துயரங்களில் உழன்று கொண்டிருந்த உரோமாபுரி அடிமைகள், விடுதலைக் காற்றுக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த வேளையில், அவர்களை ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள, ஒரு இரட்சகனைப் போல் தோன்றிய மதம் கிறித்தவம். இந்து மதம் போலன்றிச் சமத்துவக் கோட்பாடுகளை இயேசு கிறித்துவின் நெறிகளாக, துவக்கத்தில் தாங்கி நின்ற அந்த மதம், உலகிலும் பின்னர் இந்திய மண்ணிலும் கால்பதித்த பின், அதன் மேலான நெறிகளை, இந்தியச் சாதியச் சமூகம் மெல்ல மெல்லத் தின்று செரித்த வரலாற்றைச் சுருக்கமாகப் பேசுகிறது இந்தக் கட்டுரை.
14ஆம் நூற்றாண்டில் கடற்கரைப் பகுதிகளில் கால் பதித்த கிறித்தவம், இருளில் கிடந்த விளிம்பு நிலை மக்கள் மீது கருணையோடு வெளிச்சம் பாய்ச்சியதால், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அலை அலையாக மதம் மாறினர். சாதியத்தால் கட்டுண்ட சமூகம், சமத்துவத்தின் சுவை அறியத் தொடங்கிற்று. இந்தியாவில் கிறித்தவம் வேரூன்றி வளர, ஒடுக்கப்பட்டோரே காரணமாக இருந்தனர்.
கல்வியில் துவங்கி, காலப்போக்கில் ஆட்சி, அதிகாரம், பதவி ஆகியவற்றில் கிறித்தவம் செல்வாக்கு செலுத்தியதை அவதானித்த சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்கள், அவைகளைச் சுவைக்கவென்றே, சாதியையும் சுமந்து கொண்டு கிறித்தவத்துக்குள் நுழைந்தனர். வர்ணாசிரம (அ)தர்மம் தலை நீட்டத் தொடங்கியது. கிறித்தவச் சமயக் குரவர்களோ, மதம் வளர்ந்தால் போதும், வர்ணம்/தீண்டாமை பற்றிக் கவலைக் கொள்ள ஏதுமில்லை என்கிற நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினர். எனவே இந்து மதத்தின் சாதிப் படிநிலைகளை, எந்தக் கட்டுப்பாடுமின்றி உயர் சாதியினர் அப்படியே பதியம் போட்டு வளர்த்தனர். சாதியைப் பற்றி எதுவுமே அறியாத, சமத்துவத்தை உயர்த்திப் பிடித்த, கிறித்தவ மதத்துக்குள், ஆழமாக வேரூன்றிய சாதியத்தால் வந்த விளைவுகளை, ஏராளமான சான்றுகளோடும், ஒரு சமூகப் பார்வையோடும், வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களின் துணைகொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.