியார்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். உத்தரப் பிரதேச அமைச்சர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறுகிறார்: “மாட்டுக் கோமியத்தை வீடுகளில் தெளிப்பதன் மூலம் வாஸ்து பிரச்சனைகள் நீங்கும். வேறு ஏதேனும் தடைகள் இருந்தாலும் நீங்கும். பசுவின் சிறுநீரில் கங்கை தேவி வசிக்கிறாள். மாட்டுச் சாணத்தில் லட்சுமி வசிக்கிறாள். பசுக் காப்பகங்களை மேம்படுத்த பா.ஜ.க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்” என்று நேரு அவர்கள் வருத்தத்துடன் அந்தச் செய்தியை பதிவிடுகிறார்.

மூட நம்பிக்கைகள் பெரும்பாலும் ஆபத்தானவை. நோய்களுக்கு காரணம் விதி என்றும், பிறவி பலன் என்றும் நம்பி, மந்திரம், தந்திரம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து மருத்துவத்தை மறுக்கும் போது அருமையான உயிர்கள் இழக்கப்படுகிறார்கள். விடுதலை இதழில் “ஊசி மிளகாய்” என்ற பகுதியில் ராஜஸ்தான் சட்டசபையில் நடந்த, இந்த மூடநம்பிக்கைகள் காரணமாக நிகழ்ந்த கூத்துகள் அனைத்தும் விவரிக்கப்பட்டு, அதனைப் பற்றிய கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது. சட்டசபை புதிய கட்டிடம் திறக்கப் பட வேண்டும். அங்குப் பல தகுதி இழப்புகள் நடந்துவிடுகின்றன, மரணங்கள் நிகழ்கின்றன. 2024 ஆம் ஆண்டு 200 உறுப்பினர் கொண்ட சட்டசபை அமைக்கப்படுகிறது. ஆனால் உடனே, ஓரிரு நாட்களில் அந்த சட்டசபையில் பாஜகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் இறந்து விடுகிறார். உடனே தீய சக்தி சூழ்ந்துள்ளது என்று புனித நீர் தெளித்து கூத்து நடத்தப்படுகிறது. இப்படி மூட நம்பிக்கைகள் கொடி கட்டி பரவுகிறதற்கான உதாரணமாக நேரு அவர்கள் இதனை சுட்டிக்காட்டுகிறார்.

அறிவியல் அறிஞர்கள் எப்போதும் அறிவியல் மனப்பான்மையோடு இருக்கிறார்கள் என்று நாம் எண்ணினால், பெரும் மாற்றத்திற்கு நாமும் ஆளாகலாம். 2014-ல் பிஜேபி அரசு பதவி ஏறிய பிறகு, அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளிலும் உயர் பதவிகளிலும் இந்து மதவாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மனப்பான்மையால் என்ன மதிப்புள்ளதா என கேட்கக்கூடியவர் இருக்கிறார்களாம். உதாரணமாக, மண்டி ஐஐடி இயக்குனர் மாணவர்களிடம், “நீங்கள் அசைவம் சாப்பிடுவதால் இயற்கை பேரிடர் நிகழ்கிறது. நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமா? அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார். அதேபோல், சென்னையில் அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் வந்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தி, மூடநம்பிக்கைகளைப் பரப்ப முயன்றார். திராவிடர் கழகத்திற்குட்பட்ட சில அமைப்புகள் அதை எதிர்த்து அதனை தடைத்ததால், அவர் தடுப்புக்கு உள்ளானார். இதையும் நேரு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்களும் அறிவியல் மனப்பான்மையும் இந்தியா அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை, மனிதநேயம், சீர்திருத்த மனப்பான்மையை, ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இதனை வலியுறுத்த வேண்டிய ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது, “நான் கடவுளிடம் கேட்டு அவர் காட்டிய வழியில் தீர்ப்பு வழங்கினேன்” என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலாக, நேரு அவர்கள், “வரலாறு உங்களை மன்னிக்காது, சந்திர சூட் அவர்கள்” என்று மிக நேர்த்தியாக தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் நேரு விவரித்து எழுதியுள்ளார். ஊடகங்களை கடுமையாகச் சாடியுள்ளார்.

வானவியல் நிகழ்வுகளும் அறிவியல் மனப்பான்மையும் கிரகணங்கள் நிகழும் போது, மூடநம்பிக்கைகள் காரணமாக “உணவு உண்‌டக்கூடாது”, “கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது” என சொல்லப்படுகிறது. ஆனால், பெரியார் திடலில், ஆசிரியர் தலைமையில், கிரகண நேரத்தில் கூடி இருந்த அனைவரும் சிற்றுண்டி உண்‌ட்டனர். அப்போதும் கர்ப்பிணிகள் உணவு உண்‌ட்டிருந்தனர். நான் என் மகனும் வயிற்றில் இருந்த நேரத்தில் கிரகணத்தின் போது உணவு சாப்பிட்டேன். என் மகன் நன்றாகப் பிறந்தார்; நன்றாகவும் இருக்கிறார்.

கணினி போன்ற அறிவியல் கருவிகள் வளர்ந்தபோது, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் புதிய கருவிகளை பழமைவாதிகள் பெருமளவில் பயன்படுத்தி, மூடநம்பிக்கைகளை பரப்பினர். நேரு அவர் குறிப்பிடுகிறார்: அறிவியல் கருவி ஒரு கத்தி. அதை நன்று செய்யவோ, தீமை செய்யவோ செய்யும் என்பது அந்தக் கத்தியை வைத்திருப்பவரைப் பொறுத்தது. இந்தியாவில் சமூக நீதி வரும்போது, பலர் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் அறிவியல் மனப்பான்மையை ஏற்றுக் கொண்டால், தங்கள் உயர் பதவிகள் பாதிக்கப்படலாம் என்று பயந்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க விரும்பவில்லை. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வளர்ச்சி பெற, அறிவியல் மனப்பான்மை அடிப்படையாக வேண்டும். ஆனால் மதங்கள், அவற்றின் சடங்குகள் ஆகியவை பெரிய எதிரிகளாக இருக்கின்றன. மதங்கள் மூடநம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன. இந்தியாவில் பார்பனரும் பார்பனியமும் மூடநம்பிக்கையின் பாதுகாவலர்களாக இருப்பதை முனைவர் நேரு தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அறிவியல் மனப்பான்மையை பரப்புவது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்றும், பெரியார் அறிவியல் மற்றும் அறிவியல் மனப்பான்மையைப் பற்றியும் இதற்கான மேற்கோள்களைக் கூறியுள்ளார். மூடநம்பிக்கையில்லாத புதிய உலகம் உருவாக்கும் தான் பெரியாரின் இலக்கு. மூடநம்பிக்கையை முறியடித்து புதிய உலகத்தை உருவாக்க நம்மால் செய்யக்கூடியவை செய்வோம் என்று திராவிடப்பொழில், பெரியார் பண்நாட்டு அமைப்பு, அமெரிக்காவிற்கு நன்றியை தெரிவித்தனர்.

அறிவியல் மனப்பான்மையும் இந்திய ஒன்றியமும்' என்ற கட்டுரையின் ஆசிரியர் முனைவர் வா.நேரு, தன் கட்டுரையை திறனாய்வு செய்த அம்்மமா வேண்்மமாள் நன்னன் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். மேலும், பெரியார் பண்நாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் அதன் தலைவர் அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் வா.மு.சே. திருவள்ளுவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஜெயாமாறன் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தனர். இந்நிகழ்வு நிறைவடையும் போது, பெரியார் பண்நாட்டு அமைப்பு மற்றும் அமெரிக்காவின் பொருளாளர் மானமிகு அருள் பாலகுரு அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

தொகுப்பு: முனைவர் வா.நேரு