தென்னவன் வெற்றிச்செல்வன் கவிதை, சிறுகதை, கட்டுரை, என 25 நூல்களின்
நூலாசிரியர்; இரு குறும்பட, ஆவணப்பட இயக்குநர்; கற்கை மற்றும் ஆய்வு
நெறியாளர்; பாடத்திட்ட வல்லுநர்; பொழிவாளர் எனப் பன்முகத் தளத்தில் கால்
நூற்றாண்டாகப் பணியாற்றி வருபவர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, டென்மார்க், நார்வே,
நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளின் புகலிடத் தமிழ்க்
கவிதைகள் குறித்து, தமிழில் 2004-ல், தமிழ்ப் பல்கலைக் கழக அயலகத் தமிழியல்
துறையில் முதன்மையான ஆய்வை நிகழ்த்தி, அத்துறையில் பேராசிரியராகப்
பணியாற்றி வருபவர்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பர்மா போன்ற நாடுகளில் களப்பயணம்
மேற்கொண்டும், கருத்தரங்குகள் / ஆய்வரங்குகளில் ஆய்வுரையாற்றியும், அயலகத்
தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்நிலைத் தமிழ்ப் பயிற்றியும்
பன்னாட்டளவிலான தமிழ்வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவருபவர். சிறந்த
நூலாசிரியர் விருது, சிறந்த ஆவணப்பட இயக்குநர் விருது, ஆசிரியச் செம்மல்
விருது போன்ற விருதுகள் இவரது பணிகளுக்கு ஏற்பிசைவு அளித்துள்ளன.