English

View in English

செய்தி மற்றும் அறிவிப்புகள்

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்


அக்டோபர் - டிசம்பர் 2022

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் இதழ்(அக்டோபர்- டிசம்பர் 2022) ஆய்வுக் கூட்டம் இணைய வழியாக சனவரி 21,2023 அமெரிக்க கிழக்கு நேரம் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.திராவிடப்பொழில் இதழ் ஆசிரியரும்,பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் தலைவருமான மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றும், நிகழ்வு குறித்தும் தொடக்க உரை ஆற்றினார். அவர் தமது உரையில்

"திராவிடப் பொழில் இதழ், தனிநாயக அடிகளார் தமிழரின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பித்த அந்தப் பத்திரிக்கையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.நமது பெருமையை நாம் சொல்வதை விட மற்றவர்கள் அறிந்து சொல்வதுதான் நமக்கு உண்மையான பெருமையாக இருக்கும்.அந்த அளவிலே நாம் முடிந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்த இதழை ஆராய்ச்சி இதழாக நடத்தி ஆதாரபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு மக்களுக்கு தெரிவிப்போம் என்ற அளவிலே இதைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையிலும் புதிதாக ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பேரா.அய்யா நாகநாதன் அவர்களோடும் மற்ற ஆசிரியர் குழுவினருடன் சேர்ந்து நடத்துகின்றோம்.அண்மையில் நான் தமிழ்நாடு வந்திருந்தபோது தூய வளனார் கல்லூரி திருச்சியிலே தமிழ் உயராய்வுத் துறையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.அங்கே அவர்கள் இதை வரவேற்றார்கள்.அந்த மாதிரி நாம் படித்த கல்லூரிகளில் திராவிடப் பொழில் இதழை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அனுப்பி ஆராய்ச்சி மாணவர்கள் கட்டாயம் படிக்கும் இதழாக இதனைக் கொண்டு வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.இந்த இதழில் இரண்டு கட்டுரைகளை ஆய்வாளர்கள் எடுத்துக் கொண்டு பேசுகிற நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.இந்த நிகழ்ச்சியை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மன்றம் நடத்தி தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பள்ளி வளர்ச்சிக்கும் தமிழ்க் குழந்தைகள் வளர்ச்சிக்கும் அமெரிக்காவிலே அரும்பாடுபட்டு வரும் துரைககண்ணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவார்" என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்த திரு.துரைக்கண்ணன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு நோக்கில் பேச வந்திருக்கும் ஆய்வாளர்களையும் இந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இன்று ஏற்புரை ஆற்ற வந்துள்ள எழுத்தாளர்களையும் ஆய்வுரை கேட்க வந்துள்ள சான்றோர்களையும் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டு இந்த இதழில் 5 கட்டுரைகள் சிறப்பாக வந்துள்ளன. அதில் இரண்டு கட்டுரைகளை மட்டும் ஆய்வுரைக்கு எடுத்துக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.எழுத்தாளர் ஓவியா அவர்கள் எழுதியுள்ள 'வரலாற்றுச்சுவடுகளில் நாத்திகத்தின் அறிவுத் திறனோக்கிய வளர்ச்சி ' என்னும் கட்டுரையைப் பேரா.மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள் முதலில் உரையாற்றுகின்றார் எனக் குறிப்பிட்டு அவரைப் பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தி பின் பேரா.மணிமேகலை சித்தார்த்தன் அவர்களைப் பேச அழைத்தார்..

பேரா.மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள் தம்து ஆய்வு உரையில் "எழுத்தாளர் ஓவியா அவர்கள் வரலாற்றுச்சுவடுகளுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள தொடர்பு, ஆத்திகம் எப்படி மக்களை அடிமைப்படுத்தியது? அதுவும் எப்படி சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட மக்களை அடிமைப்படுத்தி வைத்தது என்பதைப் பற்றியெல்லாம் மிக அழகாக எழுதியிருக்கிறார்.அவருடைய கட்டுரையின் நோக்கமே நமது ஈரோட்டுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்ற தத்துவம்,ஏன் இப்படிச்சொன்னார்?அதற்கான காரணம் என்ன,கடவுள் மறுப்புக் காரணத்தை ஏன் பெரியார் சொல்லவேண்டும் என்ற எல்லா வினாக்களுக்குமான விடைகளை எல்லாம் இந்தக் கட்டுரையில் தோழர் ஓவியா அவர்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார். அதற்கான சாட்சியங்களும் இவரின் கட்டுரையிலே பதிவிடப்பட்டிருக்கிறது.அமெரிக்காவிலே வாழ்ந்த ஜேம்ஸ் வில்லியம் டிராப்பர் என்பவர் எழுதிய புத்தகம்தான் "The History of the Conflict between religion and science" அதாவது மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்பாடுகளின் வரலாறு என்னும் ஆங்கிலப் புத்தகம். அந்த ஆங்கிலப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து நமக்கு இந்தக் கட்டுரையை ஓவியா அவர்கள் தந்திருக்கிறார்.

கட்டுரைகள் பலவிதம். ஒரு தலைப்பைக் கொடுத்தால்,அதற்கு உண்டான பல செய்திகளைச்சேகரித்துக்கொண்டு,ஒருகட்டுரையை என்னைப்போன்ற பேராசிரியர்கள் கொடுப்போம்.ஒருவரின் புத்தகத்தைப் படித்துக்கொண்டு வந்து,அதைப்பற்றிய செய்திகளைக் கொடுப்பது இரண்டாவது வகை கட்டுரை.இன்னொரு வகை, ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது. உதாரணமாக, பாரதியோடு பாரதிதாசனை ஒப்பிடுவது போன்ற கட்டுரைகள்.வேறு ஒருவரின் புத்தகத்தை ஆராய்ந்து,அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அழகுபடச்சொல்லி, அந்த அழகுபடச்சொன்ன கருத்துகளுக்குச் சான்றாக தன்னுடைய கருத்துக்களையும் அங்கு பதிவிடுவது என்பது இன்னொரு வகை கட்டுரை. இந்தக் கடைசியில் சொன்ன கட்டுரை வடிவம்தான் தோழர் ஓவியா அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை. ஜேம்ஸ் வில்லியம் டிராப்பர் அவர்களின் கட்டுரையை அப்படியே மொழிமாற்றம் செய்வது என்பது இயலாது.ஓவியா என்ன செய்திருக்கிறார் என்றால் அந்த ஆங்கிலக் கட்டுரையை மொழியாக்கம் செய்து, எங்கெல்லாம் சிறுசிறு விளக்கங்கள் தந்து செழுமைப்படுத்த முடியுமோ, எங்கெல்லாம் அதற்குத் தொடர்பான செய்திகளைச்சொல்லி நம்மை உற்சாகப்படுத்தமுடியுமோ, நம்மை எப்படி தன்வயப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் இந்தக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார்.

அறிவியல் என்பது ஏதோ சில கண்டுபிடிப்புகளின் தொகுப்புகள் அல்ல, மூட நம்பிக்கைகள் என்பதைப் பொய்ப்பிப்பதற்கும், அதைப் பொய்ப்பிப்பதற்காகப் போராடுவதும், மக்களுடைய மனதில் இருந்து அந்த மூடத்தனமான சிந்தனைகளை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு எது தேவையோ அந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புகட்டுவதும் அறிவியல்தான் என்று சொல்லுகின்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஓவியா அவர்கள். மனிதனின் நம்பிக்கையால் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி சொல்வதுகூட அறிவியல்தான். பரிணாமக் கோட்பாடு என்பது என்ன என்று சொல்லும்போது, அதுஎந்த மதமாக இருந்தாலும் சரி, கிறித்துவமாக இருந்தால் ஆண்டவன் உலகத்தைப் படைத்தார், முதல் நாள் உலகம் ஒழுங்கற்றதாக இருந்தது, அப்புறம் மலைகள் உண்டாகட்டும் என்று சொன்னார்,வரிசையாக அது உண்டாகட்டும், இது உண்டாகட்டும் என்று சொன்னார்.கடைசியாக மனிதனைப் படைத்தார் என்று கிறித்துவம் சொல்லும். இது மாதிரிதான் மற்ற மதங்களும் சொல்லிச்செல்கின்றன. இறைவன்தான் படைத்தான் என்று சொல்கின்றன. நமது நாட்டைப் பொறுத்தவரையில், இது எப்படி சரியென்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்களைப் படைப்பவன் ஒரு இறைவன், படைக்கப்பட்ட மனிதர்களைக் காக்கின்றவன் வேறொரு இறைவன், படைக்கப்பட்ட மனிதர்களை அழிக்கின்றவன் ஒரு இறைவன். அதில் படைக்கின்ற இறைவன் தலையிலிருந்து ஒரு பிரிவைப் படைத்தானாம், தோள்களிலிபருந்துஒரு பிரிவைப் படைத்தானாம்,தொடையிலிருந்து ஒருபிரிவைப் படைத்தானாம், கால்களிலிருந்து ஒரு பிரிவைப் படைத்தானாம்., இந்த நான்கு பிரிவுக்கும் கீழாக இன்னொரு பிரிவையும் படைத்தான். இதுதான் சநாதன தர்மம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆக இப்படிப்பட்ட படைப்புத் தத்துவங்களை எதிர்ப்பதுதான் பரிணாமக்கோட்பாடு என்னும் அறிவியல். இன்றைக்குப் பலரும் பரிணாமக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே பரிணாமக் கோட்பாடு என்பதே படைப்புக் கோட்பாட்டை எதிர்ப்பதுதான்.நாம் அறிந்தவரையில் கலிலியோ,புரூனோ போன்ற அறிஞர்கள் எல்லாம் மதத்திற்கு எதிராக கருத்துக்களை வைத்து உயிர்த்தியாகம் செய்தவர்கள். புரூனோ போன்ற அறிவியல் அறிஞர்கள் மதவாதிகள் சொன்ன கருத்துகளை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.வில்லியம் ஜேம்ஸ்,தன்னுடைய நூல் எதற்காகப் பயன்படும் என்று சொல்கிறபோது,யாரெல்லாம் உண்மையைக் கண்டு அடைகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டியாக,வெளிச்சம் தரும் விளக்காகத் தன் புத்தகம் இருக்கும் என்று சொல்கிறார்.ஒரு அறையில் நிறைய பொருட்கள். ஆனால் இருட்டாக இருக்கிறது.அந்த இருட்டு அறையில் ஒரு விளக்கைப் போடுகிறபோது, எப்படி அந்த ஒளியானது எல்லாப்பொருட்களையும் நமக்குக் காட்டுகிறதோ, அதைப்போல தோழர் ஓவியா அவர்களின் கட்டுரை ஜேம்ஸ் வில்லியம்ஸ் அவர்களின் புத்தகத்தை அப்படியே நம் பார்வைக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது உண்மையைத் தேடுபவர்கள் யார்? அந்த உண்மையைத் தேடுபவர்களுக்கு வழிமுறையாக இருப்பது எது என்று வருகின்றபோது முதலாவதாக மதவாதிகளின் புரட்டுகளுக்கு முதல் அடியைக் கொடுத்தவர்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள்தான். நில வழி, நீர் வழியாகப் பயணம் செய்தவர்களே கடவுள் பற்றிய

கோட்பாடு எல்லாம் உடைவதைற்குக் காரணமானவர்கள். உலகம் தட்டை என்பதுதான் மதக் கோட்பாடு. உலகம் உருணடை என்று சொன்னவர் கலிலியோ. எக்ஸிகுளோஸ் என்னும் நாடகக் கலைஞன்தான் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தவன். 'கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்' என்று ஏன் தந்தை பெரியார் சொன்னார்? கடவுளைப் பரப்ப,பரப்பத்தான் மக்களின் மனதில் பலவிதமான மூடத்தனமான சிந்தனைகள் நிரம்புகிறது. கிரேக்க, ரோம் நாட்டை ஆண்ட மன்னர் குலம் தத்துவங்களை வைத்துக்கொள்கிறது. ஏழை, எளிய, பாவப்பட்ட மக்களுக்கு மதத்தை வைக்கிறது.இதற்கு எடுத்துக்காட்டாக அலெக்சாண்டர் அவர்களைச்சொல்கின்றார்கள். அலெக்ஸாண்டர், தான் சூபிடர் என்னும் பெண் தெய்வத்தின் மகன் என்று தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறான். 33 வயது இளைஞன்.உலகின் மிகச்சிறந்த ஒரு வீரன்.உலக நாடுகள் பலவற்றையும் வீழ்த்திய மாமன்னன்.

தன் வீரத்தின் மீது அவனுக்கு நம்பிக்கையில்லை, மாறாக மதத்தின் மீது தன் நம்பிக்கையைத் தூண்டுகிறான். நான் யார் தெரியுமா? நான் பெண் தெய்வத்தின்மகன் என்று சொல்கின்றான். கடவுளுக்கு என்னென்ன ஆற்றல்கள் உள்ளதோ, அவையெல்லாம் தனக்கு உண்டு என்று சொல்கின்றான். அது இன்றைக்கும் நம் நாட்டில் இருக்கிறது அல்லவா? எத்தனை பேர் இன்றைக்கு நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.அப்படி நான் கடவுள் எனற சொன்ன அலெக்சாண்டரை மக்கள் இறைவன் என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள். செயற்கையாக ஒரு நகரத்தை உண்டாக்கியவன் அலெக்சாண்டர். அலெக்சாண்டிரியா என்னும் நகரத்தை கி.பி. 331-ல் உருவாக்குகிறான்.மிகப்பெரிய பரப்பளவில் உண்டாகப்பட்ட அந்த நகரத்திற்கு எகிப்திலிருந்து யூதர்களைக் கொண்டு வருகின்றான்.இலட்சக்கணக்கான அடிமைகள் பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகிறார்கள்.மக்களை ஒன்று படுத்துகிறான் அலெக்சாண்டர்.பூர்விக எகிப்தியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள் என்று எல்லோருமொன்றாக வாழும் நிலமாக அலெக்சாண்டிரியாவை அலெக்சாண்டர் உருவாக்குகிறான். ஆனால் போர்கள் மூடத்தனத்தை வளர்த்தது.மத நம்பிக்கைகளை வளர்த்தது. போரில் தோற்றுப்போனவனின் கடவுள் வலிமையற்ற கடவுள் என்று சொல்லப்படுகிறது.

இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் கூட இந்தியா முழுவதும் வாழ்ந்த நாகர்கள் என்னும் திராவிடர்கள் மற்றும் ஆரியர்களுக்கும் நடந்த போரில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடும் அதனால் தான் அவன் உன்னுடைய கடவுளை விடவும் என்னுடைய கடவுள் உயர்ந்தவன் என்று சொல்லிவிட்டான். இதுவும் கூட அப்படித்தான். தோல்வி அடைந்த மன்னனும் சரி மக்களும் சரி வெற்றியடைந்த மன்னனின் கடவுளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள் இதுதான் கலாச்சாரப் பரிணாமம் இது அப்படியே பரவப் பரவ ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது அப்படித்தான் கலாச்சாரங்களும் மதங்களும் பரவ ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையில்தான் அலெக்சாண்டர் ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கிறான். அந்த அருங்காட்சியகம் ஒரு மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கி இருக்கிறது உலகில் இதுவரை தோன்றிய அத்தனை தத்துவங்களையும் அறிவியலையும் நிலை நிறுத்துகிற ஒரு பல்கலைக்கழகமாக அதனை அலெக்சாண்டர் நிறுவியிருக்கிறான்.

உலகில் பல்வேறு இடங்களில் இருந்து கற்றறிந்த சான்றோர்களை அலெக்சாண்டர் நகரத்திற்கு அழைக்கிறார்கள் அவர்கள் எழுதிய புத்தகம் எல்லாம் நல்ல தொகை கொடுத்து விலைக்கு வாங்கப்படுகின்றன எழுதியவர்களின் நூல்கள் படிகள் எடுத்து அங்குள்ள நூலகங்கள் வைக்கப்படுகின்றன. அறிஞர் குழுக்களை ஏற்படுத்துகிறார்கள். வானவியல், கணிதவியல், மருத்துவவியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பேராசிரியப் பெருமக்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் மூலமாக பல மாணவர்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து அந்த அருங்காட்சியகத்தில் கல்வி பயில்கிறார்கள். ஆக இப்படிப்பட்ட காலத்தில் தான் உலகம் உருண்டை என்பது மிக அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது அதுவரை இருந்த கடவுள் உலகத்தைத் தட்டையாகதான் படைத்தார் என்ற கோட்பாடு உடைக்கப்படுகிறது. மதக் கோட்பாடு இறைக் கோட்பாடு முழுவதுமாக தகர்க்கப்பட்டு உலகம் என்பது ஓர் உருண்டை வடிவமானது என்ற எரோனியஸ் என்ற அறிவியல் அறிஞர் அங்கு பிரகடனப்படுத்துகிறார் அதற்குப் பிறகு ஓவியா அவர்கள் நிறைய செய்திகளை சொல்லி இருக்கிறார்கள்... எப்படி இந்த மதங்களில் இருந்து மனிதன் மீண்டு மனிதனாக வாழ முடியும் என்பது தான் ஜேம்ஸ் வில்லியம்ஸ் டிராப்பர் அவர்கள் சொல்லக்கூடிய இறுதியான ஒரு செய்தி.

மதம் என்னும் பெரிய நோய் பிடியாது இருக்க வேண்டும் என்பது வள்ளலார் அவர்களின் கோட்பாடு. மதம் என்பது ஒரு நோய் அந்தப் பிணி மனிதனைப் பிடிக்க கூடாது அப்படி பிடிக்கின்ற பொழுது அந்த இடத்திலே கொலை, மனித உயிர்கள் பழி வாங்கப்படுதல், ஆதிக்க வெறி வளரும் ஆகவே தான் நமது தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று சொல்கின்றார் இப்பொழுது தெரிகிறதா ஒரு கடவுளை வைத்து மக்களை எப்படி சிந்திக்க விடாமல் முற்போக்கு சிந்தனைகளை வளர விடாமல் அது தடுத்து இருந்தது என்பது, நமக்கு இந்த ஓவியா அவர்களுடைய அருமையான கட்டுரை மூலம் புலனாகிறது. ஒரு கட்டுரை அல்லது படைப்பு என்பது எப்பொழுது அது பெருமைக்கு உரியதாக இருக்கும் என்றால் எழுதுகின்றவர் படைக்கின்றவர் எந்த உணர்வோடு எழுதுகின்றாரோ படைக்கின்றாரோ அந்த உணர்வை வாசிப்பவர்களும் பெற வேண்டும் அதை பெற வைக்க வேண்டும் அதுதான் இந்த எழுத்து வெற்றி அப்படிப்பட்ட ஒரு மகத்தான வெற்றியை தோழர் ஓவியா அவர்கள் பெற்றிருக்கிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்காதவர் பெரியார் ஆனால் அவர் ஒரு சமூக விஞ்ஞானி என்று போற்றப்படுவதற்கான காரணங்களை எந்த விதமான ஐயமும் இல்லாமல் இந்தக் கட்டுரை மூலம் நாம் உணர்கிறோம் என்று கூறி முடித்தார்.

தொடர்ந்து எழுத்தாளர் ஓவியா அவர்களைப் பற்றி அவைக்கு அறிமுகம் செய்து ஏற்புரை ஆற்ற எழுத்தாளர் ஓவியா அவர்களை அழைத்தார் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள்.

எழுத்தாளர் ஓவியா அவர்களின் ஏற்புரை :

"அனைவருக்கும் என் பணிவன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்க கூடிய பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவினுடைய தலைவர் அய்யா சோம. இளங்கோவன் அவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் என் வணக்கம். என்னுடைய கட்டுரையை ஆய்வு செய்து ஒரு உற்சாகமிக்க உரையை

பேரா.மணிமேகலை அவர்கள் மிக மகிழ்ச்சியுடனும் உணர்வுடனும் அந்த உரையை ஆற்றி இருக்கிறார். உற்சாகமான உரையை நல்ல தமிழில் வழங்கி இருக்கிறார்.பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவினுடைய இந்த முயற்சிக்கு அதாவது திராவிடப் பொழில் இதழில் வந்திருக்கக்கூடிய என்னுடைய கட்டுரையை இன்றைய தினம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி யோடு நன்றி தெரிவிக்கின்றேன். திராவிடப் பொழில் இதழுக்கு கட்டுரையை தோழர் நேரு என்னிடம் கேட்ட பொழுது இந்தப் பணியில் நான் இருந்த காரணத்தினால் நான் கேட்டேன். இந்தப் பணியை ஒட்டியே ஒரு கட்டுரையை நான் தரட்டுமா என்று. அதாவது நேரடி வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் ஆனால் பெரும்பான்மையாக அந்த நூலின் மொழிபெயர்ப்பை ஆதாரமாக வைத்து இந்தக் கட்டுரையை நான் தரட்டுமா என்று கேட்டவுடன் அவர் உடனே இசைவு தந்தார்.

சிறுவயதிலிருந்தே எங்களுடைய அடிப்படை நாத்திகத்தின் மீது, மத எதிர்ப்பின் மீது கட்டமைக்கப்பட்டது. திராவிட இயக்க குடும்பத்தில் வளர்ந்த எவருக்கும் இந்த உணர்வு இருக்கும். அதாவது நாத்திகத்தை ரொம்ப வசதியாக ஒதுக்கி விட்டுப் போவதை எளிதாக பெரியாரியவாதிகளால் எடுத்துக் கொள்ள முடியாது. ஏன் என்று கேட்டால் பெரியார் இயலாளர்கள் பேசுகின்ற நாத்திகம் என்பது அவர்களுடைய அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக அல்ல. மாறாக, இந்தச் சமூக மாற்றத்திற்கு நாத்திகம்தான் அடிப்படையான ஒரு கருவியாக இருக்கும்,நாத்திக உணர்வு உள்ளவர்கள்தான் சரியாக செயல்பட முடியும் என்ற தெளிவார்ந்த ஒரு புரிதலின் அடிப்படைதான். எனவேதான் நாத்திகத்தை விட்டுக் கொடுக்கும் பொழுது நாம் ஒரு மாற்று குறைவாகத்தான் நாம் அந்த விஷயத்தை பார்க்கின்ற ஒரு பார்வை நமக்கு எப்போதும் உண்டு அந்த அடிப்படையில் தான் பெரியார் சொன்ன இந்த வார்த்தைகள் "கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளை தப்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" இதனை மேடை தோறும் முழங்கி இருக்கிறோம் அந்த அனுபவம் இருக்கிறது

இன்றைக்கு வரைக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பெரியார் ஏதோ கடவுளைத் திட்டி விட்டார், இல்லையென்றால் சாமி கும்பிடுகிற மக்களை திட்டிவிட்டார். அப்படித்தான் ஒரு புரிதல் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையினுடைய முதல் துவக்கமே, நான் சொல்ல விரும்பியது இந்த வாசகங்கள் வசைச் சொற்கள் அல்ல மாறாக ஆய்வுச் சொற்கள் என்பது. அது வசை போல் ஒலிக்கிறதே ஒழிய அது வசை மொழி அல்ல அதுதான் உண்மையின் மொழி அதை வசை மொழியாக இவர்கள் திணிக்கிறார்கள் எனவே அதை வைத்துத் துவங்கி இன்று அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்திருக்கிறது. இது 150 வருஷத்திற்கு முந்தைய நூல். இதைத் தாண்டி இந்த உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது தத்துவம்,சிந்தனை என்று பார்த்தால் அதுவும் தாண்டி வளர்ந்து போய் இருக்கிறது ஆனால் எனக்குள் ஒரு ஐயப்பாடு தமிழில் மொழி பெயர்த்தல் என்ற விஷயம் அறிவு சம்பந்தப்பட்ட நூல்களைத் தவிர்த்து விட்டு திடீரென்று ஒரு பாய்ச்சலாக நவீன மொழிபெயர்ப்புகள் பாய்ந்து வந்து விட்டது என்ற ஒரு பார்வை எனக்கு இருக்கிறது. எனவே 150 வருடங்களுக்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட இந்த வரலாறு என்பது மிக முக்கியமானது இன்றைக்கும் கூட. போப்பாண்டவர் மன்னிப்பு கேட்டு விட்டார் ஆனாலும் அது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல கலிலியோவுக்கு செய்த கொடுமைக்கு போப்பாண்டவர் 1992 இல் மன்னிப்பு கேட்கிறார் ஆனால் கலியோவைத் தண்டித்தது மட்டுமா தவறு? இந்தச் சமுதாயத்தை 1500 ஆண்டுகள் வளர்ச்சி இல்லாமல் தேக்கமுற வைத்தது. வைத்த குற்றத்தைச் செய்தது அந்த மதம். அதுதான் இந்த நூலின் முக்கியமான கருத்து.அந்த நூலில் இருக்கும் உரையாடல் மொழியை மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன் அதற்காகவே இந்தக் கட்டுரையை நான் எழுதினேன் பேராசிரியர் மணிமேகலை அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடத்தில் திராவிடப் பொழில் இதழைப் பற்றியும் நான் சொல்ல வேண்டும் இது ஒரு நல்ல முயற்சி இன்று எவ்வளவோ வரலாறு என்ற பெயரில் பதிவு செய்யப்படுகிறது. வரலாறு என்ற பெயரில் உண்மையைச் சொல்வதுதான் நமது நோக்கம் ஆனால் பொய்களை வரலாறாகப் பதிவு செய்வதற்கு நமது எதிரிகள் தயாராக இருக்கிறார்கள் இந்த நேரத்தில் திராவிடப் பொழில் இதழின் நோக்கம் எப்படி அலெக்சாண்டரியா அருங்காட்சியகத்தின் நோக்கம் இருந்ததோ அதைப் போல அறிவை நிலை பெறச் செய்வது, அறிவைப் பரப்புவது என்பதாக இருக்கிறது. அறிவின் பக்கம் நிற்போம் அதுதான் அலெக்சாண்டிரியா அருங்காட்சியகத்தின் குரல் அதுபோல இன்றுவரை தொடர்கின்ற ராயல் சொசைட்டி மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது அதனுடைய நிபந்தனையே என்னவென்று பார்த்தால் அறிவியலுக்குப் புறம்பான எதையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. அந்த மன நிலையில் இருப்பவர்கள் தான் அறிவியல் கழகத்தில் உறுப்பினராக முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள் அதேபோல வரலாறு என்பது உண்மையைத் தேடுவதாக இருக்க வேண்டும் வரலாறு என்பது உண்மையை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் ஆனால் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்குத் தேவையான வரலாற்றை அவர்களே படைத்துக் கொள்கிறார்கள்.

எப்படி அலெக்சாண்டர் தன்னைக் கடவுளின் மகனாக மாற்றிக்கொண்டாரோ அதேபோல வரலாறு என்பது ஆட்சியாளர்களின் சார்பாக அவ்வப்போது மாற்றப்பட்டு விடுகிறது. அந்த அபாய நிலையில் இருந்து வரலாறு காப்பாற்றப்பட வேண்டுமானால், உண்மையைத் தேடுபவர்கள் வரலாற்றை எழுத வேண்டும். வரலாற்றை நேசிப்பவர்கள், இந்த மனித சமூக வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரலாற்றை எழுத வேண்டும். அந்த அடிப்படையில் தான் இந்தத் திராவிடப்ப்பொழில் ஆய்வு இதழ் ஒரு வரலாற்று இதழாகவும் வெளி வருகின்றது அதேபோல சமூகத்தை ஆய்வு செய்து விடைகள் தரும் இதழாகவும் திராவிடப்பொழில் வந்து கொண்டிருக்கிறது திராவிடப்பொழில் இதழின் மிகச் சிறப்பான ஒரு முடிவு இது ஒரு பைலிங்குவல் என்று ஆக்கியது ஏனென்று கேட்டால் இன்று நமது பிள்ளைகள் எல்லாருமே இரண்டு மொழிகளில் தான், தமிழ், ஆங்கிலத்தில்தான் படிக்கிறார்கள் இரண்டு மொழிகளில் சிந்திக்கிற இயல்பு என்பது வந்துவிட்டது. இரண்டு மொழியையும் சேர்த்துத்தான் நமது வாழ்க்கை இருக்கிறது இது சரியா தவறா என்பது வேறு விஷயம் இன்றைய எதார்த்தத்தில் இரு மொழி என்பது தேவையாக இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது ஓர் ஆராய்ச்சி இதழ், இருமொழி இதழ் என்கின்ற அளவில் அதுவும் உலக அளவில் கொண்டு வருவது என்பது மிகச் சிறப்பான முடிவு இதனுடைய ஆசிரியர் குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நிகழ்வுகளில் நானும் உங்களில் ஒருவராக பயணிக்க நான் அணியமாக இருக்கிறேன்." என்று உரையாற்றினார்.

தொடர்ந்து பேரா.வீ.அரசு அவர்கள் எழுதிய "History Of Social Justice in Tamil Society" என்னும் ஆங்கிலக் கட்டுரையை ஆய்வு செய்த கவிஞர் இராஜன் பாபு அவர்களை அரங்கிற்கு அறிமுகம் செய்து அவரை ஆய்வுரை செய்வதற்கு வருமாறு ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள் அழைத்தார்.

கவிஞர் இராஜன் பாபு அவர்கள் தனது ஆய்வுரையில் "பேராசிரியர் வீ.அரசு அவர்கள் மிக ஆற்றலான ஆராய்ச்சியாளர் ஸ்ரீலங்காவில் இருந்து ஆரம்பித்துப் பல இடங்களில் தமிழ் குறித்தும் கலாச்சாரம் குறித்தும் மொழி குறித்தும் மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொண்ட மாமனிதர். அவருடைய கட்டுரையில் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை மாத்திரம் உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன் இவருடைய கட்டுரை ஏழு பக்கக் கட்டுரை இதில் பேராசிரியர் எழுதியிருப்பது மனிதன் தோன்றியது 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொன்னால் தமிழன் தோன்றிய காலத்திற்குப் பின் தோன்றிய பண்டைய இலக்கியங்களின் மூலமாக இந்தச் சமூக நீதி என்பது அப்போதே இருந்திருக்கிறது என்று சொல்கின்றார். வள்ளுவன் மிக அழகாகச் சொன்னான் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று,' பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்று பேசி இருக்கிறார். பாரதி அழகாக 'காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினான். இருந்திருக்கிறது ஆனால் இடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் சில தவறுகள் காரணமாக சமூக நீதி காணாமல் போய்விட்டது அதனையும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்

எப்பொழுது சமூக நீதி காணாமல் போனது, எந்த நூற்றாண்டில் அது காணாமல் போனது, காணாமல் போவதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நான் எந்த மதத்தையோ சமூகத்தையோ குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை ஆனால் அவர் குறிப்பிட்டு இருப்பதைப் போல மதத்தின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் தான் கொஞ்சம் கொஞ்சமாக சமூகநீதி அரிக்கப்பட்டு விட்டது, அழிக்கப்பட்டது என்று பார்த்தால் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன.இதற்குக் காரணம் பிராமணிய சமுதாயம் என்பதையும் சமஸ்கிருதம் உள்ளே வந்ததால்தான் சமூக நீதி அழிந்தது என்பதையும் மிக நேர்த்தியாக பேராசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு சிறு கூட்டம் வந்து ஆளுகின்ற போது இவையெல்லாம் மாறிப் போகுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. தமிழர்கள் இந்தியா என்ற ஒரு நாடு இல்லாத காலத்தில் கூட தமிழர்கள் சமூக நீதியைக் கடைப்பிடித்தவர்கள், இன்றைய வட மாநிலங்கள் என்று சொல்கிறோமே அந்த பகுதியில் எல்லாம் சத்திரியர்களாக இருந்தால் மட்டுமே மன்னர்களாக வர முடியும் ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை எவன் வீரனோ அவன் மன்னனாக வர முடியும்.வந்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு சமூக நீதியோடு, வசதியான வாழ்க்கையை வாழ்ந்த தமிழர்களுக்குள் எப்போது இந்தப் பிணக்கு வந்திருக்கக்கூடும்? பேராசிரியர் அவர்கள் தமது கட்டுரையில் 19ஆம் நூற்றாண்டில் எப்பொழுது ஆங்கிலேயர்கள் வந்தார்களோ, அப்போது ஆங்கிலேயர்கள் கொஞ்சம் சமூக நீதியை பேச ஆரம்பித்தார்கள் என்று குறிப்பிடுகிறார். அதில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் ஆங்கிலேயர்களும் சமூக நீதி பேசுவதற்காக வரவில்லை ஆள வேண்டும் என்று வந்தார்கள் தங்கள் மதத்தைப் பரப்ப நினைத்தார்கள். ஆனால் அவர்கள் மதம் பரப்பியபோது ஒரு சில நன்மைகள் கிடைத்தது எங்கெல்லாம் பழங்குடியினர் இருக்கிறார்களோ எங்கெல்லாம் பட்டியல் இனத்தவர்கள் என்று இருக்கிறார்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் சென்றார்கள் சேவை என்ற ஒரு வார்த்தையை அதற்கு முன்னால் தமிழன் எவ்வளவு நேர்த்தியாக கடைப்பிடித்துக் கொண்டு இருந்தார்களோ அதைப்போல இவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள்; அந்த நேரத்தில் பல அமைப்புகள் சமூக நீதிக்காக தோன்ற ஆரம்பித்தன என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீட்டோடு முடிந்து விடப் போகிறதா? இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியில் ஒரு கூறு அது ஒரு கருவி. சமூக நீதி என்பது ஒரு மிகப்பெரியது; அளப்பரியது. சமூக நீதி என்பது முதன் முதலில் பெண்களுக்கு இல்லாமல் போனது; பழங்குடியினருக்கு இல்லாமல் போனது; மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லாமல் போனது; எந்த நீதி அவர்களுக்கு எல்லாம் மறுக்கப்பட்டதோ எங்கே அரசியல் நீதி கிடைக்காமல் போனதோ எங்கே பொருளாதார நீதி கிடைக்காமல் போனதோ அதையெல்லாம் கொடுப்பது சமூக நீதி. என்று பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார். சமூக நீதி என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தான் விரும்பியதை அடைவது ஆனால் இங்கே அது மறுக்கப்பட்டது என்பதையும் பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார். பாலின சமத்துவதற்கான அடிக்கல் இங்குதான் நாட்டப்பட்டது. பெரியார் வருகின்ற பொழுதும் அதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது என்றும் சொல்கிறார்.

திருநெல்வேலியில் இருக்கும் இரண்டு கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் பட்டியல் இன மாணவர்கள் நிறையப் பேர் படிக்க வாய்ப்பு கிடைத்தது.இன்னொரு கல்லூரியில் கிடைக்கவில்லை ஏன்? பெண்கள் அடிமைத்தனத்தை ஆங்கிலேயர்கள்தான் முதலில் கொண்டு வந்தார்கள். இன்று வரை போப்பாண்டவராக ஒரு பெண் ஆக முடியாது. இன்று இங்கு பெண்கள் பல பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பெரியார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ஆங்கிலேயர்கள்தான் இந்தச் சமூக நீதியைக் கொண்டு வருவதற்கு அடிக்கோலிட்டார்கள் என்று சொல்கின்ற பொழுதுதான் என்னுடைய பார்வை என்பது மாறுபடுகிறது. அவர்களை விட சமூக நீதியில் நாம் நிறைய வந்திருக்கிறோம் மற்ற நாடுகளில் வர்க்க முரண்பாடு இருக்கிறது நம் நாட்டில் ஜாதி முரண்பாடு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஜாதி குறித்த பார்வையும் இடம் குறித்த பார்வையும் இன்றைக்கு மாறி இருக்கிறது.ஊர்,சேரி என்பதைப் பற்றி மாற்றுப் பார்வை வந்திருக்கிறது.

பீகார் அமைச்சர் சந்திரசேகர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் இராமாயணம் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார் இராமாயணத்தில் சமூக நீதி இல்லை மாற்றுத் திறனாளிகளை விலங்குகளோடு ஒப்பிட்டு இருக்கிறது பெண்களை விலங்குகளோடு ஒப்பிட்டு இருக்கிறது இது எப்படி அனைவருக்குமான புத்தகமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி கேட்டார் இது பெரிய சர்ச்சையாகிறது வட இந்திய ஊடகங்களில் எல்லாம் இது பேசப்படுகிறது நாம் இதுவரைக்கும் இவற்றைப் பேசிக் கொண்டிருந்தோம் இராமாயணம் புனையப்பட்டது ,மகாபாரதம் புனையப்பட்டது என்று. இப்பொழுது வடநாட்டவரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். இனம்,மொழி என்பதெல்லாம் மாறி இன்றைக்கு பெரும்பான்மையினர் என்ற போர்வையில் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது சமூக நீதி என்பது விளிம்பு நிலையில் இருக்கும் எந்த மனிதனுக்கும் சமமான இடம் கிடைக்க செய்வது, சமமான வளர்ச்சி கிடைக்க செய்வது, சமூகநீதி என்பது ஒட்டுமொத்தமான வளர்ச்சி .ஒட்டுமொத்தமான வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி .ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக வளர்கின்ற வளர்ச்சி. இன்னும் பெண்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலும் வருவதற்கு நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் மாமியார் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கேயே தங்கி விடுகிறார்கள். சமூக நீதி தத்துவத்தில் நம்மை விட அதிகமாக இருக்கிறார்கள் அதற்கு ஒரு காரணம் அங்கே கிறிஸ்தவம் பரவியது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல அதையும் தாண்டி நிறையச் செய்திகள் இருக்கின்றன சமூக நீதியின் ஆணிவேர்களாக முதன்முதலாக இருந்தவர்கள் தமிழர்கள். பேராசிரியர் ஒன்றைக் குறிப்பிடுகிறார், மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இங்கிருந்தவர்களைக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். அப்படி அவர்கள் சென்ற பொழுது, சமூக நீதியில் அவர்கள் கொஞ்சம் மேலே வந்தது போல இருந்தது என்று குறிப்பிடுகிறார். அழைத்துச் செல்லப்பட்டவர்கள், கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். எப்படி அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திருக்க கூடும்? கூலிகளாகப் போனார்கள்; துன்பப்பட்டார்கள்; அந்த நாட்டின் குடிமக்களானார்கள்; இப்பொழுது வசதியாக வாழ்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இரண்டு ஜாதிகள் அதிகமாக கிறித்துவத்திற்கு மாறினார்கள் கிறித்துவத்திற்கு மாறியதன் காரணமாகவே அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட ஆரம்பித்தது அதனால் அவர்களுக்கு எளிதாக சமூக நீதி கிடைத்தது என்று சொல்கிறீர்கள் ஆனால் அதே இரண்டு ஜாதிகள் தான் இன்றைக்கு கிறித்துவத்தில் இருக்கும் ஜாதி பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு எப்படி ஒரு சரியான சமூக நீதி கிடைத்திருக்க கூடும்? இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் தைரியமாக சைக்கிளில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் யோகி செய்தது அல்ல இது.வட மாநிலங்களிலும் மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. நான் 2012 ஜம்மு காஷ்மீர் சென்ற பொழுது அங்கே இருக்கும் வங்கிகள் பெண்களுக்கு கடன் கொடுக்காது 2012ல் இது. அப்படி பெண்களுக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்றால் இரண்டு ஆண் கெஜட் ஆபிசர்கள் கேரண்டி கொடுக்க வேண்டும். ஒரு மாத காலம் அங்கு உட்கார்ந்து அந்தப் பெண்களுக்கு கடன் கொடுப்பதற்காகப் போராடினேன்.நாம் இங்கே சிறுபான்மை மக்கள் என்று சொல்கிறோம் அங்கே அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பொழுது பெண்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது இந்த நாட்டில்தான் பண்டிட் என்று சொல்லி கற்றவர்கள் என்று சொல்லி ஒரு ஜாதிக்கு பெயர் வைப்பதும் இந்த நாட்டில் தான். நான் அதையும் இல்லை என்று மறுக்கவில்லை.

சமூகநீதி என்பதில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது இதை நிறைய இடங்களில் பேராசிரியர் அரசு அவர்கள் அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார் அதையும் நான் மறுக்கவில்லை இந்தக் கட்டுரையில் எனக்கு சில முரண்களும் இருக்கின்றன தமிழன் என்றைக்கும் சமூக நீதியில் சளைத்தவனாக இருந்ததில்லை ஏனென்றால் இவன்தான் சமூக நீதி குறித்த முதல் குரலை இந்தியாவில் எழுப்பியவன். பல கவிதைகள், இலக்கியங்கள் இதற்கான சான்றுகளைச் சொல்கின்றன. பேரா.அரசு அவர்களின் அற்புதமான இந்தக் கட்டுரைக்கு வாழ்த்துகள்." என்று உரையாற்றினார்.

தொடர்ந்து கட்டுரை ஆசிரியர் பேரா.வீ.அரசு அவர்களைப் பற்றிய குறிப்புகளை அவையில் எடுத்துவைத்து ,ஏற்புரை நிகழ்த்த பேரா.வீ.அரசு அவர்களை ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள் அழைத்தார். பேரா.வீ.அரசு அவர்கள் தனது ஏற்புரையில் ராஜன் பாபு அவர்கள் என்னுடைய அந்தக் கட்டுரையை பற்றி மூன்று மிக முக்கியமான புள்ளிகளை விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறார் அந்த மூன்று புள்ளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மாத்திரம் நான் உரையாடுகிறேன்.

அந்தக் கட்டுரை என்பது மிகப் பெரிய புத்தகமாக எழுத வேண்டிய மிகப் பரந்த விரிந்த பரிமாணங்களைக் கொண்ட கட்டுரை. அதில் அங்கங்கே புள்ளி புள்ளி மாதிரி எவை மிக முக்கியமான மடை மாற்றங்களாக சமூகத்தில் நடந்தனவோ அவற்றைக் கோடிட்டுக் காட்டி அந்தக் கட்டுரை மிக வேகமாகப் போகிறது ஒவ்வொன்று குறித்தும் ஒரு புத்தகம் எழுத வேண்டிய அளவிற்கான பின்புலம் உடைய கருத்துக்கள். ராஜன் பாபு அவர்கள் அதை வாசித்து தனது கருத்துகளைச் சொன்னதற்கு நன்றி.

முதலில் இந்த தமிழ்ச் சமூக வரலாற்றில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி நம்முடைய சிலப்பதிகாரம் திருக்குறள் இவைகள் எல்லாம் உருவாகிய வரலாற்று காலம்,அதாவது கி.பி ஆறு ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் சமூக வரலாறு என்பது வேறு. அது நமக்கு சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், அண்மையில் நமக்குக் கிடைத்திருக்கிற ஏராளமான தொல்பொருள் ஆய்வுகள் இவை எல்லாம் காட்டுகின்றன. அந்தச் சமூகம் குடிகளால் ஆனது. அப்போது பெரிய அரசு என்ற ஸ்டேட் என்ற பாமினேஷன் உருவாகவில்லை அப்போது இருந்த சமூகம்,அதன் முரண்பாடுகள் பற்றிய தன்மை என்பது வேறு.

ஆனால் இந்த வரலாற்றுக்குப் பிந்தைய ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் ஒரு மிகப்பெரிய மடை மாற்றம் நிகழ்ந்தது என்று நான் அதில் எழுதி இருக்கிறேன் அந்த மாற்றத்தில் பார்ப்பனியம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது என்பது என்னுடைய வாதம். அதை ஒரு சிறு கூட்டம் மட்டும் வந்து சமூகத்தில் அவ்வளவு பெரிய மாற்றத்தை செய்து விட முடியுமா என்பது போன்ற ஒரு கேள்வியை, சந்தேகத்தை நண்பர் ராஜன்பாபு அவர்கள் கிளப்பி இருக்கிறார்கள். சரி, என்ன விஷயம் என்று சொன்னால் அன்றைக்கு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களாக இருக்கட்டும் பிற்காலச் சோழர்களாக இருக்கட்டும் வெவ்வேறு பகுதிகளில் இருந்த அரசர்களைத் தங்களுடைய நேரடிப் பண்பாட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் பார்ப்பனர்கள். சமஸ்கிருதத்தை அதற்கு வழியாக ஆக்கிக் கொண்டார்கள்.சமஸ்கிருதம் நல்ல சான்று. ஏன் வழிபாட்டு மொழியாக கோயில்களில் சமஸ்கிருதம் இருக்கிறது? ஏழு எட்டாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை உங்களுடைய தமிழ் என்னவாக இருந்தது? மணிப் பிரவாளத் தமிழ். இப்படி நிறைய நிறைய சமஸ்கிருதச்சொற்கள் தமிழ் மொழியில் சேர்ந்து தமிழே அழிந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தது ஆனால் இப்படி சமஸ்கிருதம் சேர்ந்ததன் விளைவாக தெலுங்கு வந்தது, கன்னடம் வந்தது, மலையாளம் வந்தது, ஆனால் தமிழ் தன்னைக் காத்துக் கொண்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் தமிழ் இரட்டை வழக்கு மொழி.

நாம் பேசுவதைப் போல் எழுத மாட்டோம்.எழுதுவது வேறு பேசுவது வேறு. ஆகையினாலே பதிவு செய்யப்பட்ட மொழி நமக்குத் தொடர்ச்சியாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்ததன் காரணமாக நமது மொழி தப்பித்தது. இல்லையென்றால் சமஸ்கிருதம் கலந்த தெலுங்கு கன்னட மலையாள மொழியைப் போல் இன்னொரு மொழியாக தமிழ் உருமாறி இருக்கும் இதை யார் செய்தார்கள்? இதற்கு யார் காரணாமாக இருந்தார்கள்? கோயில்களையும் அது சார்ந்த பண்பாட்டுகளையும் அது சார்ந்த வரலாற்று பொருளாதாரம் பின்புலங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் உங்கள் இசை மாற்றப்பட்டது, உங்கள் கலை, வரலாறு மாற்றப்பட்டது. உங்களுடைய வழிபாட்டு முறை மாற்றப்பட்டது. அது சார்ந்த அனைத்து வரலாறுகளும் ஒரு சாதி சார்ந்த சமஸ்கிருதம் சார்ந்த வரலாறாக கட்டமைக்கப்பட்டது என்பது வரலாறு. இது ஒரு சிறிய கூட்டத்தால், ஸ்மார்த்த பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய சங்கராச்சாரி கட்டமைத்த கூட்டம். அவர்களுக்கும் அரசுக்கும் இருந்த உறவுகள். அரசர்கள் அவர்களைக் கொண்டாடினார்கள் அவர்களுக்கு இலவசமாக நிலம் கொடுத்தார்கள் அவர்களுக்கு என்னென்ன வசதி செய்ய முடியுமோ அவ்வளவு செய்தார்கள்.

அரசர்கள் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நடத்தியதாக வரலாறு இல்லை. சமண பௌத்த மதங்களை ஒழித்தார்கள் ஆசிவக மதத்தை ஒழித்தார்கள் தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பொது உடமை பேசிய, தமிழ் மரபை பேசிய மனிதர்கள், மனிதனை மையப்படுத்திய மரபினர். இந்த மரபுகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு மனிதனை மய்யப்படுத்தாத புராண பரப்பிலான ராமாயணம் மகாபாரத வேதம் மரபுகள் என்பது நம் மதமாகின்றது நம் பக்தி இலக்கியமாகியது நம்முடைய கோயிலாகியது இந்த வரலாறு தான் நான் அங்கே சுட்டி காட்டியது ஆகையினாலே இது ஒரு சிறிய கூட்டம் இதனால் இது செய்ய முடியுமா என்ற உங்கள் ஐயத்திற்கு நான் இதை பதிலாக சொல்ல விரும்புகிறேன்

கிறித்துவ வரலாறு சார்ந்து நடந்த சமூக மாற்றங்கள் பற்றி நான் குறிப்பிட்டது. மேலோட்டமாக நான் சொல்லி இருக்கிறேன் அதையும் நீங்கள் விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறீர்கள் ஒருவேளை நீங்கள் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட வரலாறோடு சேர்ந்து தமிழ்நாட்டு கிறித்துவ மத வரலாற்றை பேசுவது போல் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த மாவட்டங்களில் இருந்த கிருத்துவ மத வரலாறு என்பது வேறு. ஆனால் காலனி ஆட்சி வந்த பொழுது காலனி ஆட்சிக்குள் இரண்டு விஷயங்கள் இருந்தது அதை நாம் மறந்து விடக்கூடாது. ஒன்று பாதிரியார்கள் இன்னொரு பக்கம் காலனி ஆட்சியாளர்களாக வந்த கவர்னர் போன்ற பெரிய அதிகாரிகள். எடுத்துக்காட்டாக எல்லீஸ் போன்றவர்கள். இது மாதிரி வந்த கால்டுவெல் போன்றவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேட்டால் தமிழ் ஒடுக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் இவர்கள் எல்லோரையும் நம்முடைய புராண சமூகம், சனாதன சமூகம், பார்ப்பனிய சமூகம் படிக்கக் கூடாது நுழையக்கூடாது என்று உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பை முதன் முதலில் உடைத்து தூக்கிப் போட்டவர்கள் இந்த கிறித்துவ அதிகாரிகள்தான். இதற்கு நிறையச் சான்றுகள் உண்டு அதிலிருந்துதான் அந்த ஒடுக்கப்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெண்கள் படிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் படிக்கிறார்கள்.

இந்தப் படிப்பு என்பது வந்ததன் மூலமாக, வாசிப்பு என்பது வந்ததன் மூலமாக, இதழியல் என்பது வந்ததன் மூலமாக, புத்தகப்பதிப்பு என்று வந்ததன் மூலமாக நமக்கு கிடைத்த மிகப் பிரமாண்டமான வளர்ச்சி, அடிப்படையான வளர்ச்சி அந்தக் கற்றல்(லிட்டரசி). அதனை உருவாக்கிய தன்மை என்பது பெரிய புரட்சி. அதை யார் செய்தார்கள்? ஆங்கிலேயர்தான் செய்தார்கள். அப்படி அவர்கள் செய்ததன் மூலமாகத்தான் நமது ஆட்கள் சங்க இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள் தொல்காப்பியத்தைக் கண்டுபிடித்தார்கள் திருக்குறளைக் கண்டுபிடித்தார்கள். உங்களிடம் ஒரு சின்ன கேள்வி.. சுவடியிலிருந்த இந்த பிரதிகளை எல்லாம் 16 17 ஆம் நூற்றாண்டில் பௌத்தம் சமணம் ஆசிகம் சார்ந்த பதிவுகளை எல்லாம் நிறைய எரித்து விட்டார்கள். அவைகள் எல்லாம் இப்போது இல்லை. கொஞ்சம் இந்த பவுத்தம் சார்ந்த தொல்காப்பியம், சமணம் சார்ந்த சீவக சிந்தாமணி, சமணம் என்று சொல்லக்கூடிய திருக்குறளையும் இந்த சைவத்தைச் சார்ந்தவர்கள் வைத்துக் கொளுத்தி இருந்தால், உங்கள் புறநானூற்று தமிழன் அகம் புறம் என்று சொல்லும் சங்க இலக்கியங்கள் தமிழ் என்று என்னென்னவெல்லாம் பேசுகிறோமே அவற்றை எல்லாம் எங்கிருந்து நாம் பேசி இருப்போம். இவை அச்சுக்கருவி கண்டுபிடித்து அதனை அச்சிட்டு நமக்கு கொடுத்த அந்த மரபில் அந்த வெள்ளைக்காரன் செய்த மரபில் வந்ததுதான். அதனைத் தாமோதரன் பிள்ளை அவர்களோ,

உ.வே.சாமிநாதய்யர் அவர்களோ,வையாபுரி பிள்ளை போன்றவர்களோ முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அந்தக் கட்டமைப்பில்,கல்வி மறுமலர்ச்சியில், அச்சிட்டு மறுமலர்ச்சி செய்ததில் கிறித்துவத்திற்கு மிகப்பெரிய தொடர்பு உண்டு. ஒரு பாதிரியாராக போப்பாண்டவராக ஒரு பெண் வர முடியுமா என்று நீங்கள் கேட்டீர்கள் நியாயமான கேள்விதான். நம்மூரில் மட்டும், நமது ஊரில் கோயில் பூசாரிகளாக நமது பெண்கள் வந்துவிட முடியுமா? எங்கேயாவது இருக்கிறார்களா? பெரிய பெரிய கோயில்களில் பெண்களை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? இது உலகம் தழுவியது. ஆண்கள் என்ற வெறியின் ஊடாக ஆண் அதிகாரம் என்ற வெறியின் ஊடாக பெண்களை ஒதுக்குதல் என்பது ஒரு சமூக வரலாறு. அதற்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன அந்த வரலாற்றின் ஊடாக பெண் அடிமை என்பது உலகம் தழுவிய விசயமாக இருக்கிறது அது கிறித்துவத்துக்குள்ளும் இருக்கிறது ஆனால் இதற்கு மாறாக சனாதனத்துக்குள் இந்துமதக் கொள்கைக்குள் கிறித்துவத்தை விட கொடுமைப்படுத்த கூடிய பெண் அடிமைத்தனம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

14ஆம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு வரை ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தார்கள். உங்களுக்குத் தெரியும் புவியீர்ப்பு விசை சார்ந்து, மின்சாரம் சார்ந்து, அணு உட்கரு சார்ந்து, அணு உடைத்தல் சார்ந்து நூற்றுக்கணக்கான புதிய புதிய கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையை அப்படியே சுற்றி தலைகீழாக மாற்றியது .ஊடகம் புதிதாக உருவாகியது,இது எல்லாம் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இதை நமக்குக் கொடுக்கிறார்கள். காலனியர்கள் நமது நன்மைக்காகக் கொடுத்தார்கள் என்று நான் சொல்லவில்லை. கொள்ளையடிப்பதற்காகத்தான் கொடுத்தார்கள். ஆனாலும் அதன்மூலம் நமக்கு ரோடு கிடைத்தது நமக்கு ட்ரெயின் கிடைத்தது நமக்குப் பள்ளிக்கூடம் கிடைத்தது இதை எல்லாம், கிடைத்த இந்த நன்மையை நாம் எப்படி பார்ப்பது?, இந்த வளர்ச்சியை எப்படிப் பார்ப்பது, இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த இந்துத்துவாவாதிகள் அந்தப் பிரித்தானியர்களைப் பார்க்கிற பார்வையில் நாம் பார்க்க முடியுமா என்பது தான் என்னுடைய கேள்வி. அந்தப் பின்புலத்தில்தான் நான் இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன்

இலங்கை மலேசியா சென்றவர்களுக்கு சமூக நீதி கிடைத்தது என்று எழுதியிருப்பது பற்றிச்சொன்னீர்கள். இது ரொம்ப விவரித்து எழுத வேண்டிய விஷயம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் இவர்களெல்லாம் வெள்ளைக்காரன் கூப்பிட்டவுடன் எதற்காக கிளம்பிப் போனார்கள் இந்த ஊரில் அவர்களுக்கு குடியிருக்கும் மனை கிடையாது. இந்த ஊரில் அவர்கள் தீண்டப்படாதவர்கள். ஊரில் செருப்பு போட்டு வர முடியாது. வண்டியில் வர முடியாது .துண்டு போட முடியாது. இதெல்லாம் 1970 வரை நானே நேரில் கண்டது இன்றைக்கு மட்டும் என்ன மாறிவிட்டது? இன்னும் இரட்டைக்குவளை இருக்கிறது குடிக்கும் தண்ணீரில் மலம் அள்ளி போடுவது இருக்கிறது. இந்த ஒதுக்கப்பட்ட மக்கள் ஆப்பிரிக்கக் காடுகளுக்கும் சிலோன் காடுகளுக்கும் மலேசிய பர்மா காடுகளுக்கும் போனதன் மூலமாக இந்த அடிமைத்தனத்திலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்தது ஆனால் அங்கே போய் அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்களா என்பது வேறு கேள்வி. ஆனால் இந்த அடிமைத்தனத்திலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை ஆனார்கள் அவர்களுக்கு உடை கிடைத்தது சாப்பாடு கிடைத்தது இங்கு சாப்பாடு கூட கிடையாது நாம் அப்படித்தான் அந்த சமூக வரலாற்றை பார்க்க வேண்டி இருக்கிறது சமூக நிகழ்வுகளில் என்ன மாதிரியான பாசிட்டிவ் விஷயங்கள் வந்தன அதற்குள் என்ன நெகட்டிவான விஷயங்கள் இருந்தன என்ற ஒட்டுமொத்த பார்வையோடு நாம் அந்த சமூக வரலாற்று போக்கை ,இயக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்

சின்ன சின்ன எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொண்டு நாம் பார்க்கக்கூடாது. தமிழில் ஒரு நல்ல பழமொழி உண்டு. எடுத்துக்காட்டுகள் எல்லாம் சொத்தையானவை என்று. அதேபோல இரண்டு கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டு சில சில நிகழ்வுகளையும் நாம் ஒரு எடுகோலாகக் கொண்டு அதை ஒரு சமூக வரலாற்று நிகழ்வு என்ற கண்ணோட்டத்தில் நாம் வாசிப்பது, பேசுவது என்பது எல்லாம் அந்த வரலாற்று பார்வையாக அமைய முடியுமா என்பது எனது கேள்வி. 3500 ஆண்டுகள் கால தமிழ் சமூக வரலாற்றில் முதல் ஆயிரம் ஆண்டுகள் என்பது தனி. அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இன்னொன்று ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து நமக்கு ஏற்பட்டது ஒரு மிகப்பெரிய மாற்றம். எழுச்சி அது. 20 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது இந்த தொடர்ச்சிக்குள் என்ன விஷயங்கள் என்பது முக்கியம். இந்த மண்ணில் ஒரு தாடிக் கிழவர் புதிய புதிய வார்த்தைகளை கண்டுபிடித்தார் அதுதான் சுயமரியாதை. அந்தக் காலத்தில் வேறு யாரும் அதைப் பற்றி பேசியதாக எனக்கு தெரியவில்லை.

அந்த சுயமரியாதை வேண்டுமென்றால் நீ ஜாதி தளையிலிருந்து வெளியில் வா. சுயமரியாதை வேண்டுமென்றால் பெண்களே உங்கள் கருவறை கதவைச் சாத்துங்கள் நீங்க என்ன சமைச்சு போடுவதற்காகவா, அவனுக்காகவா நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இல்லை. நீ அதை எல்லாம் தூக்கி போட்டு வந்து படி. சுதந்திரமாக வாழ கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம் முக்கியமில்லை, உன்னுடைய சுயமரியாதைதான் முக்கியம் என்று சொன்ன இந்தக் கிழவருடைய சுயமரியாதை தமிழ் சமூக நீதியில் மிக முக்கியமானது சோசியல் எத்திக்ஸ் இன் தமிழ் என்று எடுத்துக்கொண்டால் அது ஒரு பெரிய விஷயம் .அதற்கு சாதகமாக இருந்த பெரியவர்கள் தமிழில் திரு.வி.க, வ.உ.சி, என்று தமிழ் சமூக நீதிக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது 19ம் நூற்றாண்டில் உலகம் தழுவி உருவான மார்க்சியம் என்று சொல்லக்கூடிய உழைப்பு சம்பந்தப்பட்ட கோட்பாடு வளர்ச்சி அடைந்து தனி மனிதனுடைய சுயமரியாதை சார்ந்த பண்பில் உருவாகக்கூடிய இந்த சோசியல் ஜஸ்டிஸ் என்று சொல்லக்கூடிய சமூக நீதி உருவாக்கத்தில் தமிழ் சமூகத்திற்கு பெரிய பங்களிப்பு உண்டு அதன் விளைவாக பெரிய மாற்றங்களை நாம் கண்டிருக்கிறோம் அதில் ஒரு சிறிய பகுதி தான் இந்த இட ஒதுக்கீடு.

இந்தத் தன்மைகள் எல்லாவற்றையும் கடவுள் மறுப்பு, ராமாயண எதிர்ப்பு, மூடநம்பிக்கை அழிப்பு இவை எல்லாம் இந்த சமூக நீதிக்குள் இருந்து உருவாகக்கூடிய ஒரு விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு ஏற்புரையாற்றினார்.

நிறைவாக ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் அவர்கள் "இந்த ஆய்வுக் கூட்டமே ஒரு உரையாடலை முன்னெடுத்துச் சென்றுள்ளது. ஆய்வாளருக்கும் எழுத்தாளருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நாம் வேண்டுவது இந்த உரையாடலைத்தான். "என்று குறிப்பிட்டு கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.

கலந்துரையாடலில் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் "இன்று ஒரு அருமையான நிகழ்ச்சி. கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்ற அளவிலே முக்கியமான கருத்துக்கள். தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு என்பதும் சமூகநீதி என்பதும் மனித நேயத்தின் அடிப்படையில்தான்.அதைச் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த சமூக நீதி எவ்வளவு முக்கியம், அதன் வரலாறு என்ன? என்பதை எல்லாம் சிறப்பாக ஆராய்ச்சி செய்வதற்கு மிக்க நன்றி. அய்யா ராஜன் பாபு அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள் ஒரு சின்ன குழு வந்து ஒரு பெரிய குழுவிடம் எப்படி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற கேள்வி மிக முக்கியமான கேள்வி. அதைப் புரிந்து கொண்டாலே நமக்கு சமூக நீதி விளங்கி விடும். பெரிய தமிழ் அறிஞர்கள் இருந்த இடத்திலே தமிழில் மூன்று எழுத்துக்கள் தவிர மீதியெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்துதான் வந்தது என்று வெளிப்படையாக ஒருவர் சொல்லி அதை தமிழ் அறிஞர்கள் மறுக்க முடியாத நிலையில் இருந்தார்கள் என்பது தான் வரலாறு. கால்டுவெல்லும் தேவநேயப்பாவாணரும் இல்லாமல் இருந்திருந்தால் அப்படியே ஆக்கி இருப்பார்கள். உங்களுடைய தாத்தா, உங்களுடைய பெற்றோருடைய திருமணப் பத்திரிக்கையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ் எங்கே சென்றது என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ளலாம் ஆகவே நமக்கு மந்திரமும் புரியாத மந்திரம். எப்படி அலெக்சாண்டர் வந்து சூபிடர் என்னும் கடவுளிடமிருந்து எனக்கு பவர் வருகிறது என்று சொன்னாரோ அது மாதிரி மந்திரத்தால், மந்திரத்திற்குக் கடவுளே கட்டுப்பட்டவர் என்ற கொள்கையை மன்னர்களிடம் செலுத்தி மக்களை முட்டாள்கள் ஆக்கியது தான் ஆரிய பண்பாடு அதை நாம் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரியார் சொல்வதெல்லாம் 'நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் சிந்தித்து உங்களுக்கு சரியெனப் பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று தான் சொன்னார். பேரா.அரசு அய்யா அவர்கள் மிகச் சிறப்பாக சொல்லிவிட்டார்கள் நீங்கள் இன்று வந்து கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் அருமை உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறோம் அதே நேரத்தில் மக்கள் சிந்தித்து அவரவர் முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்திய துரைக்கண்ணன் அவர்களுக்கும் இளமாறன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து முனைவர் வா.நேரு,மருத்துவர் சரோஜா இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் தனது கருத்துரையில் "நிகழ்வு மிகச்சிறப்பாக இருந்தது நான் பெண்கள் நோக்கில் பார்க்கிறேன் வெள்ளைக்காரர்கள்தான் நிறைய மருத்துவமனைகளை ஆரம்பித்தார்கள் நாங்கள் பிறந்தது எல்லாம் அந்த மருத்துவமனையில்தான்.அந்தக் காலத்தில் பிள்ளை பிறப்பு என்பது செத்துப்பிழைப்பது. இந்த மருத்துவமனைகள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நாங்கள் எல்லாம் கூட இருந்திருக்க மாட்டோம் அதை நினைத்து நான் மிக நன்றியாக இருக்கிறேன்.மருத்துவம் மட்டுமல்ல, கல்வி, போக்குவரத்தையும் அவர்கள் கொடுத்தார்கள். அது தவிர இந்த மார்புச் சேலைப்போராட்டம். பெண்கள் மார்பை மூடக்கூடாது என்று வந்த பொழுது அந்தப் பெண்களுக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா? ஒருத்தரும் இல்லை.ஒரு ஆங்கிலேயருடைய மனைவி, சட்டை எல்லாம் தைத்துக் கொடுத்து இதைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அதற்குப் பெரிய எதிர்ப்பு எல்லாம் வந்தாலும் அந்தப் பெண்களுக்கு உதவி செய்தார்கள். இதற்கு மேலே ஒரு பெண் தன்னுடைய மார்பகத்தை அறுத்துக் கொண்டு இந்தக் கொடுமை நீங்குவதற்காகப் போராடினார் இவர்கள் எல்லாம் வரவில்லை என்றால் அந்த மாதிரி செயல்கள் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கும்.

ஜாதியைப் பற்றி இந்த ஆட்கள் வெள்ளையர்களிடம் என்னதான் காதைக் கடித்தாலும் அவர்கள் நம்பாமல் எல்லா மக்களும் சமம் என்றுதான் அடித்துச் சொன்னார்கள் அதில் கொஞ்சமாவது மக்கள் அப்போது மாறினார்கள். அப்புறம் பெரியார் அய்யா வந்தார். இதையெல்லாம் நினைத்து பார்த்து நான் மிக்க நன்றியோடு தான் இருக்கிறேன். அவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்? சேர,சோழ மன்னர்கள் போல இருந்திருந்தால் பார்ப்பனர்கள் சொல்லைக் கேட்டுக் கொண்டு நடந்திருப்பார்கள் நாம் எல்லாம் அழிந்து போய் இருப்போம் நாம் நன்றியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மிகச்சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆய்வுரைக்கு, ஏற்புரைக்கு முன்னும் பின்னும்,உரையாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் உரைகளுக்குப்பின் அவர்களின் உரைகளிலிருந்து மிக முக்கியமான கருத்துக்களை குறிப்பிட்டு மிகச்சிறப்பாக இந்தத் திராவிடப்பொழில் இதழ் ஆய்வரங்கை ஒருங்கிணைத்த துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.