English

View in English

முந்தைய இதழ்கள்

தொகுதி 1, வெளியீடு 3 | சூலை 2021 - செப்டம்பர் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகத்தைச் சமூகநீதி மயமாக்கல்; சமூகநீதியை உலக மயமாக்கல் - திராவிடம் என்பதன் அடிநாதமே சமூகநீதி அல்லவா! அந்தத் திராவிடம் மிகுந்த தமிழ் அன்பர்களாகிய உங்கள் யாவருக்கும் மகிழ் திகழ் வணக்கம்!

பெரியாரின் பெருநண்பர், பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளிலே (July 15), ’திராவிடப் பொழில்’ ஆய்விதழின் இந்த 3ஆம் இதழ், தமிழ்நாடு மட்டுமல்லாது ஈழத்திலும் சமூகநீதி வித்துக்களோடு, மாந்தவியல் வேளாண்மையை முன்னெடுத்து, பாங்குற வெளிவருகின்றது.

சென்ற இரு இதழ்களுக்கும், உலகம் முழுதுமிருந்து, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டிப் பல பின்னூட்டங்கள் வந்துள்ளன; இப்படி, உலக அறிஞர் பெருமக்களின் வாசிப்பும் திறனாய்வும் ஒருசேர வாய்க்கப் பெற்று, ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது கண்டு நனி மிகு மகிழ்ச்சி.

 • ஆய்வுலகில் திராவிட ஆய்வுப் புலமையை வளர்த்தெடுத்து, உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), கல்வியாளர்கள் பலரையும், திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டலே நம் குறிக்கோள்
 • திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், திராவிட ஆய்வியல் அறிஞர்களுக்கும் இணைப்புப் பாலம் உருவாக்கி, சமூகநீதிப் பொருண்மைப் பயன் நல்கலே நம் இலக்கு.

அந்தச் சீரிய பணியில், உலகப் பல்கலைக்கழகங்களோடும், வையத்து வல்லுநர்களோடும், திராவிட ஆய்வாளர்களோடும் (குறிப்பாக: பெண் ஆய்வாளர்களோடும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களோடும்) கல்விமுறை நல்லுறவு பேணி, சிறப்பானதொரு ஆய்வுச் சூழலைத் ’திராவிடப் பொழில்’ ஊக்குவிக்கும்.

தொடர்ச்சியான முன்னேற்றம்’ நோக்கிய இப் பயணத்தில், இந்த 3ஆம் இதழ், 6 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது. தமிழ்நாட்டிலிருந்தும், ஈழம் குறித்தும், நோர்வே நாட்டிலிருந்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

 • பெரியார் காட்சிக் கொள்கை: திராவிடச் சினிமாவின் தேவையும் முரணும் இயல்பியலும் (ஆங்கிலத்தில்)
 • இலங்கையில் சமூகநீதி: சில அறிமுகக் குறிப்புகள்
 • உலகாயதமும் பெரியாரியமும்
 • கேரளத்தின் பழம் பதிவுகளில் தமிழ்
 • கிறித்துவத்தைத் தின்று செரிக்கும் சாதியம்
 • திராவிட நாகரிகத்தின் தொன்மையும் முன்மையும்

அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்டு வெளிவரும் மேற்கண்ட கட்டுரைகளை வாசித்து, செவிச்செல்வமும் விழிச்செல்வமும், உளச்செல்வமும், அறிசெல்வமும் மேலோங்கி இன்புறுக! மேலதிக வினாக்கள் ஏதுமிருப்பின், எம்மையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகவே நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஆய்விதழின் முகப்பை, கீழடி பற்றியம் சார்ந்த படமொன்று அணி செய்கின்றது. திராவிடப் பொழிலின் முதலாம் இதழ், அரப்பா அட்டைப் படத்தோடு துவங்கிற்று. இந்த இதழ், கீழடி அட்டைப் படத்தோடு உலா வருகின்றது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையும் முன்மையும் கூட, மதம் அற்று, மானுடமே பற்றியமாய்க் கொண்டுள்ளதை, தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்கிறார்கள். சிந்துச் சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும், ஒன்றே அல்லவா!

திராவிடப் பொழில் ஆய்விதழை நீங்கள் வாசிப்பதோடு நின்றுவிடாது, இன்னும் பலரோடும் கூடிக் கலந்துரை செய்வதே, அறிவு பெருக்கும் பெருவழி. அந்த ஆய்வினால் பெற்ற அறிவை, விரிவு செய்வதே, மானுட வளர்ச்சியின் வழி.

வாருங்கள், சமூகநீதி என்னும் தமிழ் மண்ணிலே, திராவிட ஆய்வுப் பயிர், விளைப்போம்! விளைவிப்போம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 2 | ஏப்ரல் 2021 - சூன் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகெலாம் பரவி வாழும் திராவிடத் தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளிலே (ஏப்ரல் 14), நம்முடைய ’திராவிடப் பொழில்’ ஆய்விதழின் இந்த இரண்டாம் இதழ், சமூகநீதி வித்துக்களைத் தாங்கிப் பாங்குற வெளிவருகின்றது. சென்ற முதலாம் இதழ், பார் முழுதும் பரவி, உலக அறிஞர் பெருமக்களின் திறனாய்வுப் பின்னூட்டங்களையும் வாழ்த்துக்களையும் ஒருசேரப் பெற்றதில், நம் யாவருக்கும் மகிழ்ச்சி.

’தொடர்ச்சியான முன்னேற்றம்’ (Continuous Improvement) என்கிற மாந்தவியல் கோட்பாட்டின் வண்ணம், முன்னிலும் சிறந்து கொண்டே செல்லும் இக் கல்விப் பயணத்தில், அடுத்த இதழும் நுட்பமான பல ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது.

திராவிட ஆய்வுப் புலமையினை, ஆய்வுலகுக்குப் பறை சாற்றும் வகையில், உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), பல கல்வியாளர்களைத் திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டி, இந்த ஆய்விதழின் வாயிலாகத் திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், அறிஞர்களுக்கும் பயன்மிகு பொருண்மையை வழங்கலே நம் குறிக்கோள்.

அந்தப் பணியில், உலகெங்கும் உள்ள துறைசார் வல்லுநர்களோடு, திராவிடம் சார்ந்த வல்லுநர்களையும், பெண் ஆய்வாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களையும், ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ் ஊக்குவிக்கும் என்று முன்பே சொல்லியிருந்தோம். சொன்ன வண்ணம் செய்யும் நன்னயத்தின் படி, இவ்விதழில் இரண்டு பெண் ஆய்வாளர்கள், தம் ஆய்வுப் படைப்பினை வழங்குகின்றார்கள். ஆய்வுலகிலும் பெண்மையின் வெற்றி பொலிக!

இந்த இரண்டாம் இதழில், 6 ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்நாட்டிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இடம் பெற்றுள்ளன.

 • மத நூல்களின் மேலாதிக்கமும், தமிழில் அருச்சனை எனும் சடங்கியல் வளர்வாக்கமும்
 • திராவிட இயக்கமும் திருக்குறள் எழுச்சியும்
 • தமிழ் அகப்பொருளும் புறப்பொருளும் - பிறப்பகம் தமிழகமா? அயலகமா?
 • தந்தை பெரியாரின் அணுகுமுறை
 • முதல் பெண் இதழியல் ஆளுமைகள்
 • ஜாதியும் சமதர்மமும்

துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்டு வெளிவரும் இக்கட்டுரைகளை வாசித்து மகிழ்க. மேலதிக வினாக்கள் இருப்பின், தயக்கமேதுமின்றி எம்மையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்க.

சென்ற இதழ்க் கட்டுரைகளின் மீதான ஓர் ஆய்வரங்கம், அமெரிக்காவில் பிப்ரவரித் திங்களில் நடைபெற்றது. இணைய வழியே தமிழ்நாட்டிலிருந்தும் ஆய்வாளர்கள் பலர் அதில் கலந்து கொண்டார்கள். அந் நிகழ்வுக் குறிப்பும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இது போல் ஆய்வரங்குகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆய்விதழை வாசிப்பதோடு நின்றுவிடாது, கூடிக் கலந்துரை செய்வதே, அறிவு பெருக்கும் பெருவழி. அறிவை விரிவு செய்வதே மானுட வளர்ச்சிவழி.

இவை துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் பொருண்மை. வாசித்துப் பயனுறுக. மேலதிக வினாக்கள் இருப்பின், இதழாசிரியரையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் போன்ற நன்னயங்களில், திராவிடம் சார்ந்த கல்விப்புல ஆராய்ச்சியே நம் இலக்கு! அதில் காய்தல் உவத்தல் இலாத ஆய்வுச் சீர்மையோடு, தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்துள்ள பல பற்றியங்களில், ஆழ உழுகின்றோம்; விதைக்கின்றோம்; விளைக்கின்றோம்; திராவிட ஆய்வுப் பயிர் செழித்து விளையட்டும்!

திராவிட ஆய்வுகள் பழகுவோம். இக் கல்விப் பயணத்தில் யாவரும் இணைந்திருங்கள்.

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 1 | சனவரி 2021 - மார்ச் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகெங்கும் உள்ள திராவிடத் தமிழார்வலர்களுக்கும், அறிவுச் சான்றோர்கட்கும் முதல் வணக்கம்!

”பொழில் வதி வேனில், பேர் எழில் வாழ்க்கை” என்று சங்கத்தமிழ் நவிலும் அழகுமிகு வாழ்க்கை போலவே, ’திராவிடப் பொழில்’ ஆய்விதழும் தன் பயணத்தைத் துவங்குகிறது. இது ஒரு கல்விப் பயணம். மக்களை நோக்கிய கல்விப் பயணம். மக்களையும் அறிஞர்களையும் ஒருங்கிணைக்கும் கல்விப் பயணம். கல்விக் கதவுகளை அனைத்து மக்களுக்கும் திறந்துவிட்ட திராவிட இயக்கச் சமுகநீதியின் கல்விப் பயணம்.

பொழில் என்ற சொல்லுக்கு, வெறும் சோலை, பூங்கா என்று மட்டுமே பொருள் அல்ல; பொழிந்து உள்ள சோலையே, பொழில்! நீர் பொழிந்து, நீர் இடையறாது, தன்னகத்தே ததும்பும் சோலையே பொழில். போலவே, திராவிடம் பொழிந்து, திராவிடம் இடையறாது ததும்பும் சோலையே, ’திராவிடப் பொழில்’.

பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் போன்ற நன்னயங்களில், திராவிடம் சார்ந்து, ஆழமான கல்விப் புல ஆராய்ச்சியை, அனைவருக்கும் கொணர்வதே இந்த ஆய்விதழின் நோக்கம்.

 • திராவிட நாகரிகம்/ திராவிடப் பண்பாடு/ திராவிடச் சமூகநீதி/ திராவிடமும் தமிழும் சார்ந்த அறிவுப்புலத் துறைகளில், நயன்மிகு ஆராய்ச்சி செய்தல்.
 • இந்த ஆராய்ச்சியின் வாயிலாகத் திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், அறிஞர்களுக்கும் பயன்மிகு பொருண்மை வழங்கல்.
 • உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), உலகக் கல்வியாளர்களைத் திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டல்.
 • திராவிட இயக்கத்தின் ஆய்வுப் புலமை மற்றும் அறிவுப் புலமையை உலகறியச் செய்து, திராவிடக் கருத்தியலுக்கான தரவுத் தொகுப்பாக விளங்குதல்.

மேற்சொன்ன முன்னெடுப்புகளில், உலகெங்கும் உள்ள துறைசார் பெருவல்லுநர்களோடு, திராவிடம் சார்ந்த இளநிலை ஆய்வாளர்களையும், இளநிலைப் பெண் ஆய்வாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களையும், ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ் ஊக்குவிக்கும். காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாகத் ‘திராவிடப் பொழில்’ வெளிவரும்.

இந்த முதலாம் இதழில், 6 சீரிய ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்நாடு மட்டுமல்லாது, கனடா, ஐரோப்பாவிலிருந்தும் இடம் பெற்றுள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழ்நாடு உலகுக்கே அளித்த கொடை. “பிறப்பொக்கும்” என்ற நெறிக்கு, உலகில் எங்கு அச்சுறுத்தல் நேர்ந்தாலும், அது நமக்குமான அச்சுறுத்தலே. (Injustice anywhere, is a threat to justice everywhere).

 • அமெரிக்கக் கறுப்பினச் சமூகநீதிப் போராட்டமும், திராவிட இயக்கமும் - ஓர் ஒப்பீடு
 • சங்கத் தமிழில் திராவிடக் கருத்தியல்
 • ஆங்கிலேயே/ஐரோப்பிய அறிஞர் சிலரின் சம்ஸ்கிருத நிலையும், இந்தியச் சமூக மெய்யான பண்பாடும்
 • தமிழ்நாடு என்ற பெயர் வரலாற்றில் பெரியாரின் பங்கு
 • 19-ஆம் நூற்றாண்டுச் சைவச் சபையில் திராவிட/ஆரிய எதிர்நிலைகள்
 • மரபணு அறிவியல் அறிதலின் மூலமாகச் சாதி ஒழிப்பு

இவை துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் பொருண்மை. வாசித்துப் பயனுறுக. மேலதிக வினாக்கள் இருப்பின், இதழாசிரியரையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

திராவிடத்துக்கான ஆய்விதழின் காலத் தேவையை அறிந்து, இதனை முன்னெடுத்துள்ள ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்குச் சமூகநீதி திகழ் நன்றி. இச்சமயத்தில், வரலாற்றிலே ஒளிரும் திராவிட அறிவுத் தகைமையாளர்கள் – அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி – உள்ளிட்ட ஆயிரம் ஆயிரம் விண்மீன்களை நினைவு கூர்ந்து வணங்கி, அவர்கட்கு நன்றி நவின்று, பயணம் தொடங்குகிறோம்.

இனி, காலாண்டு தோறும் சந்திப்போம். காலத்துக்குத் தேவையான திராவிடம் பழகுவோம். இக் கல்விப் பயணத்தில் இணைந்திருங்கள்; நனி நன்றி. வாசகர்களுக்குத் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல்/ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!