'தமிழ் நாடு' என்ற ஒற்றைத் தலைமையின் பெயரால், தமிழகமும் தமிழர்களும் வரலாற்றில்
ஒன்றுபட்டிருந்தமைக்கான சான்றுகள் கிட்டவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழகத்திற்குத்
'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்படும் வரையில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரை ஆராய்கின்றது.
1918-இல் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்சுபோர்டு குழு அறிக்கையில் தொடங்கி, தமிழ்நாடு எத்தகையது,
அதன் எல்லைப்பரப்பு என்ன, போன்றனவெல்லாம் பெரியார் அன்றே வரையறை செய்ததை நோக்கி, 'தமிழ்நாடு'
என்ற சொல்லாட்சியை, மக்கள் உள்ளங்களில் வேரூன்ற வைத்தவர் தந்தை பெரியார் என்பதனை இக்கட்டுரை
நிறுவுகிறது.
’தமிழ்நாடு’ எனும் பெயர் தொல்காப்பியத்தில் உள்ளதா என வினா எழுப்பி, சிலப்பதிகாரத்தில்
'தமிழ்நாடு' எனும் சொல்லாட்சியை இக்கட்டுரை பதிவு செய்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல்
இருபதாம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்களில் 'தமிழ்நாடு' எனும் சொல்லாட்சியை இக்கட்டுரை
தேடுகின்றது.
பெரியார் தொடர்ச்சியாகத் ’தமிழ்நாடு’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியதையும், அவர் முன்வைத்த
'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தையும், அக்கோரிக்கைக்குப் பெரியார் முன்வைத்த
காரணங்களையும் 'குடிஅரசு' இதழாவணங்கள் மூலமாக வகைப்படுத்துகிறது. 'தமிழ்நாடு தமிழருக்கே' எனும்
முழக்கத்தை எதிர்த்தவர்களை அடையாளம் காட்டும் இக்கட்டுரை, தமிழ்நாட்டிற்குச் 'சென்னை நாடு'
என்று பெயர்வைக்க முயற்சி நடந்ததையும், அதனைப் பெரியார் கடுமையாக எதிர்த்ததையும் பதிவு
செய்கிறது. ’தமிழ்நாடு’ எனும் பெயர் மாற்றத்திற்காக அறிஞர் அண்ணா, பூபேஷ் குப்தா போன்றவர்கள்
இந்திய நாடாளுமன்றத்தில் பதிவு செய்த கருத்துக்களையும் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு, காமராசர் காலத்தில்
தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழாதது ஏன், என வினவி விடைதேடுகிறது. அண்ணா தமிழ்நாட்டின்
முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற 'தமிழ்நாடு' பெயர்மாற்ற நிகழ்வை ஆய்வு செய்து,
முடிவுகளைத் தொகுத்து வழங்குகின்றது.