விசயாலய சோழன், ஆதித்த சோழன் தொடக்கமான பிற்காலச் சோழர்களின் ஆட்சியில், ஏற்கனவே தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த பிராமணர்கள் போக, அயல்நாட்டுப் பிராமணர்களை ஆயிரக்கணக்கில் இறக்குமதி செய்து, கோயில்களிலும், மடங்களிலும், கல்விநிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தப்பட்டனர். சோழ மன்னர்கள், புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொருளையும், குடியுரிமைகளையும் வாரி வழங்கினர்.
கோயில்கள் இருந்த அனைத்து இடங்களிலும், மடங்களிலும் ‘பிராமண போஜனம்’ எனப்படும் பார்ப்பனர்களுக்கு அன்றாடம் உணவளிக்கும் திட்டங்களும் ‘புண்ணிய காரியம்’ என்று சொல்லப்பட்டதால் அரசர்களும், அவர்கள் குடும்பத்தாரும் தலைமேற்கொண்டு நிறைவேற்றினர்.
யாகங்களை அரசர்கள் செய்யவேண்டும், அப்படிச் செய்யாது விடின் நாட்டுக்கும், அரசனுக்கும் கேடு விளையும் என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டது. அவ்வாறு செய்யும் போது 16 விதமான (சோடச) மகா தானங்களைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவற்றுள் துலாபுருஷ தானம் (எடைக்கு எடை தங்கம் அளித்தல்), ஹிரண்ய கர்ப்பம் (பெரும் தங்கக் கலத்துள் இறங்கி வெளிவந்து அக்கலத்தையே தானம் அளித்தல்) என்னும் இரண்டு தானங்களும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.
பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப்பல பெயர்களில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணர்களின் நிருவாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழுவிலக்கு அளிக்கப்பட்டுக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டன.
வேளாண் மக்களிடமிருந்து விளைநிலங்களைப் பறித்து, பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள் என்பதும், விவசாயம் சாஸ்திர விரோதமாக இருந்தும் விளைநிலங்களைக் கூச்சமில்லாமல் பார்ப்பனர்கள் தானமாகப் பெற்றுக் கொண்டதோடு, உயர்சாதி எதேச்சாதிகாரத்தோடு தாங்கள் உழாமல், வேளாண் மக்களையே கூலிகளாக்கிக் கொண்டு உழவைத்து விவசாயம் நடத்தினார்கள் என்பதும் கல்வெட்டுகளின் வழியாகவும், செப்பேடுகள் வழியாகவும் அறியப்படுகிறது.
அந்தந்த மன்னர்கள், அவரவர்களின் ஆட்சியாண்டில் வெட்டி வெளியிட்ட செப்பேடுகள் பலவற்றிலும், முதல் பகுதியாக வடமொழியில் எழுதப்பட்ட விவரங்களே தொடங்கி அதன் பின்னரே, தமிழில் எழுதப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அவற்றுள், வேலஞ்சேரிச் செப்பேடு, அன்பில் செப்பேடு, எசாலம் செப்பேடு, சாராலச் செப்பேடு, திருஇந்தளூர்ச் செப்பேடு முதலான எட்டு செப்பேடுகளையும், அவற்றுள் பார்ப்பனர்களுக்கு வெகுவாக அளிக்கப்பட்ட தானங்களைப் பற்றிய குறிப்புகளையும் இக்கட்டுரை விரிவாக ஆய்கின்றது.