தமிழில்
Volume 1, Issue 1 | January 2021 - March 2021
எம்.ஏ., பிஎச்.டி.,
P, Kalimuthu. 2021. “Tamilnadum Thanthai Periyarum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 1 (1):67-84.
'தமிழ் நாடு' என்ற ஒற்றைத் தலைமையின் பெயரால், தமிழகமும் தமிழர்களும் வரலாற்றில் ஒன்றுபட்டிருந்தமைக்கான சான்றுகள் கிட்டவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்படும் வரையில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரை ஆராய்கின்றது. 1918-இல் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்சுபோர்டு குழு அறிக்கையில் தொடங்கி, தமிழ்நாடு எத்தகையது, அதன் எல்லைப்பரப்பு என்ன, போன்றனவெல்லாம் பெரியார் அன்றே வரையறை செய்ததை நோக்கி, 'தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியை, மக்கள் உள்ளங்களில் வேரூன்ற வைத்தவர் தந்தை பெரியார் என்பதனை இக்கட்டுரை நிறுவுகிறது.
’தமிழ்நாடு’ எனும் பெயர் தொல்காப்பியத்தில் உள்ளதா என வினா எழுப்பி, சிலப்பதிகாரத்தில் 'தமிழ்நாடு' எனும் சொல்லாட்சியை இக்கட்டுரை பதிவு செய்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்களில் 'தமிழ்நாடு' எனும் சொல்லாட்சியை இக்கட்டுரை தேடுகின்றது.
பெரியார் தொடர்ச்சியாகத் ’தமிழ்நாடு’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியதையும், அவர் முன்வைத்த 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தையும், அக்கோரிக்கைக்குப் பெரியார் முன்வைத்த காரணங்களையும் 'குடிஅரசு' இதழாவணங்கள் மூலமாக வகைப்படுத்துகிறது. 'தமிழ்நாடு தமிழருக்கே' எனும் முழக்கத்தை எதிர்த்தவர்களை அடையாளம் காட்டும் இக்கட்டுரை, தமிழ்நாட்டிற்குச் 'சென்னை நாடு' என்று பெயர்வைக்க முயற்சி நடந்ததையும், அதனைப் பெரியார் கடுமையாக எதிர்த்ததையும் பதிவு செய்கிறது. ’தமிழ்நாடு’ எனும் பெயர் மாற்றத்திற்காக அறிஞர் அண்ணா, பூபேஷ் குப்தா போன்றவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் பதிவு செய்த கருத்துக்களையும் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு, காமராசர் காலத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழாதது ஏன், என வினவி விடைதேடுகிறது. அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற 'தமிழ்நாடு' பெயர்மாற்ற நிகழ்வை ஆய்வு செய்து, முடிவுகளைத் தொகுத்து வழங்குகின்றது.
பேராசிரியர் காளிமுத்து பழனிக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொழிப்போர் வீரர். தமிழும் ஆங்கிலமும் துறை போகியவர். சங்கத்தமிழின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குகிறார். நெருக்கடிநிலைக் காலத்தில் தம் பேராசிரியர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டவர்.
அய்யா காளிமுத்து, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயற்குழு உறுப்பினர். 1970-இல் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்ட போது அதன் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 'குறிப்புப்பொருள் கோட்பாடுகள்' என்பது இவரது முதல் நூலாகும். மனு ஸ்மிருதி சாத்திரத்தை ஆய்வு செய்து 'மனுநீதி -ஒரு மறுபார்வை' என்ற நூலை எழுதியவர். '3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா', 'உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு', 'சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்' போன்ற நூல்களையும், 'மாட்டுக்கறியும் மதவெறியும்', 'காந்தியார் படுகொலை: அதிர்ச்சியூட்டும் தகவல்' போன்ற நூல்களின் முக்கியப் பகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch