அறிவுக்கரசு அவர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேல் அரசுப் பணியாற்றியவர். 1958-இல் எழுத்தராக நுழைந்து, மாவட்ட வருவாய் அலுவலராக உயர்ந்து, 1998-இல் ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் மாவட்டத்தலைவர், பொதுச்செயலாளர், மாநிலத்தலைவர் என 30 ஆண்டுகளாகச் சங்கப்பணி ஆற்றியவர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைச்செயலாளர், துணைத்தலைவர், மாநிலத்தலைவர் எனவும் கழகப்பணி ஆற்றியவர். தற்போது திராவிடர் கழகச் செயலவைத் தலைவராக விளங்குகின்றார். மேடைகளில் உரையாற்றி மக்களை ஈர்க்கும் நாவன்மை மிக்கவர்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், அய்க்கிய அரபு எமிரேட்சு, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, பின்லாந்து, நேபாளம், நியூசிலாந்து முதலிய நாடுகளில் பயணம் செய்தவர். இதுவரை 27-க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். பெரியார் பன்முகம், பெண், இந்து ஆத்மா நாம், தென்றல் அல்ல புயல், புராணங்கள் 18+1, முட்டையும் தட்டையும், அச்சம்=அறியாமை=கடவுள், உலகப்பகுத்தறிவாளர்கள், அம்பேத்கர் வாழ்வும் பாடமும், சார்லி சாப்ளின், திராவிடர் கழகம் கட்சியல்ல-ஒரு புரட்சி இயக்கம், இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு, அவர் தாம் புரட்சிக் கவிஞர் பார், இந்து மாயை, மானம் மானுடம் பெரியார் - போன்றவை இவர் எழுதிய புத்தகங்களுள் சில.