போருக்குப் பிந்தைய இலங்கையின் பிரதான முரண்பாடாக, இனப் பிரச்சனை தொடர்ந்து முக்கியம் பெறுகின்ற போதும், கடந்த பத்தாண்டுகளில் சமூகங்களுக்கு உள்ளேயான அகமுரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. போர், திரை போட்டு மறைத்து வைத்திருந்த சமூகங்களின் உள்ளடக்குமுறைகள், தம்மைப் பல்வேறு வழிகளில் வெளிக்காட்டுகின்றன. பின்காலனிய இலங்கையின் எழுபது ஆண்டுகால வரலாற்றில், சமூக நீதிக் கோரிக்கைகள் எழுந்தாலும், அவை சமூக அரசியல் மைய நீரோட்டத்தின் பிரதான பேசுபொருளாக இருந்ததில்லை.
இலங்கையின் தெற்கே, சிங்களச் சமூகத்தில் எழுச்சியடைந்த இரண்டு இளைஞர் கிளர்ச்சிகளும், வடக்கே தமிழர்கள் மத்தியில் எழுந்த இளைஞர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமும், சமூகநீதியை அதன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த போதும், இறுதியில் அது சமூகநீதியைச் சாத்தியமாக்கவில்லை. சிங்களச் சமூகத்தில் இவ்விரு கிளர்ச்சிகளின் எதிர்வினையான சில சலுகைகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதும், அவை சமூகநீதி நோக்கில் அமைந்திருக்கவில்லை. அதே போலவே, வடக்கே தமிழ் இளைஞர்களின் போராட்ட உணர்வு, இயக்கங்களாக உருவெடுத்திருந்த நிலையில், ஒவ்வொன்றும் சமூகநீதியை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தன. ஆனால் இறுதியில், விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகி, பின்னர் போராகி, அவல முடிவை எட்டிய நிலையில், சமூகநீதி பேசாப்பொருளாகவே இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், சமூகநீதிக்கான குரல்கள் தொடர்ச்சியாக இலங்கையில் ஒலித்து வந்திருக்கின்றன. 1960களில் சாதியத்திற்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் அனைவருக்கும் உறுதிப்படுத்தக் கோரி நின்றது. ஆனால் தீவிரமடைந்த இனமுரண்பாடு, சமூகநீதியை இனவாதம் பின் தள்ளும் நிலைக்கு இட்டுச்சென்றது. இது எவ்வாறு சாத்தியமானது? ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சமூகம், புற ஒடுக்குமுறைகளைப் பற்றிக் கவனங்கொண்டளவு, அக ஒடுக்குமுறைகளைக் கவனம் கொள்ளத் தவறியது ஏன்? இலங்கையில் போர் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னெப்போதுமில்லாத அளவு சமூகநீதிச் சவால்கள் ஏன் அதிகரித்துள்ளன? இவையனைத்தும் பதில்களை வேண்டி நிற்கும் வினாக்கள். இக்கட்டுரையானது இலங்கையில் சமூகநீதியை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவான அறிமுகத்தையும், ஆய்வுக்கான அடிப்படைச் சட்டகத்தையும் முன்மொழிகிறது.