பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பெரியார்
சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பாக 'திராவிடப் பொழில்' என்ற தலைப்புடன் காலாண்டு இதழாக வெளிவருவது
கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு பல்கலைக்கழகத்தினைக் கல்லூரியிலிருந்து பிரித்துத் தனித்துக் காட்டுவது அதன் ஆராய்ச்சித்
தளமேயாகும்.
ஆய்வுகளுக்கான மிகப் பெரிய கூடம்தான் பல்கலைக்கழகம்; எனவேதான் பெரியார் மணியம்மை அறிவியல்
தொழில் நுட்ப நிறுவனத்தின் அடையாளக் (Logo) குறிச்சொற்களான சிந்தனை - புத்தாக்கம் - முழுமையான
மாற்றம் (Think, Innovate, Transform) என்பதற்கொப்ப ஆய்வுகள் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவோடு,
வளர்ச்சியடையச் செய்து, முழுமையான ஆக்கப்பூர்வ புத்தாக்க மாற்றமாக்கிடவும், பல்கலைக்கழகங்களின்
ஆய்வுகள் செயல் ஊக்கிகளாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்திற்குரிய செயல் வடிவமே இத்தகைய சிறப்பான
முயற்சிகள். தக்க ஆய்வு நிலை அறிஞர்கள் உள்நாட்டு, வெளிநாட்டுக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்
பலரும் இதன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று, தங்களது பங்களிப்பைத் தர முன் வந்திருப்பது,
ஊருணிநீர் - பேரறிவாளர் திரு போல பலருக்குப் பயன்படுவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைவதாகும்!
திராவிடப் பொழில் என்பது பொருத்தமானது
உலகின் மிகப் பெரிய பண்பாடு, நாகரிகம் என்பது புதைப் பொருள் ஆய்வு மூலம் பலருக்கும் தெரியவருவது
போல, தொட்டனைத் தூறும் ஊற்றாக 'திராவிடப் பொழில்', மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அறிவு
வேட்கையாளர்களுக்கும் பெரியதொரு அறிவு விருந்தாக அமையக் கூடும்.
'திராவிடம் என்பது ஒரு பொதுச் சொல் ஆட்சி' என்ற தலைப்பில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக்கம்
எழுதிய டாக்டர் கால்டுவெல்,
"... நான் மேற்கொண்ட சொல் திராவிடம் என்பது. இறுதியாக, என்னால் காணக்கூடிய தகுதி மிக்க சொல்
இதுவே என்றாலும், இதுவும் கவர் பொருள் உடையதே என்று நானே ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழ் என்ற
சொல்லைப் போலவே, இதுவும் வரையறுக்கப்பட்ட பொருள் நிலையிலேயே ஒரு காலத்தில் ஆளப்பட்டிருந்தது,
இன்றும் ஆளப்படுகிறது என்றாலும், தென்னாட்டு மக்களையும், மொழியையும் குறிக்கும் சொல்லாக
சமஸ்கிருத மொழி நூல் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட சொல் இதுவே. ஆகவே, இச்சொல்லின் தகுதிப்பாடுபற்றி
எனக்கு அய்யம் இல்லை.
"பின்வரும், பவுண்ட்ரீகர், ஒட்டரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பாரதர், பக்லவர்,
சீனர், கிராதர், தரகர், கஸர் என்ற ஷத்திரிய இனத்தவர், சிறிது சிறிதாக வேத உரிமைகளை இழந்தும்,
பிராமணர்களின் தொடர்பை இழந்தும், விஷாலர் என அழைக்கப் பெறும் இழிந்த இனத்தவராகி விட்டனர்''
என்று மநு கூறுகிறார். ஈண்டுக் குறிப்பிடப்பட்ட இனத்தவருள், தென்னிந்திய இனத்தைச் சேர்ந்த ஒரே
இனத்தவர் திராவிடரே. ஆகவே, இச்சொல் தென்னிந்திய மக்கள் அனைவரையும் குறிப்பிடுவதாகவே
தோன்றுகிறது. மகாபாரதத்திலும் இதுவே கூறப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட க்ஷத்திரிய இனங்களாக இரண்டு
பட்டியலில் கூறப்பட்டவருள், தென்னிந்திய இனத்தவராகக் கூறப்பட்டவர், திராவிட இனத்தவர் ஒருவரே.
அக்காலத்தில், பாண்டியர் சோழர் போன்ற தனி இனப்பெயர்கள், வட இந்தியாவில் தெளிவாக
உணரப்பட்டிருந்தன என்பதை நினைப்பில் வைத்து நோக்கினால், திராவிடம் என்ற சொல். பொது நிலையிலேயே
ஆளப்பட்டது என்பது உறுதி செய்யப்படும். பாகவத புராணத்தில் சத்ய விரதன் என்பவன், இப் பொருளிலேயே,
திராவிடத் தலைவன் என்று அய்யத்திற்கு இடம் இன்றி அழைக்கப் பெற்றுள்ளான்.
இதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த, மொழி நூல் பயிற்சியில் தெளிந்த அறிவு வாய்ந்த
ஆசிரியர்கள், அச்சொல், எப்பொருளில் வழங்குதல் வேண்டும் என்று நான் எண்ணுகின்றேனோ, அப்பொருளிலேயே
ஆண்டுள்ளனர். அவர்களால், சிறிய அல்லது சிறிதே அறியப்பட்ட பிராகிருத மொழி வரிசையில் திராவிடம்
வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் ஒருவர், திராவிடம் ஒரு விபாஷா'' என்று
கூறியுள்ளார். தமிழ்மொழி ஒன்று மட்டுமோ, பிற தென்னிந்திய மொழிகளில் தனி எம்மொழி மட்டுமோ
அல்லாமல், திராவிட மொழிகள் அனைத்துமே ஒரே மொழியாக அமைந்திருந்தனவாக, வட இந்திய எழுத்தாளர்களால்
கருதப்பட்டுள்ளன என்பதை நாம் உணரலாம் என்பது உறுதி. பிராமண மொழி நூல் ஆசிரியர்களின்
வெறுப்புக்கு உள்ளாகிய காரணத்தால், பிசாச்சி மொழி எனப் பெயர் இட்டு இழித்து உரைக்கப்படும் மொழி
வரிசையில் திராவிடமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பெருந்தகுதி வாய்ந்த சொல்லாகிய திராவிடம், நம்முடைய காலம் வரையிலும் கூட, வட இந்திய மொழி நூல்
ஆசிரியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 1854இல் வாழ்ந்திருந்த, இந்திய மொழி நூல் வல்லுநரான, பாபு
ராஜேந்திரலால் மித்ரா அவர்கள், சவுராசெனி என்ற மொழிக்கு நிகரான மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்டதும்,
அதைப் போலவே, இந்திய மொழிகள் பலவற்றின் தாய்மொழியாம் தகுதியுடையதுமான 'திராவிடி' என்ற மொழி
பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, திராவிடம் என்ற சொல், தமிழ் என்ற சொல்லைப் போலவே,
வரையறுக்கப்பட்ட பொருளைச் சில இடங்களில் குறிக்கும் என்றாலும், பொதுச் சொல்லாக வழங்கும்
உரிமையும் பெற்றுள்ளது என்பது காணப்படுகிறது. (பக்கம் 9-11)
புரட்சிக் கவிஞர் சிறந்த தமிழ் அறிஞர். இலக்கண இலக்கியத்துறையின் கற்றுத் துறை போகிய
ஆய்வறிஞரும்கூட! அவர் நடத்திய 'குயில்' இதழில் (குரல்:1, இசை:7, 15.7.1958 நாளிட்ட இதழ்)
திராவிடம்' என்ற தலைப்பில் எழுதிய விளக்கக் கவிதை தெளிவினைத் தரும் ஒரு கலங்கரை வெளிச்சம்
ஆகும். திராவிடம்
இது தமிழம்' என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில்
என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
"பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்"
- குயில் (15-07-1958)
எனவே, தமிழ் - திராவிடம் என்ற சிற்சிலரின் குழப்பமும், குதர்க்கமும் இதன்மூலம் தீரும். எனவே
'திராவிடப் பொழில்' அருமையான பெயர்! - வரலாற்றுப் புலமும் பெருமையான வழிவழி மதிப்பும் குன்றாது
நிலைத்ததினால்தான்.
பேராசிரியர் டாக்டர் கில்பர்ட் சிலேட்டர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1915இல் இந்தியப்
பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, ஆக்ஸ்போர்டு விருது பெற்றவராவார். அவர்
1923-இல் எழுதிய நூலின் தலைப்பு ‘The Dravidian Element in Indian Culture' என்றே
குறிப்பிட்டிருப்பதால் இதன் பண்பாட்டுப் பின்னணி - பின்புலம் ஆழமானது என்பது விளங்கும். அது
மட்டுமா?
திராவிட நாகரிகம் சிந்துவெளியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறப்பாக இருந்ததைப்பற்றி,
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வந்து உரையாற்றினார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஈராசுப்
பாதிரியார். திராவிட நாகரிகம் பற்றி ஈராசுப் பாதிரியாரின் கூற்றை, அந்நாளில் அண்ணாமலைப்
பல்கலைக்கழக மாணவராகவும், பின்னாளில் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராகவுமிருந்த நாவலர் டாக்டர்
இரா.நெடுஞ்செழியன் அவர்கள், தாம் எழுதிய திராவிட இயக்க வரலாறு' (முதல் தொகுதி, பக்கம்
101-102) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். திராவிட நாகரிகம் பற்றி ஈராசுப் பாதிரியார்
ஸ்பெயின் நாட்டிலிருந்து, கிருத்தவச் சமயத் தொண்டு ஆற்றவும், வரலாற்று ஆராய்ச்சிப் பணியை
மேற்கொள்ளவும் இந்தியாவிற்குக் குறிப்பாகத் தமிழகத்திற்கு வருகை தந்த திருமிகு ஈராசுப்
பாதிரியார் அவர்கள், நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆனர்ஸ் வகுப்பில் பயின்று
கொண்டிருந்தபோது, சிந்துவெளி நாகரிகம் பற்றிச் சில நாட்கள் தொடர் சொற்பொழிவாற்றினார். அவர்
சொற்பொழிவாற்றும் போது, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகந்தான் என்றும், அங்குள்ள
முத்திரைகளும் எழுத்துக்களும் தமிழின் தொன் முது நிலையைக் தெளிவுபடுத்துவனவாகும் என்றும்,
சிந்து வெளி திராவிட நாகரிகந்தான் மெசப்பொடேமியா, அரேபியா, எகிப்து, பாபிலோனியா. கீரீஸ், உரோம்
நாடுகளைக் கடந்து, தாம் பிறந்த ஸ்பெயின் நாட்டிற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றது
என்றும் காரண காரிய விளக்கங்களோடு தெளிவுபடுத்திக் காட்டினார். அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து
நான் அரிய குறிப்புக்கள் பலவற்றைக் குறித்துக் கொண்டேன்.ஒ
ஈராசு பாதிரியார் அவர்கள், இறுதி நாளன்று, தமது சொற்பொழிவை முடிக்கும்போது, இதுகாறும்
உங்களிடத்தில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தது, பாதிரியார் ஈராசு அல்ல; ஸ்பெயின்
நாட்டிலிருந்து வந்துள்ள ஒரு திராவிடனே ஆகும்" என்று அழகாகவும், அருமையாகவும் குறிப்பிட்டார்.
அப்பொழுது மண்டபத்தில் குழுமியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அத்துணைப் பேர்களும்
பெருத்தக் கையொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
மறுநாள், நான் அவர் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்கு சென்று, அவரை நேரில் கண்டு, தாங்கள்
நேற்று சொற்பொழிவை முடிக்கும் போது சொன்ன சொற்றொடரை, அப்படியே எழுதிக்,
கையொப்பமிட்டுத்தாருங்கள்!" என்று அன்போடு கேட்டுச், சங்க இலக்கிய தொகுப்பு நூல் ஒன்றினை
அவரிடம் நீட்டினேன். அவர் பெரிதும் மகிழ்வு கொண்டு, அந்த நூலின் முகப்புப் பக்கத்தில், கீழே
கையொப்பம் இட்டுள்ள நான், ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ள ஒரு திராவிடன் (I, the undersigned
am a Dravidianfrom Spain) என்று எழுதிக், கையொப்பமிட்டுத் தந்தார். தாமும், திராவிட
நாகரிகத்தின் வழிவழி வந்த ஒரு வழித் தோன்றலே என்பதை உறுதிப்படுத்தவே, அவர் அவ்வாறு எழுதிக்
கையொப்பமிட்டுத் தந்தார்.
இப்படி, மொழி, பண்பாடு, நாகரிகம், தத்துவங்கள் எல்லாவற்றிலும் ஒரு பழமையான செம்மொழி வளமும்,
வரலாற்றுப் பொருண்மையும் படைத்த ஒரு சிறப்பு மிகுந்த சொல் திராவிடம் என்பதால், அதன் பொழிலை நமது
(நிகர்நிலை) பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் தேர்வு செய்தது மிகவும் சாலச்
சிறந்தது!
இப்படி, மொழி, பண்பாடு, நாகரிகம், தத்துவங்கள் எல்லாவற்றிலும் ஒரு பழமையான செம்மொழி வளமும்,
வரலாற்றுப் பொருண்மையும் படைத்த ஒரு சிறப்பு மிகுந்த சொல் திராவிடம் என்பதால், அதன் பொழிலை நமது
(நிகர்நிலை) பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் தேர்வு செய்தது மிகவும் சாலச்
சிறந்தது!
திராவிடக் கருதுகோளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த இடைவெளியைத் தான் தங்களின் முக்கிய வாதமாய்
முன்வைக்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே, திராவிடக் கருதுகோளில் நம்பிக்கைக் கொண்டிருக்கும்
அய்ராவதம் மகாதேவன் கூட ஒரு காலகட்டத்தில் இவ்விடைவெளியைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
வட மற்றும் நடு திராவிட மொழிகளைப் பேசும் பழங்குடியினர் நிலவியல் அடிப்படையில் சிந்துவெளி
நாகரிகத்திற்கு (ஒப்பீட்டு நிலையில்) அருகில் இருந்தாலும், பண்பாட்டு வளர்ச்சி நிலையில் அதன்
உன்னத்திலிருந்து துருவ வேறுபாட்டுடன் விலகி நிற்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவின்
தென்கோடியில், தொன்ம மரபுகளோடு செழித்த சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு, சிந்துவெளிப் பண்பாட்டோடு
நெருக்கம் காட்டுகிறது. இந்த முரண்பாட்டைப் புதிய தரவுகளின் துணைகொண்டு நேர் செய்யமுடியுமா
என்பதே இந்தியாவில் எதிர்நோக்கும் மிகப்பெரிய வினாக்குறி என்று தெளிவுபடுத்துகிறார்.
அதற்கெல்லாம் திராவிடப் பொழில் ஆய்விதழில் தங்களது ஆய்வுப் புலமையோடு தக்க விடைகாண இது ஓர்
புதிய, அரிய வாய்ப்பாக அமையும் என்ற நன்னம்பிக்கையோடு இதனை வாழ்த்துகிறேன்.
ஆய்வுகள் விருப்பு வெறுப்பற்ற அறிவியல் பூர்வ ஆய்வாக சரியான தரவுகளோடு புதுவெளிச்சத்தைப்
பாய்ச்சக் கூடியதாக அமையும்; அமைய வேண்டும்.
திராவிட நல் திருநாடும்' என்று தமிழ்நாடு மொழி வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரனாரால் எழுதப்பட்ட
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்..." பாட்டில் இடம் பெறுகிறது. இந்திய நாட்டுப்
பண்ணாக அரசு விழாக்களில் பயன்படுத்தப்படும் பெருங்கவிஞர் நோபல் பரிசு பெற்ற, வங்கத்து டாக்டர்
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமண' என்ற கவிதையில் திராவிட உத்கலவங்கா' என்ற வரிகளில்
திராவிடம் சிறப்பான இடத்தைப் பெறுவதோடு, இன்றும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும்
தனித் தகுதி பெற்றதாக உள்ளது.
ஒரு பொது அரசு நிகழ்ச்சியில் முதலிலும், முற்றாக நிகழ்ச்சிமுடிவிலும் இரு முறை மரியாதை பெறக்
கூடிய தனிப் பெருமை பெற்ற திராவிடம்', பொழிலாக வந்து, கருத்தியியலில் ஒரு 'பசுமைப் புரட்சி'
பொழிந்து, அறிஞர்களின் கருத்து விருந்தோம்பும் அறிவுப் பசிக்கு அறுசுவை உண்டியாக அமைவதற்குப்
பொறுப்பேற்று உழைக்கும் அறிஞர் பெருமக்களுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் பதிப்புக்
குழுவினருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் பொழிக! பொழிக!! புகழோடு பொழிக!!
வழிக வழிக வாய்மை வழிக!
- கி. வீரமணி,
வேந்தர்,
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
தரவுகள்:
-
1. டாக்டர் கால்டுவெல் - 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'
-
2. பாவேந்தர் பாரதிதாசன் - 'வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?'
-
3. கில்பர்ட் சிலேட்டர் - 'The Dravidian Element in Indian Culture.'
-
4. டாக்டர் இரா. நெடுஞ்செழியன் - 'திராவிட இயக்க வரலாறு!'
-
5. ஆர். பாலகிருஷ்ணன் - சிந்துவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்.