தமிழில்
Volume 03, Issue 02 | April 2023 - June 2023
மதுரை
Neru, V. 2023. “Uyar Kalviyum Dravida Iyakkamum”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 3 (2): 77-91.
தமிழ்நாட்டில் இன்று பட்டதாரிகள் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவிற்கு உயர்கல்வி விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இது மிக எளிதாகக் கிடைத்து விடவில்லை. இன்னும் இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களில் உயர்கல்வி எட்டாக்கனியாகவே இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படிச் சாத்தியமாயிற்று? என்ற கேள்விக்கு விடை தேடி, அதற்கான மூல முழுமுதற் காரணம்: திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் யாவருக்காகவும் போராடிப் பரவலாக்கிய கல்விக் கொள்கையே என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது.
இந்திய நாடு விடுதலை பெற்ற பின், இராஜாஜி அவர்களின் காலம் வரை, தமிழ்நாடும் பிற மாநிலங்களைப் போலவே கல்வியில் பின் தங்கிய நிலையில் தான் இருந்ததெனினும், பெரியாரும் காமராசரும் கல்விக் கண்ணை எங்ஙனம் எளியோருக்கும் திறந்து விட்டனர் என்பதை ஆய்ந்து, அவர்களுக்கு முன்னமேயே நீதிக் கட்சியின் ஆட்சியில் கல்விக்கான வித்து இடப்பட்டதை நினைவு கூர்ந்து, திராவிட இயக்க அரசுகள் அமைந்த பின், காமராசர் பரவலாக்கிய துவக்கக் கல்வியையும் கடந்து, உயர் கல்வியை எவ்வாறெல்லாம் திராவிட இயக்கம் வெகு மக்களிடையே பரவலாக்கி, இன்றைய சமூக-பொருளாதார ஏற்றநிலைக்கு வழிகோலியது என்பதை இக் கட்டுரை விளக்குகின்றது.
அது மட்டுமன்றித் துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை, அடித்தட்டு மக்களையும் குறிப்பாகப் பெண்களையும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பல்வேறு கல்வி மானியங்களையும், சத்துணவு போன்ற திட்டங்களையும் பரவலாக்கியது திராவிட இயக்கமே. இந்த உணவூக்கத்தைப் பின்லாந்து போன்ற அயல்நாடுகளிலும் கடைப்பிடிப்பதை எடுத்துக் காட்டுகிறது இக்கட்டுரை. ஆனால், எல்லாருக்குமான கல்வியை ஒருசாராருக்கு மட்டுமே பழையபடி வகுத்தளிக்க வேண்டி, ஆதிக்கச் சக்திகள், கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து தங்கள் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டு, எவ்வாறெல்லாம் கல்வி பரவலாவதைத் தடுத்துக் தீங்கிழைக்கிறார்கள் என்றும் எடுத்துக் காட்டி வருங்காலச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டுகிறது.
முனைவர். வா. நேரு
முனைவர். நேரு, தமிழகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ஆவார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில், ‘இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். பெரியார் பட்டயச் சான்றிதழும் பெற்றவர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சாப்டூரில் பிறந்தவர். இவர், 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', 'சூரியக்கீற்றுகள்', ‘சொற்களின் கூடுகளுக்குள்’ எனும் கவிதைத் தொகுப்புகளும், 'நெருப்பினுள் துஞ்சல்' எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சங்கப்பலகை’ எனும் நூல் மதிப்புரைகளின் தொகுப்புநூலும் வெளிவந்துள்ளது.
இவரின் ஆய்வேடு, நூலாக்கம் செய்யப்பட்டு, 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்' என்னும் நூலாகச் சில நாட்களுக்கு முன் அச்சாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
‘திருக்குறள் வலியுறுத்தும் உயிர்ச்சூழலும் இன்றைய உலகச்சூழலும்', 'கடவுளையும் சடங்குகளையும் வள்ளுவம் புறக்கணிக்கிறது', 'தமிழ்த் துறவிகளும் வள்ளுவர் கூறும் தவமும்', 'ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை-திருக்குறளின் பாயிரம்', 'செல்வமும் குடிமையும்', 'ஊழும் கூழும் – பகுத்தறிவுப் பார்வை' போன்ற தலைப்புகளில் இவரின் கட்டுரைகள் திருக்குறள் ஆய்வுத் தொகுப்புகளில் வெளிவந்துள்ளன. உலக/இந்திய மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் அளித்தவர். பல்வேறு இலக்கிய இதழ்களிலும், சமூக இதழ்களிலும், இணையத்திலும் பரவலாக எழுதி வருபவர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch