English

View in English

செய்தி மற்றும் அறிவிப்புகள்

‘திராவிடப் பொழில்’ ஆய்விதழ் - ஆய்வரங்கம்


Feb 01, 2021

துவக்க விழா:

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வெளியீடாக மலரும் ’திராவிடப் பொழில்’ – காலாண்டு ஆய்விதழின், முதலாம் இதழ், தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளுமான தைப் பொங்கல் நாளையொட்டி, 2021 சனவரி 16 அன்று வெளியிடப் பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா. முனைவர். வேதகிரி சண்முகசுந்தரம், ஆய்விதழினை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினார்.

  • தமிழ்நாட்டிலிருந்து பேரா. முனைவர் மறைமலை இலக்குவனார்
  • ஜெர்மனியிலிருந்து பேரா. முனைவர் உல்ரிக் நிக்லஸ்
  • சிங்கப்பூரிலிருந்து பேரா. முனைவர். சுப.திண்ணப்பன்
  • அமெரிக்காவிலிருந்து பேரா. முனைவர். வாசு. ரெங்கநாதன்
  • இங்கிலாந்திலிருந்து ஆய்வறிஞர். கார்த்திக் ராம் மனோகரன்

ஆகியோர் ஆய்விதழைக் காணொலி மூலம் பெற்றுக் கொண்டார்கள். வேந்தர் டாக்டர். கி.வீரமணி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். திராவிடப் பொழில் ஆய்விதழின் சிறப்பாசிரியர், பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், பிரான்சிலிருந்து வரவேற்புரையாற்றினார். முனைவர் வா.நேரு நன்றி கூறினார்.

திராவிடப் பொழில் ஆய்விதழ் - அச்சு இதழாகவும் / இணைய இதழாகவும் - இருவழிக் கல்விச் சாலையில், உலகெங்கும் பரவியது. குறிப்பாகப் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சென்றடைந்தது. பேராசிரியர்கள் மற்றும் சான்றோர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் போன்ற நன்னயங்களில், திராவிடம் சார்ந்து, ஆழமான கல்விப் புல ஆராய்ச்சியை, அனைவருக்கும் கொணர்வதே ஆய்விதழ் நோக்கம். உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), உலகக் கல்வியாளர்களை, திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்குதிரட்டி, இளநிலை ஆய்வாளர்களையும், இளநிலைப் பெண் ஆய்வாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களையும், ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ் ஊக்குவிக்கும். காலாண்டு தோறும், பன்மொழி உள்ளீடுகளோடு, வெளிவரும்.

ஆய்வரங்கம்:

ஆய்விதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்குள், ஆய்வரங்கம் நடைபெற்றது. 2021 பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரம்) அரங்கம் தொடங்கிற்று. அமெரிக்காவின் புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகப் பெரும் பேராசிரியர் முனைவர். சாச்சா ஈபெலிங் (Dr. Sascha Ebeling) வாழ்த்துரையில், ‘International in scope and with high scholarly ambitions, this new Journal – Dravida Pozhil will be welcomed and read with great interest, by Tamil scholars around the world’ என்று மொழிந்துள்ளது நினைவுகூரப்பட்டது.

பெரியார் பன்னாட்டு மய்யத் தலைவர், மருத்துவர் சோம. இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தோற்றம் குறித்தும், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யச் செயல்பாடுகள் குறித்தும், ஆய்விதழ்களின் வரலாறு குறித்தும், தகவல்களைத் தொகுத்தளித்தார். வேந்தர் கி.வீரமணியின் வாழ்த்துரையே, ஓர் ஆய்வுக்கட்டுரை போல் மலர்ந்திருப்பதையும், அறிஞர் அவ்வை நடராசன், ”திராவிடப் பொழில் இதழ், காலத்துக்கு வேண்டிய கைவாள்” என்று பகன்றதையும், பேரா. மறைமலை இலக்குவனார், ”அறிஞர் அனைவரும் ஆய்வுரை வழங்குக” என்று வேண்டியதையும், மேனாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் வழங்கிய ஆய்வு வரிகளையும் நினைவூட்டினார்.

முதலாம் இதழில் வெளிவந்த 6 ஆய்வுக்கட்டுரைகளின் மீதான திறனாய்வு தொடங்கிற்று.

  • பேரா. முனைவர். இரா.அறவேந்தன் எழுதிய, ‘நூற்றாண்டுக்கு முந்தைய சைவ சபையில் திராவிடமும் ஆரியமும்’ ஆய்வுக் கட்டுரையை - தோழர் இளங்கோ மெய்யப்பன் அவர்களும்,
  • பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் எழுதிய ’Dravidian Canvas in Sanga Tamil’ ஆய்வுக் கட்டுரையை – முனைவர். இர.பிரபாகரன் அவர்களும்,
  • Dr. மாத்வி பொட்லூரி எழுதிய, ‘Quest to breaking the Caste Barriers in India and across the world – Can DNA Testing help?’ கட்டுரையை – பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களும்,
  • பேரா. முனைவர். பெ.ஜெகதீசன் எழுதிய ‘British and European Sankritist Scholars and the Foundations of Indian Culture and Society’ கட்டுரையை – பேரா. முனைவர். வாசு. ரெங்கநாதன் அவர்களும்,
  • பேரா. முனைவர். ப.காளிமுத்து எழுதிய ‘தமிழ்நாடும் தந்தை பெரியாரும்’ கட்டுரையை - தோழர் ஜெயா மாறன் அவர்களும்,
  • முனைவர் வா.நேரு எழுதிய, ‘திராவிட இயக்கமும், ’கருப்பின உயிர்களும் உயிர்களே’ இயக்கமும்’ கட்டுரையை - முனைவர் சொ. சங்கரபாண்டி அவர்களும் திறனாய்வு செய்து உரையாற்றினார்கள்.

தோழர் அறிவுப்பொன்னி இணைப்புரையை நேர்த்தியுடன் வழங்கினார். தோழர் பழ.சேரலாதன் சுருக்கமான நன்றியுரையை உணர்வுமிக நல்கினார்.

நூற்றாண்டுக்கு முந்தைய சைவ சபையில் திராவிடமும் ஆரியமும்:

தில்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர். இரா. அறவேந்தன் எழுதிய இக்கட்டுரையை, தோழர் இளங்கோ மெய்யப்பன் திறனாய்வு செய்து கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

உலகில் உள்ள இயக்கங்கள், மூன்று செயல்பாட்டு முறைகளைக் கடைபிடிக்கின்றன. 1. தன் அடையாளத்தை அறிதல் 2. அறிவித்தல் 3. தக்க வைத்தல். 19ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டையில் இருந்த சைவசபையின் திராவிடப் பங்களிப்பு என்ன? என்பதே இக்கட்டுரையின் பொருண்மை. ஆரியர்கள் மனுவைப் பயன்படுத்தி, திராவிடர்களை இழிபெயரிட்டு அழைப்பதையும், திருக்குறளானது எப்படி மனுஸ்மிருதிக்கு எதிரானது என்பதையும் ஆய்வுக்கட்டுரை ஆழநோக்குகிறது.

தமிழர் சூத்திரர் இல்லை என்பதற்கு வி.பி.சுப்பிரமணிய (முதலியார்) கூறும் மூன்று கோணங்கள். 1. இழித்துப் பேசுவோர் படைப்புகளிலிருந்து இழிக்கப்படுவோருக்கானத் தரவுகளைத் திரட்டுதல் தவறு 2. நடைமுறை வாழ்வியல் வழியே சொற்களுக்கான பொருளை அடையாளப்படுத்த வேண்டும் 3. இழிவை மறுதலித்து உண்மை அடையாளத்தை இனங்காண வேண்டும் - என்பன இக்கட்டுரை நல்கும் நுட்பம்.

ஜாதி/மதம் செயற்கையானது; மொழி/இனம் இயற்கையானது; தமிழர்கள் மனுநீதியை ஏற்றால் இழிவு தான் வரும். திருக்குறள் வழி அடையாளப்படுத்திக் கொண்டால், சமதர்ம மனநிலைக்கு உரியவர் ஆவார்கள். எனவே தங்களைச் சைவ சமயம் என்று கருதிக் கொள்வோர், சற்றே மதம் கடந்து, யார் ஆரியத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறார்களோ, தங்களுடைய மதமாக இல்லாவிட்டாலும், அவர்களின் ஆரிய எதிர்ப்பு முயற்சிக்குத் துணைநிற்றலே, பாளையங்கோட்டை சைவசபை, நமக்கு 19ஆம் நூற்றாண்டில் உணர்த்திய பாடம்! இதுவே இந்தக் கட்டுரையின் அடிநாதம்” என்று உரையாற்றினார்.

Dravidian Canvas in Sanga Tamil (சங்கத் தமிழில் திராவிடக் கருத்தியல்):

பிரான்சு, பாரீசு பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் எழுதிய இக் கட்டுரையை, அமெரிக்க முனைவர். இர.பிரபாகரன் திறனாய்வு செய்து, கீழுள்ள புள்ளிகளை வைத்தார்.

நாம் மொழியால் தமிழர்கள்; இனத்தால் திராவிடர்கள்; நம்முடைய தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவை, பிற இனத்தவர்கள் - அதிலும் குறிப்பாக ஆரியர்களுடைய மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் இவற்றிலிருந்து வேறுபட்டதே!

நம்முடைய நாகரிகம் திராவிட நாகரிகம். அந்த நாகரிகம், சிந்து சமவெளியிலிருந்து கீழடி வரை, இந்தியத் துணைக்கண்டம் முழுதுமே தொன்மைக் காலத்தில் பரவியிருந்தது. ஆனால், கடந்த பல நூற்றாண்டுகளில், ஆரியர்களின் பண்பாட்டு ஆதிக்கத்தால் நாம் அடிமைப்படுத்தப்பட்டோம், தாழ்த்தப்பட்டோம். தமிழனின் தாழ்வுக்கு மூலகாரணம் அவனிடம் தன்மானம் மிகவும் குன்றிவிட்டது என்பதை உணர்ந்த பெரியார், அதை மீட்கச் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார்.

ஆரிய-திராவிடப் போராட்டம், இன்று நேற்றல்ல, சங்ககாலத்திலேயே இருந்தது தான் - என்பதே முனைவர். கண்ணபிரான் கட்டுரையின் மய்யக் கருத்து. அந்தச் சாயலைத் தான் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். சங்க இலக்கியத்தின் பல திராவிடக் கருத்தியல் கூறுகளை, இக்கட்டுரை மிகச் சிறப்பாக, ஒவ்வொரு புள்ளியாக ஆய்வு செய்கிறது.

1.சமூகநீதி, 2.சுயமரியாதை, 3.சமத்துவம், 4.பகுத்தறிவு, 5.மதச்சார்பின்மை, 6.பெண்ணியம், 7. பார்ப்பனீய எதிர்ப்பு - போன்ற இன்றைய திராவிட இயக்கச் சிந்தனைகள், அன்றே சங்க இலக்கியக் கவிதையாக மலர்ந்திருப்பதை, முனைவர். கண்ணபிரான் ஒவ்வொரு பாடலாக, பொருத்தமாகப் பொருத்திக் காட்டுவது சிறப்பானது. குறிப்பாக, கலித்தொகையில் வரும் தலைவியின் பார்ப்பனீய எதிர்ப்புக் காட்சிகள் மிக வியப்பானவை. பெண்களே இறைமறுப்பு பேசும் நற்றிணைப் பாடலும், அவ்வையாரின் சுயமரியாதையைப் பேசும் புறநானூற்றுப் பாடலும், சமூகநீதிக்குக் கல்வியே விடிவு என்று பேசும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடலும் கூர்ந்து நோக்கத்தக்கன.

கடைச்சங்க காலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறினாலும், பார்ப்பனர்களைப் புகழ்ந்து பேசும் பாடல்கள், பார்ப்பனர்களைக் கிண்டல் செய்யும் பாடல்கள் - இரண்டுமே சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. அரச அதிகாரம் மூலமாக, சங்ககாலத்தில் ஆரியர்களின் தாக்கம் ஓரளவிற்கு இருந்தாலும், பொதுச் சமூகத்தில் வாழ்ந்த தமிழர்கள், வேதம், வேதாந்தம், வருணாசிரம தர்மம் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளவே இல்லை. தமிழ் நாகரிகத்தின் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டார்கள். சங்ககாலத்திற்குப் பின் தான், தமிழர்கள் தனித்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினார்கள்”.

இந்த ஆய்வுக் கட்டுரையை விரிவுபடுத்தி ஒரு நூலாகவே இதைக் கொண்டு வரவேண்டும் என்று முனைவர். இர. பிரபாகரன் வேண்டுகோள் விடுக்க, கட்டுரையின் ஆசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், அவ்வண்ணமே செய்வதாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

Quest to breaking the Caste Barriers in India and across the world – Can DNA Testing help?

கனடா, தெற்காசிய மனிதநெறிக் கழகத்தின் மருத்துவர், மாத்வி பொட்லூரி எழுதிய கட்டுரையை, பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் திறனாய்வு செய்து, கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

இது அறிவியல் சார்ந்த கட்டுரை; அதிலும் குறிப்பாக மரபணுவியலைப் பற்றிச் செல்லும் கட்டுரை; இந்தியாவிலும் உலகிலும் ஜாதி/ நிற/ இன பேதங்கள் ஏற்படுத்தியுள்ள தடைகளை எப்படிக் கடந்து வருவது? என்றொரு சமூகநீதிக் கேள்வியை எழுப்பி, அதற்கு அறிவியல் மூலமான - DNA (தாயனை) ஆராய்ச்சி உதவி செய்யுமா? என்று இக் கட்டுரை ஆய்கிறது.

ஜாதிக்கான தரவுகளைத் தேடுகின்றவர்கள் பொதுவாக வரலாறு, மாந்தவியல், சமூக இயங்கியல் போன்ற துறைகளில் தான் முதலில் தேடுவார்கள். அறிவியல் பக்கம் அதிகம் செல்ல மாட்டார்கள். இந்தக் கட்டுரை அறிவியல் சார்ந்தது என்பதால், எந்தவொரு கருத்தியல் விருப்புவெறுப்பு இன்றிச் செல்கிறது.

1. உலகில், உயிர்களின் தோற்ற நிகழ்வு, 2. Evolution (படிமலர்ச்சி) விரிவடைந்த நிலை, 3. முதல் மனிதன் தோன்றிய கண்டம் ஆப்பிரிக்காவா? யூரேசியாவா? - இருவேறு கொள்கைகள், 4. எல்லா மனிதர்களும் ஒரு மரபணு (Gene) மூலத்திலிருந்து விரிவு பெற்றவர்களா?, 5. ’ஒரு தாய் மக்கள்’ என்று பேச்சு வழக்காகச் சொல்வதைக் கடந்து, Mitochondrial Eve (ஊன்குருத்து அன்னை) என்பவள் யார்? 6. Mitochondrial DNA mt-DNA (ஊன்குருத்துத் தாயனை), பெண்கள் மூலமாக மட்டுமே தொடர்ச்சியாக இனங்களுக்குப் பரவிடும் மரபணுவியல் - என்று பல தகவல்களைத் தொடுகிறது.

ஜாதி பேதம், செயற்கையானதே; இயற்கையானது அல்ல! என்பதை நிறுவ, பல ஜாதி/ பல ஊர்கள்/ பல சமூகப்படிநிலையில் உள்ள பெண்களை, ஒரு சோதனை முயற்சி மூலம் தேர்வு செய்து, அவர்களிடம் mt-DNA (ஊன்குருத்துத் தாயனை) சோதனைகள் செய்து, அத் தரவுகளோடு வெளிவரும் அறிவியல் ஆய்வை, பொதுமக்களிடையே நன்கு பரப்ப வேண்டும். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் இயக்கப் பரப்புரைகளோடு, அறிவியல் பரப்புரையும் செய்து, ஜாதி கொடுமையானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட என்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்று இக் கட்டுரை பரிந்துரைக்கிறது”.

கட்டுரையாளர் விரிவஞ்சிச் சொல்லாமல் விட்டுவிட்ட சில அறிவியல் செய்திகளையும் முனைவர். கண்ணபிரான் வெளிப்படுத்தினார்.

தமது பெர்கலி (Berkeley) பல்கலைக்கழகம் வெளியிட்ட உலக மக்கள் mtDNA பட்டியல், பன்னாட்டு Nature ஆய்விதழ் வெளியிட்ட ஆப்பிரிக்கப் புலம்பெயர்வுக்குப் பின்னான இனக்குழுக்களில் நிகழ்ந்த Mutation due to Genetic Variation (சடுதிமாற்றத்தால் விளைந்த மரபணுப் பிறழ்ச்சி), இன்று அறிவியல் காலத்திலும் ஜாதிக்கொடுமையால் தலித் மக்கள் படும் நடைமுறைத் துன்பங்கள் என்று பலவும் பட்டியலிட்டார். பிரம்மாவின் தலையிலிருந்து (முகம்) பிராமணர்களும், கால்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்ததாகப் புராணம் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளதைச் சற்றே திருத்தி, அது பிரம்மா அல்ல, பிரம்மம் (பரப் பிரம்மம், பரம புருஷன், மூலமான கடவுள்); இரண்டு சொல்லும் ஒன்றுபோல் இருப்பதால் விளைந்த பின்னாள் பெயர்க் குழப்பம், ரிக் வேதம் – புருஷ சூக்தம் (பிராஹ்மணோ அஸ்ய முகமாசீத், பத்ப்யாகம் சூத்திரோ அஜாயதே 10.90 1-13) என்ற ஸ்லோகம் தரவு காட்டி, திறனாய்வை நிறைவு செய்தார்.

British and European Sankritist Scholars and the Foundations of Indian Culture and Society:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், பேரா. முனைவர். பெ.ஜெகதீசன் அவர்களின் இக் கட்டுரையை, அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர். வாசு ரெங்கநாதன் திறனாய்வு செய்து, கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

18ஆம் நூற்றாண்டில் என்ன ஆய்வு நிகழ்ந்தது? அதன் வழியாக 19,20ஆம் நூற்றாண்டுகளில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நிகழ்ந்த ஆய்வுப் போக்கு மாற்றங்கள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது. 18-ஆம் நூற்றாண்டில் மொழி பற்றிய தெளிவான கொள்கை இல்லை. மொழிக்கு அறிவோடு உள்ள தொடர்பு, மொழிகளை ஒப்பிடுவதன் நோக்கம் - பற்றிய தெளிவான புரிதல் இல்லை. ஆசிய இராயல் சொசைட்டி ஏற்படுத்தப்பட்ட போதும் அதே நிலை தான்.

ஆங்கிலேயே அரசு முன்னெடுப்பு மூலமாக, வங்காளத்தில் தொடங்கி, ஜெர்மனுக்குப் பரப்பப்பட்டு, அதன் மூலமாகச் சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வது என்ற நிலை, அயலகங்களில், குறிப்பாக அய்ரோப்பாவில் ஏற்பட்டது. வில்லியம் ஜோன்ஸ், மேக்ஸ்முல்லர் போன்ற முன்னோடிகள் என்ன செய்தார்கள் என்பதைக் கட்டுரையாசிரியர் தெளிவுறுத்துகிறார். சமஸ்கிருதத்தைப் பற்றி நிறைய அறியாத நிலையில், அந்த மொழியை அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களோடு ஒப்பிட்டனர். அதன் மூலமாக, இந்தோ-அய்ரோப்பிய மொழிகள் என்று சமஸ்கிருதத்தையும் இணைத்தனர். வேதங்கள், புராணங்கள் என்று பலப்பல சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இவை யாவும் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி, 19ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இதன் மூலமாகச் சமஸ்கிருதத்தை ஓர் அறிவார்ந்த மொழி என்று கட்டமைத்தனர்.

இன்றும் கூட, பல அய்ரோப்பியப் பல்கலைக்கழகங்களில் - இங்கிலாந்து, ஜெர்மனி, பாரீஸ் - சமஸ்கிருத மொழி இருக்கைகள் இருக்கின்றன. இதே நேரத்தில், திராவிட மொழிக்குடும்ப மொழிகளின் மீதும் அய்ரோப்பிய அறிஞர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ செலுத்தவில்லை. கால்டுவெல் வந்த பிறகு தான், திராவிட மொழிகள் மீது கவனம் பரவுகிறது. அப்போதே பாரீஸ் போன்ற ஆய்விருக்கைகளில் தமிழ் இருந்தது. ஆனால் சமஸ்கிருதம் உயர்ந்தது என்னும் அந்நாள் கருதுகோளால், தமிழ் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனை மிக விரிவாகக் கட்டுரையாசிரியர் பேசுகிறார்.

இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுத்தவர். அதன் பின்னர் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியிலும், வேத காலத்திற்கு முந்தைய நாகரிகங்களைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் தான், திராவிட நாகரிகம் பற்றியும், திராவிடமொழிகள் பற்றியும் ஆங்கிலேயர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.

இக்கட்டுரையில் திராவிட மொழியாய்வு, பின்னர் எப்படியெல்லாம் வளர்ந்தது என்பதையும் கட்டுரையாசிரியர் இணைத்திருக்கலாம். கால்டுவெல், உ.வே.சாமிநாதர், கமில் சுவலெபில் போன்றவர்கள் திராவிட மொழிகள் குறித்த ஆராய்ச்சியில் நிறைய செய்திருக்கிறார்கள். அவற்றையும் கட்டுரையில் இணைத்திருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும். பின்னாளில் மூலத் தமிழ் மொழியிலிருந்து கன்னடம், மலையாள மொழிகளெல்லாம் எப்படிப் பிரிந்தன - என்பதற்கான ஆய்வுகளும் இன்று உள்ளன. அவற்றையும் இதில் இணைத்து, ஒரு முழு வடிவம் பெறுவது, மிகச் சிறப்பாக அமையும்”.

இக் கட்டுரையின் தொடர்ச்சியைப் பேரா. ஜெகதீசன் அடுத்த கட்டுரையில் எழுத வேண்டுமாறு பேரா. வாசு ரெங்கநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாடும், தந்தை பெரியாரும்:

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர், முனைவர் ப.காளிமுத்து அவர்களின் இக் கட்டுரையைத் தோழர். ஜெயா மாறன் திறனாய்வு செய்து, கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

தமிழ்நாடு என்ற சொல் இலக்கியத்தில் இருக்கிறதா? என்று கட்டுரையாசிரியர் ஓர் ஆய்வு வினாவோடு தொடங்கி, தொல்காப்பியத்தில் இல்லை; புறநானூறும் பதிற்றுப்பத்தும் ’தமிழகம்’ என்று தான் குறிக்கின்றன; சிலப்பதிகாரம் தான் முதலில் ’தமிழ்நாடு’ என்ற சொல்லை ஆள்கிறது என்று தரவுகளைப் பகிர்ந்து, பின்னர் தமிழ் மன்னர்கள் வீழ்ச்சியடைய, வேதியர் சூழ்ச்சியால் வேள்விகளும் மாட்சி பெற, இந்நிலத்தில் ஆரியர்களின் சமஸ்கிருதம், ஆட்சி பெறத் தொடங்கியது என்று இயம்புகிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று மொழியின் பெயரால் பேர் வைத்தது, மொழிப் பற்றினால் அல்ல. மாநில மறுசீரமைப்பால் வேறு வழியில்லாமல் ஏற்பட்ட விளைவே அது என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர், தன் கட்சியில் உள்ள பேரைக் கூட, மாநிலத்துக்குச் சூட்ட, காங்கிரஸ் என்னவெல்லாம் முரண்டு பிடித்தது என்ற வரலாற்றையும் பதிவு செய்கிறார்.

1927 முதல் தம் சொற்பொழிவுகளில் ‘தமிழ்நாடு – தமிழ்நாடு’ என்று பேசிவந்தவர் பெரியார். அவர் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்கள் யாவும், இது தமிழர்களின் நாடு, தமிழ்நாடு என்பதன் பாற்பட்டதே. பாரதியின் ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்ற வரிகளை கட்டுரையாளர் மறுப்பது, அவரின் பெரியாரியல் ஆய்வுப் புலமையைப் பறைசாற்றுகிறது.

1956இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ‘சென்னைநாடு’ என்று பெயர் கொடுக்கவும் ஒரு முயற்சி நடைபெற்றது. அப்போது அதை எதிர்த்துப் பெரியார் எழுப்பிய கொள்கை முழக்கம், அய்யா சங்கரலிங்கனாரின் உண்ணாநோன்பு, பூபேஷ் குப்தா, அறிஞர் அண்ணா போன்றோர் இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்நாடு முழக்கம், சட்டப் பேரவையில் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் – என்று அடுக்கடுக்கான செய்தித் தரவுகள், இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன”.

தோழர். ஜெயா மாறனின் உணர்ச்சி மிகு இனிய குரலில் அமைந்த உரையை, வேந்தர் கி.வீரமணி தம் நிறைவுரையில் பாராட்டினார்.

திராவிட இயக்கமும், ’கருப்பின உயிர்களும் உயிர்களே’ (Black Lives Matter) இயக்கமும்:

தமிழகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர், முனைவர் வா.நேரு அவர்களின் இக்கட்டுரையை, அமெரிக்க முனைவர். சொர்ணம் சங்கரபாண்டி அவர்கள் திறனாய்வு செய்து, கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

கறுப்பின மக்களின் வரலாறு, பின்புலம், கொடுமை அனுபவிப்பு, அக்கொடுமைகளை - கலை, இலக்கியம் என்று பலவகையான வழிகளில் வெளிக்கொணர்வு என்பதையெல்லாம், சான்றுகளோடு கொடுத்திருக்கிறார் இந்தக் கட்டுரையாசிரியர். போலவே, திராவிட இயக்கம் பற்றியும் வரலாற்றுத் தகவல்களைக் கூறி, இரண்டு எழுச்சிப் போராட்டங்கள் பற்றியும் செறிவான ஒப்பீடு செய்துள்ளார்.

’Black Lives Matter’ என்பதைக் ’கறுப்பின உயிர்களும் உயிர்களே’ என்று கட்டுரையாசிரியர் மொழி பெயர்த்துள்ளார். சிலர் இதனைக் ’கறுப்பர் உயிரும் உயிரே’, ’கறுப்பின உயிரும் பொருட்படுத்தத் தக்கதே’ என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளார்கள். எல்லாமே ஓரளவு பொருந்திவரும் மொழிபெயர்ப்புகள் தான். 17ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்காவிலிருந்து எப்படிக் கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக, அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டார்கள்; அமெரிக்க வெள்ளை நிற முதலாளிகள் அவர்களை எப்படி அடிமைப்படுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள்; பின்பு ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களால் ஏற்பட்ட சமூக மாற்றம் போன்றவற்றைக் கட்டுரை விரிவாகப் பேசுகின்றது.

கடந்த 50,60 ஆண்டுகளாகக் கறுப்பின மக்கள் மீது காட்டப்படும் வெறுப்பினில் அரசுக் கட்டமைப்பே எப்படி இனவெறி கொண்டதாக இருக்கிறது; அதற்கு எதிராகப் பொங்கியெழுந்த புதிய தலைமுறை, எப்படி இணையத்தைப் பயன்படுத்தி எழுச்சியைக் கொண்டு வந்திருக்கிறது; அது எப்படித் திராவிட இயக்கப் போராட்டத்தோடு ஒத்துப்போகிறது – என்பதையெல்லாம் அலசுகிறது இக்கட்டுரை.

இன்றைக்கும், இந்தியாவில் பார்ப்பனீயக் கட்டமைப்பாக உள்ள அரசு, எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, இங்கு கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளை இன அரசின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். 1865இல் அமெரிக்க அடிமைமுறை சட்டப்படி ஒழிக்கப்பட்டாலும், கறுப்பின மக்களைக் கீழாகக் கருதும் மனநிலை இன்றும் நிலவுகிறது. எல்லாத் துறைகளிலும் கறுப்பின மக்கள் அடித்தட்டு நிலையிலேயே இருக்குமாறு, வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டனர். இதே போல் 1947-ல் விடுதலை பெற்றாலும், 1950-ல் குடியரசு ஆனாலும், அனைவரும் சமம் என்று சட்டம் வரையறுத்தாலும், ஏற்கனவே எல்லாத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத மக்களை மேலே வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற இரு புலங்களும் ஒப்புநோக்கத் தக்கன. இதற்காக, எப்படி வைதீக இந்து சமயத்தையும், வடமொழிச் சடங்கியல் ஆதிக்கத்தையும், மக்கள் மீது திணித்தனர் என்பதையும் பதிவு செய்கிறார் கட்டுரையாசிரியர்.

ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அமெரிக்காவிற்கோ, கறுப்பின மக்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். இந்தியாவிலோ ஆதிகுடி மக்களையே அடிமைப்படுத்தினர். மத்திய ஆசியாவிலிருந்து வந்த பார்ப்பனர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த திராவிடர்களை / நாகர்களைத் தெற்கு நோக்கி நகர வைத்தார்கள். சிந்து சமவெளி-கீழடி ஆய்வுகள் விரிய விரிய, இன்னும் வரலாறு விரியும்” – என்று கட்டுரையின் புதுமையான ஒப்பீட்டைப் பாராட்டி, வேறுபாடுகளையும் சுட்டிக் காட்டிப் பாங்குறத் திறனாய்வு செய்தார், முனைவர். சங்கர பாண்டி அவர்கள்.

பல்கலைக்கழக வேந்தர், ஆசிரியர் கி.வீரமணியின் ஆய்வுத் தொகுப்புரை:

முத்தாய்ப்பாகத் ‘திராவிடப் பொழில்’ ஆய்விதழின் புரவலர், வேந்தர், டாக்டர். கி.வீரமணி அவர்கள், ஆய்வுத் தொகுப்புரை வழங்கி, ஆய்வரங்கைப் பாராட்டி, கீழுள்ள புள்ளிகளை முன்வைத்தார்.

ஆறு ஆய்வுக் கட்டுரைகளையும், ஆறு சான்றோர்கள், பல கோணங்களில், விருப்பு வெறுப்பின்றி, திறனாய்வு செய்த பாங்கு மிகச் சிறப்பாக அமைந்தது; கட்டுரை எழுதியவர்களே வியக்கும் வண்ணம் திறனாய்வாளர்களின் உரை அமைந்திருந்தது. ஆய்வுக் கட்டுரைகளின் சிறப்புகளைப் பாராட்டிய திறனாய்வாளர்கள், விடுபட்ட செய்திகளையும் சுட்டிக் காட்டியமை இன்னுஞ் சிறப்பு. இந்த ஆய்வரங்கம், ஆய்விதழின் முதல்முயற்சி. இது அடுத்தடுத்து தொடர வேண்டும். ஓர் ஆய்வுக் கட்டுரையைத் தாம் மட்டுமே வாசியாது, பிறருடன் பகிர்ந்து கலந்துரையாடும் போதே, ஆய்வு பொன்னென மின்னும்.

‘திராவிடப் பொழில்’ – திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரச்சார ஏடு அல்ல! உணர்ச்சி மயமான ஏடு அல்ல! அறிவு வயமான ஏடு! தரவு திகழ் ஆய்விதழ்!

DNA= தாயனை; RNA= ஆறனை; Evolution= படிமலர்ச்சி போன்ற தமிழ்ச்சொல் எல்லாம் இன்று பேரா. கண்ணபிரான் குறிப்பிட்டார். இதுநாள் வரை, ’பரிணாம’ வளர்ச்சி என்ற வடமொழி தான் பயன்படுத்தினோம்; இன்றுமுதல் ’படிமலர்ச்சி’ என்ற அழகிய அறிவியல் தமிழை நாம் பயன்படுத்தலாம்.

ஓர் ஆய்விலே, வழிமுறைகளும் இன்றியமையாதவை. தரவு திரட்டுவதற்குப் பயிற்சிக்களம் ஒன்றையும் நாம் அமைக்க வேண்டும். இதழுக்கு வாழ்த்துரை வழங்கும் போது கூட, என்ன தரவுகள், எங்கெங்கே கிடைக்கும் என்று சுட்டிக் காட்டினேன்; இப்போது ஆய்வுக்கான தரவுகள் நன்கு கிட்டுகின்றன; நாம் அவற்றை முறையாகத் தேடி நாட வேண்டும்; தொல்லியல், மொழிவளம், வரலாறு, பண்பாடு, இலக்கியம், கல்வெட்டு – என்று பலதரப்பட்ட விரிதரவுகளை நாடி, ஆய்வுக்கு உட்படுத்தி, ஆய்வை விரிவு செய்து, ஆய்வுக் கட்டுரை வடிக்க வேண்டும்.

‘திராவிடப் பொழில்’ முதல் இதழே மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உழைப்பே! சிறப்பாசிரியர், பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் இடையறா உழைப்பும், டாக்டர் சோம. இளங்கோவன், முனைவர் நேரு, முனைவர். நம் சீனிவாசன், பேரா. ஜெகதீசன், பேரா. காளிமுத்து உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் இணைப்பாக்கம்; இதழ் வடிவாக்கம் செய்த தோழர்கள் சரவணன், பிரின்சு, நாராயணன், இணைய வடிவாக்கம் செய்த தோழர்கள் முருகவேலன், அன்புராஜ் யாவருக்கும் நன்றி.

ஆய்வாளர்களின் உரைகளிலே, சில மேலதிகத் தகவல்களும் சொல்ல விழைகிறேன்.

டாக்டர். மாதவி பொட்லூரி கட்டுரை: நான்கு வர்ண, பிராமணன்-சத்திரியன்-வைசியன்-சூத்திரன் உண்டானது பிரம்மாவின் நெற்றி(வாய்)-தோள்-தொடை-கால் என்பது மனுஸ்மிருதி காட்டும் குறிப்பு. மாறாக, பேரா. கண்ணபிரான் இரவிசங்கர் குறிப்பிட்டது போல், பரம புருஷன் எனும் முழுமுதற் கடவுளின் முகம்-தோள்-தொடை-காலடி என்பது ரிக்வேதம்-புருஷசூக்தம் காட்டும் குறிப்பு. கால வரிசையில், ரிக் வேதமே முதல், பிறகு தான் மனு ஸ்மிருதி, அதன் பிறகு பகவத் கீதையிலும், நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் என்கிறார், விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் கிருஷ்ணன். இப்படி மூன்று வைதீக நூல்களுமே,பரம புருஷன்-பிரம்மா-கிருஷ்ணன் என்று மாற்றி மாற்றி, முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவதைக் கூட எவரேனும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

பேரா. காளிமுத்து கட்டுரை: அறிஞர் அண்ணா ’தமிழ்நாடு – Tamil Nadu’ என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்டும்போது, திரு. ராஜாஜி அவர்கள், ‘ஸ்வராஜ்யா’ இதழில் ’Dear Reader’ பகுதியில், ’Tamil Nad’ என்று எழுத வேண்டும்; ‘U’ போடக்கூடாது என்று ஒருவித விஷமத்துடன் குறிப்பிட்டிருப்பார். இது ஏதோ ஓர் எழுத்து மட்டுமல்ல; மாநிலத்தின் தமிழ்ப் பெயரை எப்படியாகிலும் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் வரலாற்றுப் பின்னணி தான் இதெல்லாம்.

முனைவர். சங்கரபாண்டி வழங்கிய முனைவர். நேரு கட்டுரை: ஆரிய–திராவிட வேறுபாடு என்பது ரத்தப் பரிசோதனை வேறுபாடு அல்ல; மொழி, இனம், பண்பாடு இவற்றின் வேறுபாடு என்று பெரியார் அன்றே தொலைநோக்கோடு சொன்னதை, இன்று அறிவியலும் உறுதி செய்கிறது.”

இவ்வாறு ஆசிரியர் கி. வீரமணி, தன் ஆய்வுப் பொருண்மைகளை வழங்கி, ஆய்வரங்கை நிறைவு செய்து வைத்தார். பலப்பல ஆய்வுத் தகவல்கள், புதிது புதிதாகத் தெரிந்து, தெளிந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் நிறைவோடு விடைபெற்றனர்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் – கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள்)

”இரண்டாம் இதழின் ஆய்வரங்கம் எப்போது நடைபெறும்?” என்ற ஏக்கத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி விட்டது; இது, திராவிடப் பொழில் - ஆய்விதழ் ஆய்வரங்கத்தின் சிறப்பான வெற்றியாகும்!