எழுத்தாளர் ஓவியா, சென்னை.
1930களில், தமிழகத்தில் முதல் தலைமுறை சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்ட சுயமரியாதைச் சுடரொளிகள் ச.வீ.க.முத்துசாமி - காந்தியம்மாள் அவர்களின் பேத்தி ஆவார் ஓவியா. தந்தையார் தமிழரசன் என்ற இராசாமணி, தி.மு.க.ப.க., அதன்பின் திராவிடர் கழகத்தில் பேச்சாளாராக, மாவட்டப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர்.
ஓவியா 13 வயதிலிருந்து மேடைப்பேச்சாளராக இருந்து வருகிறார். மகளிர் விடுதலை மன்றம், தமிழனப் பெண்கள் விடுதலை இயக்கம், தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம் ஆகிய அமைப்புகளை நடத்தியவர். ஏழாண்டுகள் நடத்தப்பட்ட புதிய குரல் இதழின் ஆசிரியர். புதிய குரல் என்னும் இயக்கத்தின் நிறுவனர். இது ஒரு கலாச்சார இயக்க, சிந்தனை உருவாக்கக் களம். சாதியற்ற, பாலின பேதமற்ற தமிழ்ச் சமூகம் அதுவே இலக்கு என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் வாசகம். சாதியற்ற பொதுவெளியைக் கட்டுவதே இதன் முகாமையான நோக்கம்.
திரு.ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்ட புத்த மதத்தின் சாரம் என்ற புத்தகத்தினை மொழி பெயர்த்தவர் ஓவியா. 'பெண்ணும் ஆணும் ஒண்ணு', 'கருஞ்சட்டைப்பெண்கள்', 'ஆதிப்பெண்ணின் அடிதேடி', 'மதம் மாறச் சொன்னாரா பெரியார்?', 'புதிய குரல் தொகுப்பு', 'மதமும் பெண்களும்' என்னும் பல நூல்களின் ஆசிரியர். ’மதத்திற்கும் அறிவியலுக்குமான போர்’ என்னும் இவரின் மொழிபெயர்ப்பு நூல் வெளிவர இருக்கிறது. சிந்தனையாளன், உண்மை, காலச்சுவடு, கைத்தடி போன்ற ஏராளமான இதழ்களில், மலர்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. கருத்துரையாளராக, எழுத்தாளராக ஊடகத் தளத்தில் இயங்கி வருகிறார். 22 ஆண்டுகள் ஒன்றிய அரசுப் பணியாளராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பணி புரிந்தவர். தற்சமயம் கம்பெனி செகரட்டிரியாக சென்னையில் சொந்தத் தொழில் செய்து வருகின்றார். பல தனியார் நிறுவனங்களுக்கும் பணியாற்றுகிறார்.