பேரா. முனைவர். தொ. பரமசிவன் - வாழ்வுரை வண்ணகம்
ஜனவரி 02, 2021
திராவிடப் பொழில் ஆய்விதழ், அண்மையில் (Dec 24, 2020) இயற்கை எய்திய மாண்பமை திராவிடக் கல்வி ஆராய்ச்சியாளரும் பெருந்தமிழறிஞருமான பேரா. முனைவர். தொ. பரமசிவன் அவர்களின் குன்றா நினைவுக்கு இரங்கல் வணக்கம் செலுத்துகின்றது.
தொ.ப. என்று அன்புடன் விளிக்கப்படும் பேரா. தொ. பரமசிவன், திராவிடவியல், தமிழியல், மாந்தவியல் மற்றும் வரலாற்று அறிஞர் ஆவார். காய்தலுவத்தல் இல்லாச் செப்பம் மிகு நடுவுநிலைமையுடன் இயங்கிய இலக்கியத் திறனாய்வு வல்லுநர். பல தரவுகளை உள்ளடக்கிய தமிழ்/திராவிடப் பண்பாட்டியல் மற்றும் சமூக மாந்தவியலில், அவர் செய்த ஆராய்ச்சிகள் பலராலும் விழைந்து போற்றப்படுகின்றன.
பகுத்தறிவு மற்றும் பக்தி இலக்கியம், இரண்டிலும் வல்லவரான பெரியாரியலாளரான பேரா. தொ.ப., ”கல்விப்புல ஆராய்ச்சிகள், சமூகப் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும்” என்ற கருத்துடையவர். மேலிருந்து கீழாகச் செய்யாமல், கீழிருந்து மேலாகச் செய்யப்படும் ஆய்வுகளை விழைந்தவர். “வரலாற்று வாசிப்பு என்பது மானுட வாசிப்பே; சமூகமும் மக்களுமே மொழியியலை இயக்கும் அச்சாணி” என்று பலமுறை பகன்றவர். அவரின் முனைவர் பட்ட ஆய்வேடான அழகர் கோயில், ஆய்வுத்துறையின் முகப்புக் கல்லாகக் கருதப்படுகிறது. அய்யாவின் மறைவு, கல்விப்புலத்துக்கு ஈடு செய்யவியலாத பேரிழப்பாகும்.
அன்பு கெழுமிய பேராசிரியர் தொ. ப. அவர்கட்கு, நம் நினைவு வணக்கம்!