English

View in English

தொகுதி 2, வெளியீடு 4

அக்டோபர் 2022 - டிசம்பர் 2022

நல்வரவு!

திராவிட ஆய்வுகள் குறித்த இந்த இதழ், காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவரும்.

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


திராவிடப் பொழில் வாசகர்களுக்குச் சமூகநீதி நல்வணக்கம்!

செப் 24 & 25 திகதிகளில், கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில், ‘பன்னாட்டு மனிதநோக்கு & சமூகநீதி மாநாடு’ சிறப்புற நிகழ்ந்தேறியது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, கீழை நாடுகள், இந்தியா, இலங்கை என்று உலகெங்கிலிருந்தும் பல சமூகவியல் அறிஞர்களும், பேராசிரியர்களும், அரசாங்க அலுவலர்களும் கலந்து கொண்டு ஆய்வுத் தாள்களும் உரைகளும் வழங்கினர். இம்மாநாட்டைப் பெரியார் பன்னாட்டமைப்பு (PI) அமெரிக்காவுடன், கனேடிய வினவு மையம் (CFIC), கனடா மனிதநோக்கு (HC), மற்றும் ரொறன்ரோ மனிதநோக்குச் சங்கம் (HAT) ஆகிய 3 அயலக அமைப்புகளும் ஒருங்கிணைந்து நடத்தின. உலக மேடையிலிருந்து Dravidian Model குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது!

தமிழர்களுக்கு மட்டுமல்லாது, மேலை & கீழை நாட்டு மக்கள் யாவருக்கும், திராவிட மாதிரியின் சமூகநீதியை அறிமுகம் செய்வதும், அயலகங்களில் விளைந்துள்ள மனிதநோக்கினையும் சமூகநீதியினையும் தமிழ்வெளியில் ஒப்பிட்டுச் செம்மை செய்து கொள்வதுமே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

மனிதநோக்கும் சமூகநீதியும் என்பதே மாநாட்டின் மையப்பொருள். அந்தக் கருத்துக் கழனியில்..

 • மனிதநோக்கும் பெண்ணுரிமையும்
 • சிறார்களிடையே மனிதநோக்கு
 • அன்றாடப் பகுத்தறிவுச் சிந்தனைகள்
 • சோதிடப் புரட்டை ஒழித்தல்
 • ஒடுக்கப்பட்டோருக்கான மனிதநோக்கு விடைகள்
 • தமிழ் வரலாறும் சமூகநீதியும்
 • திராவிட மாதிரியின் சமூகநீதி
 • கல்வியில் மனிதநோக்கு
 • உடல்நலத்திலும் வளத்திலும் மனிதநோக்கு
 • குடிபெயர்ந்தோருக்கான சமூகநீதியும் மனிதநோக்கும்

என்று மேற்காணும் பத்து உட்பொருண்மைகளில், இப் பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மானமிகு ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களும், மாண்புமிகு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி அவர்களும், மேலைநாட்டு அறிஞர் பெருமக்களோடு, தங்களின் சீரிய உரைகளையும் ஒருங்கே வழங்கினார்கள். ஆசிரியரின் வாழ்நாள் மனிதநேய & மனிதவுரிமைப் பணிகளைப் பாராட்டிக் கனேடிய மனிதநேய அமைப்பு, “மனிதநேயர் சாதனையாளர்” என்ற விருதளித்துச் சிறப்பித்தது.

உரைகள் மிக்க பேச்சாக மட்டுமன்றிச் செயலிலும் சமூகநீதி செய்யும் முகத்தான், வளம்குன்றிய கனேடிய ஆதிகுடிக் குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலம் மடித்தலையும் மாநாட்டில் கலந்து கொண்டோர் செய்தார்கள். புத்தகக் கண்காட்சியும் நிகழ்வுற்றது. இம்மாநாட்டில், தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகக் குழுவும் கனடா வருகை தந்து பாங்குறக் கலந்து கொண்டது. ‘சாதி சூழ் உலகு’ என்ற தலைப்பில் இம்மாநாட்டுக்கென்றே வரையப்பட்ட பகடி நாடகமும் Nakkalites குழுவினரால் அரங்கேறியது. இம் மாநாடு, உலகளாவிய திராவிடத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

 • கனேடியப் பன்முகப் பண்பாட்டில் மனிதநேயமென்னும் ஆயுதம்
 • தமிழ்ச் சமூகத்தில் சமூகநீதியின் வரலாறு
 • வரலாற்றுச் சுவடுகளில் நாத்திகத்தின் அறிவுத் திறனோக்கிய வளர்ச்சி
 • கலைஞர் மு. கருணாநிதியின் மேற்கோளாட்சியில் பாரதிதாசன் கவிதைகள்
 • டாக்டர் அம்பேத்கரும் இந்து சட்டத் தொகுப்பு மசோதாவும்

இந்த ஆய்வுக் கட்டுரைகளை, நீங்களும் வாசித்து உங்கள் கல்விப்புல அன்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். நம் திராவிடக் கல்விப் பயணம், கடல்கடந்து, உலகெலாம் சென்று சிறக்கட்டும்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

இந்த இதழின் உள்ளே