English

View in English

செய்தி மற்றும் அறிவிப்புகள்

திராவிடப் பொழில்: சென்ற இதழின் ஆய்வரங்கம்


ஏப்ரல் - சூன் 2023

பெரியார் பன்னாடு அமைப்பு ,அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் 10வது இதழின் ஆய்வுக் கூட்டம் இணைய வழி சூம் மூலமாக 24.06.2023 மாலை 7.30 மணி இந்திய நேரப்படி நடந்தது. “உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்களே,பல்துறை வல்லுநர்களே,ஆளுமைகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.இன்று நாம் திராவிடப் பொழில் இதழ் ஆய்வு நடத்துகின்றோம்.திராவிடப்பொழில் இதழ் நம் பண்பாட்டை,சிறப்புகளை எடுத்துரைக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் மூன்று மாதத்திற்கொருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இதுவரை 10 இதழ்கள் வந்துள்ளன.அதில் என்னென்ன பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை இரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள் எடுத்டுரைப்பார்கள்” என்று அறிமுக உரை நிகழ்த்தி நிகழ்வினைத் தொடக்கி வைத்தார் பெரியார் பன்னாட்டு மையம் அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.

தொடர்ந்து பேரா.இரவிசங்கர் கண்ணபிரான் அவர்கள் இரண்டரை ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் திராவிடப்பொழில் இதழ்களின் கட்டுரைகளை பரத்தீடு(சிலைடு) வழியாக சிறப்பாக விளக்கினார்(தனியாக இணைக்கப்பட்டுள்ளது)

திராவிடப்பொழில் 10வது இதழில் 5 கட்டுரைகள் வந்துள்ளன. அதில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் இரண்டு கட்டுரைகளைப் பற்றி மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டார்.இன்றைக்கு அமெரிக்காவிலே ஒரு மதுரை இருக்கிறது.அந்த அமெரிக்க மதுரைதான் அட்லாண்டா. திராவிட இயக்க எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,சிந்தனையாளர்கள் நிறையப் பேர் அட்லாண்டாவில் உள்ளனர் அட்லாண்டாக்காரர்கள் மதுரை தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.அங்கு மதுரையிலிருந்து வந்த ஜெயகாந்த் இருக்கிறார்..திரு.ஜெயகாந்த அவர்கள் இன,மொழி பரப்புரை செய்து வருபவர்.அவரை இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ,உங்கள் அனைவர் சார்பிலும் திராவிடப்பொழில் இதழ் ஆசிரியர் குழு சார்பிலும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திட அழைத்தார்.

ஜெயகாந்த் அவர்கள் தொடக்க உரை ஆற்றிய இரவிசங்கர் கண்ணபிரான் அவர்களுக்கும் .பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.திராவிடப்பொழில்,பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா இணைந்து நடத்தும் இதழ் பகுப்பாய்வு நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.இந்த நிகழ்வில் முதலாவதாக பேரா.நாகநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை ஆய்வு செய்ய மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களை அழைக்கின்றேன் என்று அழைத்து அவர் உரையாற்றுவதற்கு முன் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் பற்றி அவைக்கு அறிமுகப்படுத்தினார்.

மருத்துவர் சரோஜா அம்மா அவர்கள் 1973-ல் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றவர்.1974-ல் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களைத் திருமணம் செய்து கொண்டவர்.அமெரிக்காவிற்கு அதன் மூலம் வந்தடைந்தவர்.1976-ல் சிக்காகோ இல்லினாஸ் பல்கலைக்கழகத்தில் நோய் ஆராய்ச்சி சிறப்பு பட்டப்படிப்பு படித்து 80-ல் பட்டம் பெற்றவர். 91 முதல் 2000வரை மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.தந்தை பெரியார்,திராவிடர் இயக்க கொள்கைகளில் அம்மா ஈடுபாடு கொண்டவர்.2002-லிருந்து மருத்துவப்பணியில் இருந்து ஓய்வு பெற்று இணையர் மற்றும் மகளிரிடன் இணைந்து பெரியார் கருத்துகளை பரப்புவதில் பகிர்ந்து கொள்வதில் மன நிறைவு கொள்பவர்.அவர்களை ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அழைக்கிறேன் என்று அறிமுகப்படுத்தி உரையாற்ற அழைத்தார்.

மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள்:

“ தமிழ் நாட்டிலிருக்கும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த முதல் தலைமுறைப் பெண் பட்டதாரி என்ற முறையில் மனித நேயம் மற்றும் சமூக நீதித் தத்துவத்தின் கதாநாயகர்கள் ,தந்தை பெரியார் பற்றியும் பகத்சிங் பற்றியும் பேசுவதற்காகக் கிடைத்த இந்த வாய்ப்பிற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பிற்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஊட்டக்கூடிய அருமையான கட்டுரையைக் கொடுத்தற்காக பேரா. நாகநாதன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.எனக்கு பகத்சிங்கைப் பற்றியும் ஏன் தந்தை பெரியாரைப் பற்றியும் நான் வளர்ந்து வரும் காலத்தில் நிறையத் தெரியாது. பேரா. நாகநாதன் அவர்களின் கட்டுரையின் மூலமாக இருவரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு அருமையான அடைமொழியை பேரா. நாகநாதன் அவர்கள் கொடுத்துள்ளார்கள்.’எப்போதும் அதிர்வைத் தரக் கூடிய புரட்சியாளர்(Ever Vibrant Revolutionary) எனக் கூறியுள்ளார்.பகத்சிங் அவர்களைப் பற்றிச்சொல்லும்போது ‘எப்போதும் நினைக்கப்படும் புரட்சியாளர்(Ever Remembered Revolutionary) என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த அடைமொழிகள் மிக நன்றாக உள்ளன.அதற்காகப் பேரா. நாகநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன்.இந்தக் கட்டுரையில் சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் ஈடுபாடு,காந்தியோடு பெரியாருக்கு இருந்த தொடர்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு,பகத்சிங்கைப் பற்றிய அவரின் கருத்து,அதைப்போல பகத்சிங்கைன் வாழ்க்கை பற்றிய சிறுகுறிப்பு,அவரின் ஈடுபாடு,அவரின் வீரம் செறிந்த போராட்டம்,தியாகம் பற்றியெல்லாம் அறிய முடிகிறது.

புரட்சிகரமான தலைவர்கள் காரல் மார்க்ஸ்,மார்க் டுவெய்ன் போன்ற பலரின் மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தந்தை பெரியார் பற்றிய பல புள்ளிவிவரங்களை,தகவல்களை இந்தக் கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் கொடுத்துள்ளார்.

பெரியார் ஒருவர்தான் பாரம்பரியமான மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தினார்.இந்தியாவின் வெகுமக்கள் மனதில் ஆழப்பதிந்து கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றப்பாடுபட்டார்..அவர் ஒருவர்தான் மாற்றங்களை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட தலைவர்.தந்தை பெரியார் 1973-ல் மறைந்த போது அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தனது புகழுரையில் “ பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்புவதில் வெற்றி கண்டவர்,புராண மூட நம்பிக்கைகளை அகற்றப்பாடுபட்டவர்” என்று குறிப்பிட்டார் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.இந்து மத நூல்களின் தத்துவமும் ,சிலைகளும் ஏற்றத்தாழ்வுள்ள அமைப்பைப் போதிக்கின்றன.சாதி அடிப்படையிலான சமூகத்தை,வர்க்கத்தை அவை நியாயப்படுத்துகின்றன.அதுதான் வருணாஸ்ர தர்மம்.இது கொடுமையானது,மனிதத் தன்மையற்றது, அநீதியானது கருத்தளவிலும் நடைமுறையிலும்.வருணாசிரம முறையிலான சாதியமைப்பு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.காரல் மார்க்ஸ் மார்க் டுவெய்ன் போன்ற அறிஞர்கள் இந்தியாவைப் பற்றியும்,.இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

1853ல் இந்தியாவைப் பற்றியும் தென் இந்தியாவைப் பற்றியும் காரல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார் என்பதை கட்டுரை ஆசிரியர் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சோதிடம்,கைரேகை,போன்ற நம்பிக்கைகள்,திருமணத்திற்கு ஜோதிடம் பார்ப்பது போன்ற நம்பிக்கைகள்.இவற்றையெல்லாம் தந்தை பெரியார் எதிர்ந்து சவால் விடுத்து வெற்றிகண்டார். ‘உலகத்து மக்கள் போல திராவிட இனத்து மக்களையும் உயர்த்துவதே தன் நோக்கம் ‘ என்று தந்தை பெரியார் அறிவித்தார்.சுயமரியாதையோடும் அறிவோடும் வாழ்வதற்கான வழியைக் காட்டினார்.’இதனைச்செய்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதோ,இல்லையோ,இந்த வேலையைச்செய்ய வேறு யாரும் முன்வராததால் தான் செயவதாகப்[‘ பெரியார் குறிப்பிட்டார்.

பெரியாருக்கும் காந்திக்குமான உறவு இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.அதைப்போல வைக்கம் போராட்டம் ,அன்னை நாகம்மையாரும்,கண்ணம்மாவும் கலந்து கொண்டது,அந்தப் போராட்டம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.சாதி அமைப்பை உடைக்கும் போராட்டத்தில் மிக முக்கியமான போராட்டம் இந்த வைக்கம் போராட்டமாகும்.1927ல் தீண்டாமைக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு முன்னோடியாக அமைந்த போராட்டம் வைக்கம் போராட்டமாகும்.

தந்தை பெரியாரைப் பற்றியும் மற்ற புரட்சிகரமான தலைவர்களைப் பற்றியும்,1926-ல் தொடங்கப்பட்ட குடி அரசு இதழில் வெளியான தனித்துவமான சிந்தனைகள் பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது.காரல் மார்க்ஸ் பற்றியும் தோழர் லெனின் பற்றியும் குடி அரசு கட்டுரைகள் வெளியிட்டது.தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கரோடும்,முஸ்லிம் தலைவர் ஜின்னாவோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதைப்பற்றி ஜனவரி 1,குடி அரசு இதழில் ‘எனது பம்பாய் பயணம் ‘என்னும் தலைப்பில் கட்டுரையை பெரியார் எழுதி இருக்கின்றார் போன்ற செய்திகள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன.

பகத்சிங் அவர்களைப் பற்றிய பெரியாரின் கருத்துகள் இந்தியாவில் இன்றைக்கும் பொருத்தப்பாட்டுடையதாக இருக்கிறது.பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைப் பற்றி காந்தி ஏதும் பேசாமல் மெளனமாக இருந்துவிட்டார்.ஜின்னா ஆங்கில அரசின் அடக்குமுறை குறித்து எழுதினார்.காந்தியின் அமைதியைப் பெரியார் கண்டித்து எழுதியதோடு ஆங்கில அரசாங்கத்தை நையாண்டி செய்து கண்டித்து கடுமையாக எழுதினார்.பகத்சிங்கின் எழுத்துகளை தந்தை பெரியார் பதிப்பித்து பரப்பினார்.பக்த்சிங்கிற்கு பொதுவுடமை இந்தியாவில் வரவேண்டும் என்னும் விருப்பம் இருந்தது என்பதை கட்டுரையில் சுட்டுகின்றார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களும் பகத்சிங் அவர்களின் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதை இந்தக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார் பகத் சிங் அவர்கள் பகுத்தறிவையும் சோசலிசத்தையும் நேசித்தவர் என்பதில் எந்தவிதமான அய்யமும் இல்லை பெரியாரும் பகத்சிங்கும் தங்கள் கொள்கை ஈடுபாட்டை தங்கள் இறுதி மூச்சு வரை கடைப்பிடித்தவர்கள் அவர்களின் உழைப்பின் நோக்கம் எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதாகும் பேராசிரியர் நாகநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி இப்படி ஒரு அருமையான கட்டுரை கொடுத்ததற்காக . எனச் சொல்லி தனது பகுத்தாய்வு உரையை முடித்தார்

கட்டுரையாசிரியர் பேராசிரியர் நாகநாதன் அவர்களை அவைக்கு அறிமுகப்படுத்தி ஏற்புரை நிகழ்த்துமாறு ஒருங்கிணைப்பாளர் அழைத்தார்.

பேராசிரியர் மு நாகநாதன் அவர்கள் “திராவிடப்பொழில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் பெருமைக்குரிய மருத்துவர் டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள் என்னைத் தொடர்ந்து வலியுறுத்தி கட்டுரையை எழுதச் செய்தார் இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு சிறப்பான ஆய்வுரையை நிகழ்த்திய மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு நாடாக இருந்தாலும் நாடு அமைதியாக இருப்பதற்கு சமூகத்தில் அமைதி தேவை சமூக அமைதி இல்லாத நாடு எந்த ஒரு வளர்ச்சியும் பெற முடியாது இந்தியாவை எடுத்துக் கொண்டால் நாங்கள் உலகத்தின் வளர்ச்சியில் மூன்றாவது இடம் வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார் நம் பிரதமர் .அவர் சொல்லும் சில கருத்துக்களை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் ஆனால் மணிப்பூரிலே பற்றி எரிகிறது மணிப்பூரிலே பற்றி எரிகிறது என்றால் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே ஒரு பெரிய போராக வெடித்து உள்நாட்டு, ஒரு சிவில் வார் போல் நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கும் கூட அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒன்றிய அரசானது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் அளவிற்கு இந்த பிரச்சனையானது முற்றிப் போய் இருக்கிறது அதற்குக் காரணம் என்னவென்றால் டைவர்சிட்டி இன் யூனிட்டி என்பதுதான் நான் எப்போதும் சொல்வேன் யூனிட்டி இன் டைவர்சிட்டி என்பதைவிட .இந்தியாவைப் பொறுத்த அளவில் டைவர்சிட்டி இன் யூனிட்டி என்பதுதான் தேவை.ஏனென்றால் கிழக்கு இந்தியாவில் இருந்து பல மாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் படிப்பதற்கு நிறைய வந்திருக்கிறார்கள். குறிப்பாக மணிப்பூரில் இருந்து நிறையப் பெண்கள் முதுகலை பொருளாதாரம் என்னிடம் பயின்று இருக்கிறார்கள் அதனால் அவர்களுடைய உணர்வை எல்லாம் நான் நன்றாக அறிவேன் . அந்த மணிப்பூர் மாணவிகள் மிக நன்றாகப் படிப்பவர்கள் நல்ல தெளிந்த சிந்தனையோடு எதையும் அணுகக்கூடியவர்கள். ஆனால் வெளி உலகத்துக்காரர்கள் அவர்கள் ஏதோ பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள்,அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பார்கள் இல்லை, அந்தப் பழங்குடியினத்திலே மிக உயர்ந்த படிப்பு படித்தவர்களும் இருக்கிறார்கள் இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் தமிழ்நாட்டில் ஒன்றில்தான் இந்த அமைதியான சூழ்நிலை என்பது தொடர்ந்து இருக்கிறது, சமூக அமைதி இருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் பஞ்சாபில் கூட பல இடங்களில் ஒரு அமைதியின்மை இன்றைக்கு நிலவுகிறது பகத்சிங் தோன்றிய பஞ்சாப் வேறு. அன்றைக்கு பஞ்சாப் ஒன்றாக இருந்தது இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பஞ்சாப்,பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் என்று பிரிந்து இருக்கிறது.

பாகிஸ்தான் பகுதியில் பகத்சிங்கிற்கு ஒரு நினைவிடம் வைத்திருக்கிறார்கள் .இதில் பெரியாரைப் போன்று ஒரு புரட்சியாளர் பகத்சிங் என்று சொல்வதற்கு காரணம் பாகிஸ்தானில் பகத்சிங்கிற்கு சிலை இருக்கிறது பாகிஸ்தானின் மத நம்பிக்கையின் அடிப்படையில் சிலை வைக்க கூடாது ஆனால் பகத்சிங்குக்கு அங்கு சிலை இருக்கிறது.வருடந்தோறும் நடக்கும் பகத்சிங் ஆண்டு விழாவில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்கிறார்கள் அப்படி என்றால் நாம் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும் எந்த நாட்டிலும் புரட்சி கூறுகளை விதைத்தவர்கள் சாவதில்லை அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் பகத்சிங்கிற்கு ஒரு பூங்கா இருக்கிறது, நினைவிடம் இருக்கிறது அவரைப் போற்றுகிறார்கள் என்றால் அதுதான் அவர் விதைத்த புரட்சி இன்றைக்கும் இருக்கிறது அதனால அந்த தலைப்பை நான் கொடுத்தேன் ‘எப்பொழுதும் நினைக்கப்படும் புரட்சியாளர்’ பகத் சிங் என்று.பாகிஸ்தானிலும் பகத்சிங்கை நினைக்கிறார்கள் இந்தியாவில் நாமும் அவரை நினைக்கிறோம்

பகத்சிங்கை ஏன் போற்றுகிறோம் என்றால் பெரியாருக்கும் பகத்சிங்கிற்க்கும் ஒரு அடிப்படையான ஒற்றுமையான கருத்து  இருக்கிறது. அவரும் மூட நம்பிக்கையை எதிர்த்தவர் இன்னும் சொல்லப்போனால் பகத்சிங் ஒரு சீக்கிய மதத்தை பின்பற்றக்கூடிய குடும்பத்தில் பிறந்தாலும் பகத்சிங் சீக்கிய மதத்தைத் துறந்தவர் பகத்சிங் இளம் வயதில் இறந்து விட்டார் ஆனால் அவரின் ஆங்கிலம், அவரின் கருத்துக்கள் அற்புதமானது . அவரின் நூல்களில் ஒவ்வொரு வரியிலும் பகுத்தறிவைத்தான் வலியுறுத்துகிறார்

பகுத்தறிவை வலியுறுத்தியதால்தான் அந்தப் பகுத்தறிவின் உச்சத்திற்கு போய் ‘ நான் ஏன் நாத்திகன்?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதினார். அந்த நூலை எழுதும்போது பகத்சிங் சிறையில் இருக்கிறார் அவர் பட்ட சித்திரவதை வேறு யாரும் பெற்று இருக்க முடியாது அந்த அளவிற்கு சித்தரவதையை அனுபவித்தவர் பகத்சிங்.அதனால்தான் ஜின்னா அவர்கள் ‘எந்த ஒரு மனசாட்சி உள்ள நீதிபதியும் பகத்சிங்கிற்கு கொடுத்த தண்டனையை ஒத்துக் கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டார் ஏனென்றால் ஜின்னா அவர்கள் பகத்சிங்கை உணர்ந்து இருக்கிறார் பகத்சிங் கருத்தை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவரின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறார் தென்னாட்டில் பகத்சிங்கை உணர்ந்து வெளிப்படுத்தி அவரை வெளியே கொண்டுவந்தவர் தந்தை பெரியார் ஒருவர் தான். நேதாஜி கூட பகத்சிங் மறைந்த பிறகு பல சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார் நேருவைப் பார்த்துக் கூட கேள்வி கேட்கிறார் நேதாஜி. ‘பகத்சிங் கொல்லப்பட்ட பிறகு நடந்த அட்டூழியங்களை பார்த்து அமைதியாக இருக்கிறீர்களே நேரு’ என்று நேதாஜி கேட்டார் ‘நீங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள்,இது சரியா’ என்று நேதாஜி கேட்டார் அப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெரியார் அமைதியாக இல்லை. காந்தி அமைதியாக இருந்தார்,ஆனால் பெரியார் இல்லை. ஏனென்றால் அவர்தான் பெரியார். உலகத்தில் எந்த இடத்தில் ஒரு புரட்சியாளர் பாதிக்கப்பட்டாலும் அதை இன்னொரு புரட்சியாளரால் பொறுத்துக் கொள்ள முடியாது அதுமட்டுமல்ல அந்தக் காலகட்டத்திலேயே பகத்சிங்கை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர், முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார்.

வரலாற்றில் பெரியாரின் பயணம் என்பது நீண்ட நெடிய பயணம் காங்கிரஸில் உழைத்திருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். நீதி கட்சியில் அப்புறம் திராவிடர் கழகத்தில் இப்படி தந்து நீண்ட பொதுவாழ்வுப் பயணத்தில் இருக்கிற பொழுது கலைஞர் உள்ளிட்ட அத்தனை முதலமைச்சர்களையும் பெரியார் பார்த்திருக்கிறார் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூரரைப் பாராட்டி இருக்கிறார் ஓமந்தூராரை விமர்சனம் செய்திருக்கிறார் ராஜாஜியைப் பாராட்டி இருக்கிறார். ராஜாஜியை விமர்சனம் செய்திருக்கிறார் 1952 இல் ராஜாஜி விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சட்டம் கொண்டு வந்த போது பெரியார் அந்தச் சட்டத்தை ஆதரித்தார் அப்போது பொதுவுடமை இயக்க தலைவராக இருந்த பி.இராமமூர்த்தி கூட ‘ பார்த்தீர்களா,பெரியார் அவருடைய நண்பர் ராஜாஜியோடு சேர்ந்து விட்டார்’ என்று கூட ஒரு அறிக்கை விடுகிறார் ஆனால் ராஜாஜி 1954ல் குலக்கல்வி கொண்டு வந்த போது பெரியார் மிகக் கடுமையாக எதிர்க்கிறார் போராட்டக் களத்தில் நிற்கிறார் வெற்றியும் பெறுகிறார் காமராஜர் முதலமைச்சராகிறார்எந்தக் கொள்கைக்காக காங்கிரஸ் விட்டு வெளியே வந்தாரோ அந்தக் கொள்கை காமராஜரால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை வந்தபோது காமராஜரை ஆதரிக்கிறார் இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால் பெரியார் தனது நீண்ட நெடிய பயணத்தில் புரட்சியாளர்களையும் பார்த்திருக்கிறார் மிதவாதிகளையும் பார்த்திருக்கிறார் தீவிரவாதிகளையும் பார்த்திருக்கிறார்.

ஆனால் யாராக இருந்தாலும் பெரியார் ஒரே ஒரு அளவுகோலைப் பின்பற்றி இருக்கிறார். சமுதாய ஒட்டு மொத்த நலனுக்காக யார் தங்களுடைய வாழ்நாளை அர்ப்பணிக்கிறார்களோ, யார் தங்களுடைய வாழ்நாளில் பல அளப்பரிய தியாகங்களை புரிகிறார்களோ அவர்களை பெரியார் ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறார்.ஆதரித்திருக்கிறார். பெரியார் ஒரு அமைதியான வழியில், எழுத்து வழியில், பேச்சு வழியில் தொடர்ந்து பணியாற்றி வந்ததனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு அமைதி நிலவுகிறது ஏனென்றால் பஞ்சாப்பில் அமைதி இல்லை காந்தி பிறந்த மண் என்று சொல்லக்கூடிய குஜராத்தில் கூட கலவரம் கோத்ரா கொடுமைகள்.. 1950-ல் தமிழ்நாட்டில் முதுகளத்தூரில் கூட ஒரு கலவரம் நடந்தது பெரியார் காமராஜரிடம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுங்கள், காவல்துறையை வைத்து அமைதியை கொண்டு வாருங்கள் என்று சொன்னார் இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் பெரியார் சமூகத்தில் சமத்துவம் வேண்டும் என்று போராடினார். எல்லோரும் சமமானவர்கள் என்னும் கொள்கைக்கு ஒரு வடிவமாகவே பெரியார் இருந்தார் அவர் கொடுத்த வடிவத்திற்கு பெரியார் ஈக்குவாலிட்டி, பெரியார் சமத்துவம் என்றுதான் நான் சொல்ல முடியும் அவர் கொடுத்த சமத்துவம் கட்சி சார்பற்றது, அரசியல் சார்பற்றது. அறிவுத்தளத்தில் இருந்து பார்த்தால் அது புதுமையானது பொதுமையானது. .

தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு பங்களிப்பை பெரியார் கொடுத்தார் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.ஏனென்றால் அவரின் பங்களிப்பு உலகம் முழுவதும்இன்றைக்குப் பரவுகிறது,தேவைப்படுகிறது. அதனால்தான் உலக அளவில் பெரியார் பேசப்படுகிறார். ஏனென்றால் இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி, இணைய வளர்ச்சி அதன் மூலமாக பெரியாரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது எனவேதான் பெரியார் ஒரு புரட்சியாளர், பகத்சிங் ஒரு புரட்சியாளர். உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து புரட்சியாளர்களையும் தமிழ் நாட்டிற்கு அறிமுகப்படுத்தி , இணைத்து, திராவிட இயக்க நெறியில் வளர்த்து, தமிழ்நாட்டில் ஒரு சமத்துவ சமுதாயம் காண அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார் இந்தக் கட்டுரையை பெரியாரின் அந்த நோக்கத்தை விளக்கும் வகையில் எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பேரா.நாகநாதனின் அவர்களின் ஏற்புரைக்குப் பின் முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்ட்ம சமூக நீதிக்கான ஒரு வரலாற்று திருப்புமுனை’ என்னும் கட்டுரையை திறனாய்வு செய்வதற்காக முனைவர் பாரதிராணி அவர்களை அவைக்கு அறிமுகப்படுத்தி அவரை உரையாற்ற ஒருங்கிணைப்பாளர் அழைத்தார்.

முனைவர் பாரதிராணிஅவர்கள் தனது உரையில் ‘வைக்கம் போராட்டம் சமூக நீதிக்கான ஒரு வரலாற்று திருப்புமுனை’ கட்டுரையாசிரியர் முனைவர் தேமொழி அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர் 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்பவர். ஜோதி என்ற தன் பெயரை தேன்மொழி என்று மாற்றிக் கொண்டவர் நிர்வாக இயலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர்.இணையதளத்தில் தொடர்ந்து எழுதுபவர். இதுவரை 13 நூல்களை, மொழிபெயர்ப்பு நூல்களாக, அறிவியல் கட்டுரைகள் நூலாக, சிறுகதைத்ட் தொகுப்பாக, கவிதைத்தொகுப்பு நூல்களாக வெளியிட்டுள்ளார் என்று கட்டுரை ஆசிரியரை அறிமுகப்படுத்தினார்.

கட்டுரையின் சுருக்கம் இதுதான்.கற்று அறிந்தவர்கள் நிலமான கேரளா, கடவுள்களின் நிலம் என்று சொல்லப்படும் கேரளா சென்ற நூற்றாண்டில் வைதீக அடக்கு முறையின் களமாக இருந்தது என்பதனை முன்வைத்து இந்தக் கட்டுரையை முன்னெடுக்கின்றார் முனைவர் தேமொழி.கட்டுரையில் ஆசிரியர் 1892ல் சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரம் வருகின்றார் கேரளாவில் இருக்கின்றார். அங்கு நடந்த மனிதத் தன்மையற்ற செயல்களைக் கண்டு ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று பதிவு செய்திருப்பதை கட்டுரையாளர் பதிவு செய்திருக்கின்றார் கடவுளின் நிலம் என்று சொல்லப்படும் கேரளா ஏன் பைத்தியக்காரர்களின் விடுதியாக விவேகானந்தருக்கு தோன்றியது என்பதற்கான விடையினை இந்தக் கட்டுரை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது என்று குறிப்பிட்டு வைக்கம் போராட்டம் பற்றி முனைவர் தேமொழி விளக்கி எழுதியிருப்பதை விரிவாக அவையில் எடுத்துவைத்தார்.

“கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரிலிருந்த மகாதேவர் கோயிலைச்சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள்,ஈழவர்கள்,தீயர்கள்,புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த தடையை நீக்க ,சென்ற நூற்றாண்டில் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது “ என்று இந்தக் கட்டுரையைத் தேமொழி தொடங்கியிருக்கின்றார்.’ஓருறிவு,ஈருறிவு ..’ என்னும் தொல்காப்பிய சிந்தனையை நம் கண் முன்னே விவரித்து செல்கின்றார் கட்டுரையாசிரியர்.ஆறறிவு உள்ள மனிதர்கள் நடக்கத்தடை,மற்றபடி ஐந்து அறிவு உள்ள நாய்,பூனை,மாடு போண்ற விலங்குகள் நடப்பதற்குத் தடை இல்லை என்பதைக் கட்டுரை ஆசிரியர் சுட்டுகின்றார்.தடை விதித்தது திருவாங்கூர் சமஸ்தானம்.தீண்டாமைக்கு எதிராக நடந்த இந்தப்போராட்டம் ,சென்ற நூற்றாண்டில் இந்திய வரலாற்றுப்புகழ் மிக்க ஒரு போராட்டம்.இப்போராட்டம் 1924 மார்ச் 30 முதல் 1925 நவம்பர் 23-தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது.இடையில் இப்போராட்டம் தொய்வடைந்த நிலையில் கேரள போராட்டக் குழுவினரின் அழைப்பை ஏற்று வைக்கம் போராட்டத்தில் இந்தச் சமூகத்தின் விடிவெள்ளியாக இருக்கக்கூடிய,ஒளிச்சுடராக இருக்கும் பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் அங்கே கலந்து கொள்கின்றார்.இந்தப் போராட்டத்தில் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியாரின் பங்களிப்பு என்பது அளப்பரிய பங்களிப்பு என்பது இந்தக் கட்டுரையில் காட்டப்படுகிறது.

போராட்ட வரலாறு என்று குறிப்பிட்டு வைக்கம் போராட்ட வரலாற்றை மிகச்சுருக்கமாக ,ஆனால் இவருடைய எழுத்துகள் ஒவ்வொன்றும் விழுதுகளாய் இறங்கி நிற்கின்றன என்று சொன்னால் மிகையில்லை என்று சொல்லும் அளவிற்கு விவரிக்கின்றார்.வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை பழ.அதியமான் அவர்களின் ‘வைக்கம் போராட்டம் ‘புத்தகத்தில் இருந்து ஆதாரங்களாக எடுத்துக்கொடுத்திருக்கின்றார்.வைக்கம் போராட்டத்தில் காந்தி என்னும் தலைப்பிலும் சில கருத்துகளைக் கட்டுரையாளர் கொடுத்திருக்கின்றார்..

முடிவில் ‘வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பெரும் பங்களிப்பை அண்டை மாநிலமான கேரள அரசே உறுதிப்படுத்தி உள்ளது.இந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டில் ,பெரியாரின் தொண்டினை எண்ணிப்பார்த்துப் போற்றுவோம் ‘என்று கட்டுரை ஆசிரியர் முடித்திருக்கின்றார்.சிறப்பான கட்டுரை எனச்சொல்லித் தன் உரையை முனைவர் பாரதிராணி அவர்கள் முடித்தார்.

தொடர்ந்து பேரா.பாரதிராணி அவர்களின் உரைக்கு நன்றி தெரிவித்து,கட்டுரை ஆசிரியர் முனைவர் தேமொழி அவர்களை அறிமுகப்படுத்தி அவரை ஏற்புரை நிகழ்த்த வருமாறு ஒருங்கிணைப்பாளர் அழைத்தார்.

முனைவர் தேமொழி தனது ஏற்புரையில் இந்த நிகழ்வில் தன்னைப் பேச வாய்ப்பளித்த பெரியார் பன்னாட்டு அமைப்பிற்கும் அதன் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும்,அதைப்போலத் தனது கட்டுரையைத் திராவிடப்பொழில் இதழில் வெளியிட்ட திராவிடப்பொழில் ஆசிரியர் குழுவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.கட்டுரையை மேம்படுத்த சில கருத்துரைகளை வழங்கிய ஆசிரியர் குழுவில் இருக்கும் திரு.கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.சிறப்பான ஆய்வுரையை வழங்கி கட்டுரையை அறிமுகப்படுத்திய பேரா.முனைவர் ஆ.பாரதிராணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.இந்தக் கட்டுரை எனக்கு மிகப்பிடித்த கட்டுரை.குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் இந்த வைக்கம் போராட்டம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன என்பதை உணரவேண்டும்.தந்தை பெரியார் அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் அவர் சமத்துவத்திற்கு முக்கியம் கொடுத்து இந்த வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.வைக்கம் போராட்டமே கோவில் இருக்கும் தெருவில் மக்கள் நடப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என நடந்த போராட்டம்.கடவுள் நம்பிக்கை இல்லாத தந்தை பெரியார் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு,மக்களுக்கு உதவி,மக்களுக்கு சமத்துவம் வேண்டும் என்பதற்காக இன்னல்பட்டார் என்பது இந்தப்போராட்டத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.தந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கை மக்களுக்கு சமத்துவம் கிடைக்கவேண்டும் என்பதாகும்.தனக்கு ஒத்து வராத கொள்கையாக இருந்தாலும் ,அந்தக் கொள்கைக்காகப் போராடி மக்களுக்கு உதவியது நாம் பாரட்டவேண்டிய மிகப்பெரும் செயலாகும்.அந்த இடத்தில்தான் யார் ஒருவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.தந்தை பெரியாருடைய முக்கியத்துவம் அந்த இடத்தில் மக்களின் சமத்துவம் என்று தெரிகிறது.இன்று கூட நிறையப் பேர் தமிழ்,தமிழ் என்று பேசுவார்கள்.ஆனால் சமயம் என்று வருகின்றபோது தமிழைக் கைவிட்டுவிட்டு சமயத்திற்கு போய்விடுவார்கள்.அந்த இடத்தில் நமக்குத் தெளிவாகத் தெரியும்,அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தாய்மொழிக்கா?அவர்களின் சமயத்திற்கா? என்று பார்க்கும்போது அவர்கள் சமயத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியும்.அதுதான் அளவுகோல்.

இந்த இடத்தில் நாம் பார்க்கின்றபோது பெரியார் அவர்களின் அளவுகோல் சமத்துவம்.அவருடைய கொள்கை என்பதைக் கூட தனியாக வைத்துவிட்டு,மக்களுக்கு சமத்துவம் வேண்டும் என்பதற்காகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் கவனிக்கவேண்டியஒன்று என்று நான் கருதுகிறேன்.வைக்கம் போராட்டம் என்பது மிக முக்கியமானது ஏனென்றால் இந்திய வரலாற்றில் இது போன்ற பல சமத்துவத்துக்கான போராட்டத்திற்கு இதுதான் தொடக்கம்.அதுமட்டுமல்ல அரசியல் திருப்புமுனையைக் கொண்டு வந்த போராட்டம் இது.ஏனென்றால் தந்தை பெரியார் அவர்களுக்கு இந்தப் போராட்டத்தின் மூலம் தெளிவாகப் புரிந்தது. மக்களுக்கு நன்மைதர தேசவிடுதலைக்காகப் போராடி வெற்றி பெற முடியாது.காங்கிரசு கட்சியில் உள்ளவர்கள் அந்த நோக்கத்தில் இல்லை என்பது,அதாவது மக்களின் சமத்துவத்தை அவர்கள் இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறுவதற்கும் இந்த வைக்கம் அனுபவம் கைகொடுத்திருக்கிறது.1925-ம் ஆண்டு பல திருப்புமுனைகளை இந்தியா சந்தித்தது.1925-ல்தான் இடதுசாரி,வலதுசாரி அமைப்புகள் இந்தியாவில் தோன்றியது..அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் போராட்டத்தைத் தொடங்கினார்.இப்படி காங்கிரசு மக்களுக்கு உதவாது என்பதைப் புரிந்து கொண்டு தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததும் 1925-ஆம் ஆண்டுதான். அந்த நேரத்தில் இந்தியாவில் இரண்டு வகையாகப் பிரிந்துகொண்டார்கள்.காங்கிரசுக் கட்சியினர் ,நாங்கள் சுதந்திரம் வாங்கிய உடன்,நொடியில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம்,மக்கள் எல்லோருக்கும் சமத்துவம் கொண்டுவந்துவிடுபோம் என்றார்கள்.விடுதலை கிடைத்தால் நமக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்பதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்தார்கள்.ஆனால் பெரியார் மக்களுக்கு சமத்துவம் கிடைத்தபின் வெள்ளையர்களை எளிதில் வெளியேற்றிவிடலாம் என்று சொன்னார்.தந்தை பெரியார் சொன்னது போல்தான் நடந்தது.விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டது,யாருக்கும் எந்த சமத்துவமும் கிடைக்காமல் கொலைகளும்,தற்கொலைகளும் ,கலவரங்களும்தான் நடந்து கொண்டிருக்கின்றன.தற்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம் தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தொலை நோக்கோடு ,இந்திய மக்களின் அடிமை நிலையைப் புரிந்துவைத்திருந்தார் என்பதாகும்.

பெரியார் திரைப்படத்தில் வைக்கம் போராட்டம் மிகச்சுருக்கமாக,கொஞ்சமாக வரும்.இந்த வைக்கம் நூற்றாண்டை ஒட்டி,வைக்கம் போராட்டம் ஒரு குறும்படமாகவாது வரவேண்டும்.வைக்கம் போராட்ட நிகழ்ச்சி முழுவதையும் எடுக்க வேண்டும்.அப்படி எடுத்து வெளியிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.கேரளத்தில் தொடங்கிய போராட்டம் இது.மலையாளத்தில் முதலில் எடுக்கப்பட்டு,பின்பு தமிழில் வந்தால் கூட மிகச்சிறப்பாக இருக்கும்.கேரள மக்களின் அடிமைத்தளையை அகற்றுவதற்கு நிகழ்ந்த போராட்டம் இது.இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.இந்தக் காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு செய்தியைச்சொல்வதற்கு திரைப்படம்,குறும்படம் வழியாகச்சொன்னால் எளிதில் புரிகிறது.ஆகவே வைக்கம் போராட்டம் குறித்து திரைப்படம் அல்லது குறும்படம் வந்தால் கூட நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.இந்தப்போராட்டத்தில் எனக்கு மிகப்பிடித்த மற்றொன்று,போராட்டம் என்று வந்து விட்டால் அது நண்பர்கள் என்றாலும் பார்க்கக்கூடாது,எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்கள் அரச நிலையில் இருந்தாலும் எதிர்க்கத் துணிய வேண்டும் என்பது.இப்படி ஒரு கொள்கைப்பிடிப்புடன் பெரியார் அவர்கள் செய்த இந்த வைக்கம் போராட்டம்,இந்த நூற்றாண்டில் நாம் அதை நினைவு கூர்ந்து,நினைவு கூர்ந்து விளக்கவேண்டியது மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இறுதியில் நிகழ்வினை ஒருங்கிணைத்த ஜெயகாந்த் அவர்கள் ஏற்புரையைப் பாரட்டிப் பேசினார்.அடுத்ததாக கட்டுரை குறித்தும்,நிகழ்வில் சொல்லப்பட்ட கருத்துகள் குறித்தும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது.அதில் பேரா.அரசு செல்லையா ,பேரா.சோம.வேலாயுதம்,மருத்துவர் சரோஜா இளங்கோவன் ,முனைவர்.வா.நேரு,பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கனடாவைச்சேர்ந்த ஆசிப்,ஹைதராபாத் பிரபாவதி ராஜீ ஆகியோர் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.அதற்குக் கட்டுரையாளர்கள் பதில் அளித்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்த அவர்கள் நிகழ்வினை முடித்துவைத்தார்.