பேரா. வீ. அரசு
பேரா. வீ. அரசு, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் 29 ஆண்டுகள் பேராசிரியராக நெடும்பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பணிக்காலத்தில், தமிழ்த் துறையின் தலைவராக 16 ஆண்டுகள் வீற்றிருந்துள்ளார். பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் கல்விப்புலக் குழுவில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் பற்பல பல்கலைக்கழகங்களில், கல்விக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்துள்ளார். தனது வாழ்நாள் முழுதும் ஒரு சீரிய கல்வியாளராகவே விளங்கியுள்ளார்.
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா பல்கலைக்கழகங்களில், பாடத்திட்ட மறுசீரமைப்புக் குழுக்களுக்குத் தலைமையேற்றுள்ளார். மலேசியாவில் வருகைதரும் பேராசிரியராகவும் பங்குபற்றியுள்ளார். தமிழ்நாடு மற்றும் இலங்கையின் பல்வேறு பல்கலைகளில் அறக்கட்டளைப் பேருரைகள் ஆற்றியுள்ளார்.
பேரா. அரசு அவர்களின் வழிகாட்டுதலில், 49 ஆய்வு மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்கள். தமிழ்ச் சமூகம் & பண்பாடு சார்ந்து, 4 ஆய்வுத் தொகுதிகள் மற்றும் 30 தனிக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார். வ.உ.சி, ஜீவா, புதுமைப்பித்தன், மயிலை சீனி வேங்கடசாமி, அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் போன்ற பல்சான்றோர் குறித்தும் அவர்களின் பொருண்மை குறித்தும், சென்னை லெளகீக சங்கம் குறித்தும் 70 தொகுதிகளுக்கு மேல் தொகுப்பாசிரியராக விளங்கி இயற்றியுள்ளார்.
சாகித்ய அகாதமி, தேசியப் புத்தக நிறுவனம், தேசியச் சுவடிகள் ஆணையம் முதலான பல உள்ளக & அயலக நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவிலும் பேரா. அரசு இடம்பெற்றுள்ளார். அவரது உரைகள் 70க்கும் மேலாக இணையத்தில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, செக் குடியரசு, பிரான்சு (பாரீசு), ஆங்கிலேயே ஒன்றியம் (இலண்டன்), கனடா முதலான பல நாடுகளில் பயணித்துள்ளார்.
அரசு அய்யாவின் முதன்மை ஆய்வுக்களம்: தமிழர்களின் சமூக வரலாறு பற்றியது. தமிழ்மொழியின் செவ்விலக்கியம் மற்றும் புத்திலக்கியம் மீதான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் சமூகச் சூழ்நிலை குறித்தும், குறிப்பாக அக்காலத்தின் அச்சுப் பணிச்சூழல் குறித்தும் தனிக் கவனம் கொண்டுள்ளார்.
பேரா. அரசு அவர்களின் மாணவர்கள் பலர், அவர் வகுத்தளித்த ஆய்வுமரபில் இன்று நடைபயில்கிறார்கள். துடிப்புமிக்க மாணவ ஆய்வாளர் தலைமுறையைப் பேணி வளர்த்தமையே தனது மகிழ்வான நிறைவான பணிப்பெருமிதமாகக் கருதுகிறார்.