பேரா. கே. கே. பிள்ளை
தமிழ்நாட்டின் வரலாறு என்பது வெறுமனே மன்னர்களின் வாழ்வும் வரலாறும் மட்டுமல்ல; தமிழ் மக்களின் சமூகநிலையும் சமூகவாழ்வும் உள்ளடக்கியதே ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் வரலாறு. ”நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர் (மக்கள்), அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று பேசும் புறநானூறு. ஆதலின், ஒரு நாட்டின் வரலாறு என்பது, அந் நாட்டு மக்களின் வழிவழி வந்த சமூக வரலாறு என்பதே.
தமிழ்நாட்டின் நெடிய வரலாற்றில், சங்ககால வரலாறு கடந்து, இடைக்கால வரலாறும் கடந்து, 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தின் சமூகநீட்சி தான், இன்றளவும் தமிழ்ச் சமூகத்தின் அடிநாதமாய்க் கோலோச்சிக் கொண்டுள்ளது. அச் சமூகநீட்சிகளுள், சாதி என்னும் சமூகநோய் இந்தக் காலத்திலும் முற்றிலும் மறையாது, ஆங்காங்கே ஆட்டுவித்துக் கொண்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரையுள்ள தமிழ்நாட்டின் காலம் மிகவும் குழப்பமானதொரு காலமாகும். ஆரிய மதம் வகுத்த பிராமணர்கள் முதலான பல சாதிப் படிநிலைகளோடு, பிற மதங்களும் தமிழ்நாட்டில் காலூன்றியதால் விளைந்த சமூக மாற்றங்கள் பலவும் ஆய்வுக்குரியவை.
அதிலும் குறிப்பாக, இடங்கை x வலங்கைச் சாதிப் பூசல்களால், தமிழ்நாட்டு மக்களின் சமூகவாழ்நிலை என்பது பெரிதும் மாறிப் போனது. அதுவே, இலக்கியம், இசை, கலை, கல்வி, வணிகம், சமயம், அரசியல், அதிகாரம் என்று சமூகத்தின் பண்பாடு மற்றும் நாகரிகத் தளங்கள் யாவற்றிலும் எதிரொலித்தது. அதன் பலதரப்பட்ட புள்ளிகளை, இக் கட்டுரை நுட்பமாக ஆய்ந்து நோக்குகிறது.