முனைவர். க. சுபாஷிணி, செருமனி
முனைவர் சுபாஷிணி தமிழ் ஆய்வாளரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். செருமனியில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார். இங்கிலாந்தின் வார்ன்பாரோ கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழ்க் கணினித் துறை ஆய்வுகளுக்காக உருவான உத்தமம் என்ற அமைப்பில் அதன் தொடக்கம் முதல் பங்களித்து வருகின்றார். தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் அமைப்பை முனைவர். நா. கண்ணனுடன் இணைந்து ஏற்படுத்தி, இணைய வெளியில் தமிழர் வரலாற்றையும், அரிய தமிழ்ச்சுவடி ஆவணங்களையும் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கினார். இம்முயற்சியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சுபாஷிணி பலமுறை தமிழகம் சென்று, அங்கே களப்பணிகளை மேற்கொண்டு, வாய்மொழி இலக்கியங்கள், சிற்பங்கள், கோயில் கட்டுமானங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய தமிழர் வாழ்வியல் கூறுகள் எனப் பலதரப்பட்ட தகவல்களை எண்ணிம வடிவில் சேகரித்து ஆய்வுகள் செய்து, மின்வெளியில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த முயற்சியின் வழி, இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தின் அரிய தமிழ் நூல்கள் சிலவும் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் இவர் டென்மார்க், கோப்பன் ஆகன் அரச நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும், லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகள் பழமையான முப்பத்தெட்டு தமிழ் கையெழுத்து ஓலைச்சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகளைத் தமிழிணையக் கல்விக்கழகம், தமிழ் ஆய்வாளர்கள் பயன் பெறும் வகையில் தங்கள் இணையதளத்தின் வழி அடைய வழி செய்துள்ளது.
தமிழ் மரபு, தமிழிலக்கியம், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து பல சொற்பொழிவுகளையும் முனைவர் சுபாஷிணி நிகழ்த்தியுள்ளார்.