தமிழ்நாட்டில் இன்று பட்டதாரிகள் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவிற்கு உயர்கல்வி விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இது மிக எளிதாகக் கிடைத்து விடவில்லை. இன்னும் இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களில் உயர்கல்வி எட்டாக்கனியாகவே இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படிச் சாத்தியமாயிற்று? என்ற கேள்விக்கு விடை தேடி, அதற்கான மூல முழுமுதற் காரணம்: திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் யாவருக்காகவும் போராடிப் பரவலாக்கிய கல்விக் கொள்கையே என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது.
இந்திய நாடு விடுதலை பெற்ற பின், இராஜாஜி அவர்களின் காலம் வரை, தமிழ்நாடும் பிற மாநிலங்களைப் போலவே கல்வியில் பின் தங்கிய நிலையில் தான் இருந்ததெனினும், பெரியாரும் காமராசரும் கல்விக் கண்ணை எங்ஙனம் எளியோருக்கும் திறந்து விட்டனர் என்பதை ஆய்ந்து, அவர்களுக்கு முன்னமேயே நீதிக் கட்சியின் ஆட்சியில் கல்விக்கான வித்து இடப்பட்டதை நினைவு கூர்ந்து, திராவிட இயக்க அரசுகள் அமைந்த பின், காமராசர் பரவலாக்கிய துவக்கக் கல்வியையும் கடந்து, உயர் கல்வியை எவ்வாறெல்லாம் திராவிட இயக்கம் வெகு மக்களிடையே பரவலாக்கி, இன்றைய சமூக-பொருளாதார ஏற்றநிலைக்கு வழிகோலியது என்பதை இக் கட்டுரை விளக்குகின்றது.
அது மட்டுமன்றித் துவக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை, அடித்தட்டு மக்களையும் குறிப்பாகப் பெண்களையும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பல்வேறு கல்வி மானியங்களையும், சத்துணவு போன்ற திட்டங்களையும் பரவலாக்கியது திராவிட இயக்கமே. இந்த உணவூக்கத்தைப் பின்லாந்து போன்ற அயல்நாடுகளிலும் கடைப்பிடிப்பதை எடுத்துக் காட்டுகிறது இக்கட்டுரை. ஆனால், எல்லாருக்குமான கல்வியை ஒருசாராருக்கு மட்டுமே பழையபடி வகுத்தளிக்க வேண்டி, ஆதிக்கச் சக்திகள், கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து தங்கள் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டு, எவ்வாறெல்லாம் கல்வி பரவலாவதைத் தடுத்துக் தீங்கிழைக்கிறார்கள் என்றும் எடுத்துக் காட்டி வருங்காலச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டுகிறது.